என் மலர்tooltip icon

    கடலூர்

    கடும் வெயில் வறுத்து எடுப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதோடு பாசன வசதிக்கும் இந்த ஏரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜுன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணைக்கு தண்ணீர் வந்ததால் அந்த அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஏரியின் உச்ச நீர்மட்டமான 47.50 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பொதுப்பணித்துறையினர் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கடலுக்கு அனுப்பினர். முழுவதையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றினர்.

    மேலும் வீராணம் ஏரிக்கரைச் சாலையில் காட்டு மன்னார்கோவில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்கும் வகையிலும், ஏரியின் உள்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் நோக்கிலும் கடந்த 2 மாதங்களாக ஏரிக்கு தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறையினர் முற்றிலும் நிறுத்தினர். இதனால் ஏரியில் மழைக் காலத்தில் தேக்கப்பட்ட தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது கடும் வெயில் வறுத்து எடுப்பதால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 39.53 அடியாக உள்ளது.

    ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் தற்போது 54 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.

    நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் வீ்ட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி 26-வது வட்டம் ராஜாஜி சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ராஜேந்திரனை அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் மற்றும் பட்டுப்புடவைகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மக்கள் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
    நெய்வேலி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் மாவட்ட அ.ம.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக உருவாகி உள்ளது. தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வையும், நம்பிக்கை துரோகம் செய்த பழனிசாமி கூட்டணியையும் எதிர்த்து போட்டியிட உள்ளோம். மக்கள் ஆதரவுடன் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும். தி.மு.க. ஐபேக் நிறுவனத்தை நம்பி உள்ளது. பழனிசாமி பணமூட்டையை நம்பி உள்ளார். எதிர்க்கட்சியினர் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஏமாற்றத்தை தரவேண்டும். பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை புரிய வைக்க வேண்டும்.

    அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளோம். அதற்காக விவசாயம் மற்றும் தொழில் சார்ந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருவோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்கி தருவோம். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த 60 நாட்களில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும். மாவட்டத்திற்கு ஒரு தொழிற்பேட்டை உருவாக்கப்படும். நெய்வேலியில் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, வடக்குத்து ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். என்.எல்.சி. தனியார் மயமாவதை தடுத்து நிறுத்துவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சியை பிடிக்க அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்ளை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மாவட்டத்தில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் நெய்வேலி பக்தரட்சகன், குறிஞ்சிப்பாடி வசந்தகுமார், புவனகிரி பாலமுருகன், சிதம்பரம் நந்தினி தேவி, காட்டுமன்னார்கோவில் நாராயணமூர்த்தி, திட்டக்குடி வசந்தவேல், கூட்டணி கட்சியான தே.மு.தி.க வேட்பாளர்கள் பண்ருட்டி சிவக்கொழுந்து, கடலூர் ஞானபண்டிதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து குக்கர் மற்றும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனால் வாரசந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நகர நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வட்டங்களில் அதிகாரிகள், என்ஜினீயர்கள், பணியாளர்கள் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களின் நலன் கருதி என்.எல்.சி. நிர்வாகம் வட்டம்-3, 13, 28 ஆகிய இடங்களில் சந்தைகள் அமைத்துள்ளது. இந்த சந்தைகள் வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயங்கும்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனால் வாரசந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து என்.எல்.சி. நகர நிர்வாகம் வார சந்தைகளை மூடியது. தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாரசந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன.

    தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் என்.எல்.சி. நிறுவன நகர நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வாரசந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்களின் வசதிக்காக 6 இடங்களில் சமூக இடைவெளி, கட்டுபாடுகளுடன் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 288 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 973 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 124 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
    விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் விருத்தாசலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் திரு.வி.க. நகர் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் சென்று முஸ்லிம்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் விருத்தாசலம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். 

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது தே.மு.தி.க., அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    பண்ருட்டி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். இதை பார்த்த ராஜேந்திரன், சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவர் சிறுமியின் கன்னத்தில் அடித்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பண்ருட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்
    வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள சிறுகரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் ராஜசேகர் (வயது 14). வேப்பூர் அருகே அடரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ராஜசேகர் நேற்று முன்தினம் தனது பாட்டி வெள்ளையம்மாளுடன், அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றார். அப்போது வெள்ளையம்மாள், மாணவன் ராஜசேகரின் இடுப்பில் தனது புடவையால் கட்டி விட்டு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். 

