என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் கடலூர் நகரில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், வருமானத்திற்கு அதிகமாக பணம் வைத்திருப்பதாகவும், தேர்தலையொட்டி அதனை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாகவும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

    அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கடலூர் அதிகாரிகளுடன் இணைந்து 6 குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 10.30 மணி அளவில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள ஜெயலலிதா பேரவை பொருளாளர் மதியழகன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன், புதுப்பாளையத்தில் உள்ள வக்கீல் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுரேஷ், நிர்வாகி சரவணன் ஆகியோர் வீடுகளுக்குள் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வீடுகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை பூட்டினர்.

    பின்னர் வீடுகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    மேலும் வக்கீல் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனை நேற்று மாலை 6 மணி வரை நடந்தது. இதில் பணம், ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஆவணங்களும் சிக்கவில்லை.

    இருப்பினும் கடலூரில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    திமுக கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் அப்துல் ரகுமான் களம் காண்கிறார். அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் கே.ஏ. பாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.
    சொத்து மதிப்பு

    கே.ஏ. பாண்டியன்

    1. கையிருப்பு- ஒரு லட்சம் ரூபாய்
    2. அசையும் சொத்து- ரூ. 63,03,722.71
    3. அசையா சொத்து- ரூ, 1,21,50,000

    அப்துல் ரகுமான்

    1. கையிருப்பு- ரூ. 15,000
    2. அசையும் சொத்து- ரூ. 26,874
    3. அசையா சொத்து- ரூ. 32,00,000

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலாவனப்பகுதி, பரங்கிப்பேட்டை பாபா கோவில் அடங்கிய சுற்றுலா தலமாக சிதம்பரம் தொகுதி திகழ்கிறது. இந்த பகுதியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழுகின்றனர்.

    சிதம்பரம் தொகுதி

    சிதம்பரம் தொகுதியில் ஏற்கனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றிய முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, மற்றும் கிள்ளை பேரூராட்சிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதையும், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளையும் உள்ளடக்கி இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம் தொகுதி

    சிதம்பரம் தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள், மீனவர்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக உள்ளது.

    சிதம்பரம் சட்டசபை தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், தா.மா.க. 1 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 முறையும் வென்றுள்ளது. 

    சிதம்பரம் தொகுதி

    சிதம்பரம் தொகுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், நடராஜர் ஆலயமும், பிச்சாவரம் சுற்றுலா மையமும் பிரதானமாக விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர்.

    சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பெராம்பட்டு- திட்டுகாட்டூர் இடையே ரூ.20 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளது. 

    சிதம்பரம் தொகுதி

    தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.19.50 கோடி நிதி ஒதுக்கி மேற்கண்ட பெராம்பட்டு &திட்டுகாட்டூர் கிராமங்களை இணைக்கும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் வேலை தற்போது நடைப்பெற்று வருகின்றது.

    மேலும் சிதம்பரம் பகுதி வேளாண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில் திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பணை அமைப்பதற்கு நில அளவை பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம் தொகுதி

    சிதம்பரம் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் அகரநல்லூர் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பில் கனிம வள நிதியில் இருந்து தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதைபோல் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் ரூ.15 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    சிதம்பரம் தொகுதி பிச்சாவரம் கிராமத்தில் கடல் நீர் உட்புகுதலை தடுக்க உப்பனார் வடிகாலின் குறுக்கே கடைமடையில் ரூ.15 கோடி மதிப்பில் ஒழுங்கியம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.

    சிதம்பரம் பகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றபட்ட போதிலும் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாதததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தொகுதியாக திகழ்கிறது. எனவே அந்த பகுதியில் தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாக்காளர்கள் 

    மொத்தம்- 2,50,735
    ஆண்கள்- 1,22,800
    பெண்கள்- 1,27,913
    திருநங்கைகள்- 22

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    சிதம்பரம் தொகுதி
    சிதம்பரம் தொகுதி

    1962 சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
    1967 ஆர்.கனகசபை பிள்ளை (இந்திய தேசிய காங்கிரஸ்)
    1971 பொன்.சொக்கலிங்கம் (தி.மு.க.)
    1977 துரை.கலியமூர்த்தி (தி.மு.க.)
    1980 கே.ஆர்.கணபதி (அ.தி.மு.க.)
    1984 கே.ஆர்.கணபதி (அ.தி.மு.க.)
    1989 துரை.கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)
    1991- கே.எஸ்.அழகிரி (இந்திய தேசிய காங்கிரஸ்))
    1996 கே.எஸ்.அழகிரி (த.மா.கா.)
    2001 துரை. கி.சரவணன் (தி.மு.க.)
    2006 ஏ.அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.)
    2011 கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ.)
    2016 கே.ஏ. பாண்டியன் (அ.தி.மு.க.)
    விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியகண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று விட்டார். கோபிநாத் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோ பூட்டை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    நேற்று காலை கோபிநாத் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பீரோவை பார்த்தபோது, அதில் இருந்தரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விவசாயி சின்னத்துக்கு ஓட்டு நீங்கள் போடுங்கள் உங்கள் நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சீமான் கூறினார்.
    கடலூர்:

    கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், சரத்குமார், கார்த்திக் ஆகியோரது கட்சிகளுக்கு தமிழகத்தில் குத்தப்பட்ட முத்திரை என் மீதும் விழக்கூடாது என்பதற்காகவே சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த நான் கடந்த தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்டேன். அப்போது நான் தோற்கவில்லை மக்கள்தான் தோற்றார்கள்.

