என் மலர்
செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி- நெய்வேலி நகரில் வாரச்சந்தைகள் மூடல்
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் நகர நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வட்டங்களில் அதிகாரிகள், என்ஜினீயர்கள், பணியாளர்கள் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களின் நலன் கருதி என்.எல்.சி. நிர்வாகம் வட்டம்-3, 13, 28 ஆகிய இடங்களில் சந்தைகள் அமைத்துள்ளது. இந்த சந்தைகள் வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயங்கும்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனால் வாரசந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து என்.எல்.சி. நகர நிர்வாகம் வார சந்தைகளை மூடியது. தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாரசந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் என்.எல்.சி. நிறுவன நகர நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வாரசந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்களின் வசதிக்காக 6 இடங்களில் சமூக இடைவெளி, கட்டுபாடுகளுடன் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.