    இதில் திடீரென, அவனது இடுப்பில் கட்டி இருந்த புடவை அவிழ்ந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராஜசேகர் நீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளையம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராஜசேகரை மீட்க முயன்றார். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் ராஜசேகரை பிணமாக மீட்டனர். 

    இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணாலைநகர் அருகே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அண்ணாலைநகர்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக மாணவ-மாணவிகள் அறவழிபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 22-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    மு.க.ஸ்டாலின் பொய்யை மூலதனமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.
    கடலூர்:

    விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.' என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான். வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். விவசாய நிலங்களை பிடுங்க கூடாது என்பதற்காக சட்டம் போட்டவர்கள் நாங்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு, பொய் பிரசாரங்களை செய்து, மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின்.

    காவிரி நதிநீர் பிரச்சினை வருவதற்கு காரணம் கருணாநிதி. ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்று விவசாயிகளின் உரிமையை பெற்று தந்தார். அப்போது எல்லாம் விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஸ்டாலின், இப்போது விவசாயிகளை பற்றி பரிந்து பேசுகிறார். அதிகாரத்தில் இருக்கும்போது நல்லது செய்ய வேண்டும் அதனால்தான் நாங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தோம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பெற்று தந்தோம். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குடும்பம்தான் பிரதானம். மக்கள் அவரது கண்ணுக்கு தெரியமாட்டார்கள்.

    விவசாயிகளுக்கு என்ன வேண்டுமோ அதை எங்கள் அரசு பார்த்துப் பார்த்து செய்து வருகின்றது. உடலுக்கு எவ்வாறு உயிர் முக்கியமோ, அதேபோல விவசாயத்திற்கு நீர் முக்கியம். அதைப் பெற்றுத்தருவதுதான் எங்கள் அரசாங்கத்தின் முதல் கடமை. மு.க.ஸ்டாலின் வாழ்ந்த வாழ்க்கை வேறு, நாம் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இங்குள்ள உங்களைப் போலத்தான் இன்றளவும் நானும் விவசாயம் செய்து வருகின்றேன். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தினால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்.

    வேளாண் சட்டத்தின்படி உதராணத்திற்கு கூறுகின்றேன், நாம் தக்காளி பயிரிடும் போது சந்தையில் விலை ரூ.40 இருக்கும். அதை அறுவடை செய்யும் போது சந்தையில் ரூ.2, ரூ.3-க்கு விற்கப்படும். அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடும் போதே, சந்தை விலைக்கு ஒப்பந்தம் போடப்படும், அறுவடை நேரத்தில் சந்தை விலை குறைந்து இருந்தாலும், ஒப்பந்தம் போடப்பட்ட விலையிலே தக்காளி கொள்முதல் செய்யப்படும்.

    வடநாட்டில் எல்லா பொருளுக்கும் 8.5 சதவீதம் வரி. எல்லாமே சொசைட்டியில் கொடுக்க வேண்டும். அங்கு 3 சதவீதம் உள்ளாட்சி வரி, 3 சதவீதம் சொசைட்டி எடுத்துக்கொள்கிறது. 2.5 சதவீதம் புரோக்கர் கமிஷன் இதையெல்லாம் சேர்த்து, 100 ரூபாய்க்கு தக்காளி விற்கிறது என்றால் ரூ.8.50 வரியாக கட்ட வேண்டும். இது சரியா, இல்லை நாங்கள் கொண்டுவந்தது சரியா? ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய் என்றால் ரூ.85 கொடுக்க வேண்டும் வரியாக. இதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். ஸ்டாலின் ஆதரிக்கின்றார். விவசாயத்தைப்பற்றியே தெரியாது ஸ்டாலின் அவர்களுக்கு.