    தற்போது சென்னையில் போட்டியிடுகிறேன். அனைவரும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழர் மட்டும் ஏன் தனித்து போட்டியிடுகிறது என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

    மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்பதால் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகிறோம். வாழ்கின்ற பூமிக்கு அரசியல் செய்யாமல் வணங்குகின்ற சாமிக்கு அரசியல் செய்கின்ற கூட்டம் உருவாகியுள்ளது‌.

    மண்ணை காப்பாற்ற அரசியல் செய்யாமல் ஒற்றை உயிரினமான மனிதர்களை காப்பாற்ற அரசியல் உருவாக்கப்படவில்லை. அனைத்தையும் சரி செய்ய ஒன்று மட்டுமே உள்ளது. விவசாயி சின்னத்திற்கு உங்கள் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி சின்னத்துக்கு ஓட்டு நீங்கள் போடுங்கள் உங்கள் நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னம் ஏழைகளின் சின்னம் என கூறுவார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு ஏழை எளியவரின் சின்னம் 2-ம் பணக்காரர்கள் சின்னமாக இருக்கிறது. உண்மையிலேயே ஏழைகளின் சின்னம் விவசாயிகள் சின்னம் மட்டுமே எனவே மக்களாகிய ஏழை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    கடலூர் முதுநகரில் தாய்-மகளை கொலை செய்த வழக்கில் மீனவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள சலங்கக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூங்கொடி (வயது 45). இவர்களது மகள் மீனாவிற்கும் (28), சோனங்குப்பத்தை சேர்ந்த மீ்ன்பிடி தொழிலாளியான நம்புராஜ்(36) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வாய் பேச முடியாத காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளியான நம்புராஜூக்கு, மீனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனா குழந்தைகளுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு கடலூர் முதுநகர் பென்சனர் லைன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    நேற்று முன்தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்ட 2-வது குழந்தையை மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் முதுநகரில் உள்ள ஒரு டாக்டரிடம் காண்பிப்பதற்காக தூக்கிச் சென்றனர். சஞ்சீவிராயன்கோவில் தெரு வழியாக சென்றபோது, பின்னால் வந்த நம்புராஜ், மீனாவையும், பூங்கொடியையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நம்புராஜ் சிவானந்தபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கடலூர் முதுநகர் போலீசாருக்கு நேற்றுமாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நம்புராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ராதாகிருஷ்ணன்(36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 289 பேர் பலியான நிலையில் 24 ஆயிரத்து 931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 939 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 190 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.
    கடலூரில் நடுரோட்டில் தனது மனைவி, மாமியாரை மீனவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சலங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜிக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று குழந்தை ஜான்சிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் மருத்துவமனைக்கு செல்ல முடிவுசெய்தனர். அதன்படி இருவரும், நேற்று மாலை 6.30 மணி அளவில் குழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றனர்.

    கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா அவரை தடுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் கழுத்திலும் குத்தினார்.

    இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

    உடனே நம்புராஜ், தனது குழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பூங்கொடி, மீனா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை தேடி வருகின்றனர்.
    தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    அண்ணாமலைநகர்:

    கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிதம்பரத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. இதற்கு சப்- கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிதம்பரம் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட இந்த மாரத்தான் போட்டி நான்கு முக்கிய வீதிகள், பஸ் நிலையம், காந்தி சிலை வழியாக சென்று அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் முடிவடைந்தது.

    இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் செந்தில்வேலன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபேகம், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    9 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 3001 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 19-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    இந்நிலையில் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யவில்லை.

    இதற்கிடையில் 3001 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை 14 ஆயிரத்து 404 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான முதல் கட்ட பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடந்தது.

    அவர்களுக்கு பணி ஒதுக்கீட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். ஒதுக்கீட்டின் அடிப்ப டையில், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட. சட்டமன்ற தொகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பிறகு அவர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    தஞ்சாவூர் சீதா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 31). இவர் பண்ருட்டியில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். சூர்யா தனது மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டார். ஆண்டிப்பாளையம் மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து சூர்யா தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சூர்யா சிக்கினார். 

    இதில் தலையில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடலூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    வடலூர் அருகே உள்ள பாச்சாரப்பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவருடைய மகள் சங்கரி(வயது 16). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரி நேற்று வீட்டில் வேலை செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த சங்கிரி, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைபார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கரியை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. தலா 3 முறையும், தே.மு.தி.க. 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 72,902 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.

    இதனை தொடர்ந்து விருத்தாசலம் தொகுதியை தே.மு.தி.க.வினர் தங்களுக்கு பாதுகாப்பான தொகுதியாக கருதினர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

    இந்த தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் பிரேமலதா போட்டியிடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. தற்போது விலகி உள்ளது. எனவே, இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

    அ.ம.மு.க. சார்பில் விருத்தாசலம் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இதற்கிடையில் நேற்று தே.மு.தி.க- அ.ம.மு.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் இந்த தொகுதியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார்.

    விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

    பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.

    ×