search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியப்பியா
    X
    சத்தியப்பியா

    4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகை கொள்ளை- உறவுக்கார பெண் கைது

    கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
    ராமநத்தம்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 49). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஆதிமூலத்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் 11-ந் தேதி தந்தையை அழைத்து கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது தொழுதூர் பஸ் நிறுத்தத்தில் உறவுக்கார பெண்ணான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காட்டை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்தியப்பிரியா(26) நின்றிருந்தார்.

    இவரை கண்ட கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார். உடனே அவர், சத்தியப்பிரியாவிடம் எதற்காக இங்கே நிற்கிறாய் என்று கேட்டார். அதற்கு சத்தியப்பிரியா, மங்களூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக வெகுநேரமாக காத்திருப்பதாகவும், லக்கூர் அருகில் மங்களூர் இருப்பதால் தன்னையும் ஆட்டோவில் அழைத்துச்செல்லுமாறு கூறினார். உடனே அவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த தனது உறவினர்களிடம் நலம் விசாரித்த சத்தியப்பிரியா, இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கி விட்டு காலையில் சொந்த ஊருக்கு செல்கிறேன் என்று கூறினார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதற்கிடையில் வேலை சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்று விட்டார்.

    வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாத்தி (40), மகள்கள் கீர்த்திகா(20), மோனிகா(18) ஆகியோரிடம் சத்தியப்பிரியா எனக்கு நர்சு ஒருவரிடம் பழக்கம் உண்டு. அவர் மூலம் ஊசி போட கற்றுக்கொண்டேன்.

    தற்போது தன்னிடம் கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் கொரோனா நோய் வராது என்று கூறினார். இது உண்மை என்று நம்பிய 3 பேரும் கொரோனா தடுப்பூசி போட ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராஜாத்தி உள்ளிட்ட 3 பேருக்கும் சத்தியப்பிரியா ஊசி போட்டார். சில நிமிடங்களில் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மனைவி, மகள்கள் மயங்கி கிடப்பது குறித்து சத்தியப்பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 3 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளேன். இதனால் அவர்கள் தூங்கி விட்டனர். காலையில் சரியாகிவிடும், பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்திக்கும் ஊசி செலுத்தியதால் அவரும் மயங்கி விழுந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோர் கழுத்தில் கிடந்த நகைகளை காணவில்லை. வீட்டில் இருந்த சத்தியப்பிரியாவும் இல்லை.

    அதன்பின்னர் தான் கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, மயக்க ஊசி செலுத்தி ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோரிடம் இருந்த 30 பவுன் நகையை சத்தியப்பிரியா கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்களூருவில் இருந்த சத்தியப்பிரியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 பவுன் நகை மீட்கப்பட்டது. அவர் எதற்காக நகையை கொள்ளையடித்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×