    7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து, இந்த ஆண்டு மட்டும் 435 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். அப்படி மருத்துவ படிப்பில் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கண்ணீர் மல்க பேசினார்கள். நான் கூலி வேலைக்கு செல்கிறேன், எனது மகள் டாக்டருக்கு படிப்பாள் என்று கனவுகூட நான் காணவில்லை. இடம் கொடுத்து வீட்டீர்கள், ஆனால் கல்லூரிக்கு பணம் கட்ட என்னிடம் பணம் இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.

    நான் சொன்னேன் நீங்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை, அரசாங்கமே உங்கள் மகள் கல்விக் கட்டணத்தை செலுத்தும் என்றேன். அரசின் நடவடிக்கையால் உள் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 650 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சட்டத்தை கொண்டு வர உங்களுக்கு தோன்றியதா. நம்முடைய மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் கே.பாலுவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தன்னை ஒரு ஹீரோ போல நினைத்துக்கொண்டு லைட்டெல்லாம் போட்டு நடந்து வருகிறார். நான் அப்படியெல்லாம் இல்லை. நான் ஒரு சாதாரண விவசாயி. நான் முதல்-அமைச்சராக வருவது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது நான் இருந்தேன். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    நல்ல எண்ணம் இருந்தால் தானே வாய்ப்பு கிடைக்கும். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள், “நல்லது செய்யுங்கள், நல்லது நடக்கும்” என்று. மு.க.ஸ்டாலின் உங்களுடைய எண்ணம் கெட்ட எண்ணம். அதனால் உங்களால் முதல்-அமைச்சராக வரவே முடியாது.

    கருணாநிதி 2 ஆண்டு காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது கூட மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தார்களே தவிர தலைவர் பதவி கொடுக்கவில்லை. அவரது தந்தையே அவரை நம்பாதபோது, மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

    உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. அரசு மீண்டும் அமையும். அப்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுகளைத் தேடிவரும். கேபிள் டி.வி. இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

    கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரத்தில், நெய்வேலி இந்திரா நகரில் பா.ம.க. வேட்பாளர் கோ.ஜெகன், விருத்தாசலம் பாலக்கரையில் விருத்தாசலம் பா.ம.க. வேட்பாளர் ஜே.கார்த்திகேயன், திட்டக்குடி பா.ஜ.க. வேட்பாளர் பெரியசாமி ஆகியோரையும் ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    நெய்வேலி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் பொய்யை மூலதனமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்த நாட்டிலேயே, பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால், மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். மூட்டை, மூட்டையாக பொய்யை அவிழ்த்து விடுகிறார். நான் உழைத்து முதல்-அமைச்சராக ஆகியிருக்கிறேன். ஒரு விவசாயி முதல்-அமைச்சராக இருப்பது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்க முடியவில்லை.

    தி.மு.க.வில் ஒரு குடும்பம்தான் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். அதற்கென அமைக்கப்பட்ட கூட்டணி தி.மு.க. கூட்டணி. இதுதான் நமது கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்குமான வித்தியாசம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    கடலூர்:

    கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சம்பத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது. இந்த தேர்தல் என்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

    கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    மு.க.ஸ்டாலின் இந்த அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த அரசு செயல்படவில்லை என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எதையும் சிந்தித்து பேசுவதில்லை.

    இனி தமிழக மக்கள் அரசிடம் எந்த புகார் மனுவும் கொடுக்க வேண்டியதில்லை. 1100 போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறினாலே அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    கடலூர் நகரம் இனி வெள்ளத்தால் பாதிக்கப்படாது. தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி மின் தடையும் இங்கு ஏற்படாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    தற்போது 39.50 அடி தண்ணீர்தான் உள்ளது. எனவே சென்னைக்கு 9 கன அடி நீர் மட்டுமே வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக வடலூர் அருகே உள்ள பரவனாற்றில் இருந்து 19 கனஅடி நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வாலாஜா ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5. அடி ஆகும். தற்போது ஏரியில் 5 அடி தண்ணீர் உள்ளது. எனவே இந்த தண்ணீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு அந்த நீரை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் செல்லும் குழாயில் இணைத்து மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு 19 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.

    இந்த அளவு படிபடியாக தேவைக்கு ஏற்ப கூட்டப்படும் என்றும் வடலூரில் இருந்து பண்ருட்டிவரை போடப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×