search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

    மு.க.ஸ்டாலின் பொய்யை மூலதனமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.
    கடலூர்:

    விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.' என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான். வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். விவசாய நிலங்களை பிடுங்க கூடாது என்பதற்காக சட்டம் போட்டவர்கள் நாங்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு, பொய் பிரசாரங்களை செய்து, மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின்.

    காவிரி நதிநீர் பிரச்சினை வருவதற்கு காரணம் கருணாநிதி. ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்று விவசாயிகளின் உரிமையை பெற்று தந்தார். அப்போது எல்லாம் விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஸ்டாலின், இப்போது விவசாயிகளை பற்றி பரிந்து பேசுகிறார். அதிகாரத்தில் இருக்கும்போது நல்லது செய்ய வேண்டும் அதனால்தான் நாங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தோம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பெற்று தந்தோம். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குடும்பம்தான் பிரதானம். மக்கள் அவரது கண்ணுக்கு தெரியமாட்டார்கள்.

    விவசாயிகளுக்கு என்ன வேண்டுமோ அதை எங்கள் அரசு பார்த்துப் பார்த்து செய்து வருகின்றது. உடலுக்கு எவ்வாறு உயிர் முக்கியமோ, அதேபோல விவசாயத்திற்கு நீர் முக்கியம். அதைப் பெற்றுத்தருவதுதான் எங்கள் அரசாங்கத்தின் முதல் கடமை. மு.க.ஸ்டாலின் வாழ்ந்த வாழ்க்கை வேறு, நாம் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இங்குள்ள உங்களைப் போலத்தான் இன்றளவும் நானும் விவசாயம் செய்து வருகின்றேன். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தினால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்.

    வேளாண் சட்டத்தின்படி உதராணத்திற்கு கூறுகின்றேன், நாம் தக்காளி பயிரிடும் போது சந்தையில் விலை ரூ.40 இருக்கும். அதை அறுவடை செய்யும் போது சந்தையில் ரூ.2, ரூ.3-க்கு விற்கப்படும். அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடும் போதே, சந்தை விலைக்கு ஒப்பந்தம் போடப்படும், அறுவடை நேரத்தில் சந்தை விலை குறைந்து இருந்தாலும், ஒப்பந்தம் போடப்பட்ட விலையிலே தக்காளி கொள்முதல் செய்யப்படும்.

    வடநாட்டில் எல்லா பொருளுக்கும் 8.5 சதவீதம் வரி. எல்லாமே சொசைட்டியில் கொடுக்க வேண்டும். அங்கு 3 சதவீதம் உள்ளாட்சி வரி, 3 சதவீதம் சொசைட்டி எடுத்துக்கொள்கிறது. 2.5 சதவீதம் புரோக்கர் கமிஷன் இதையெல்லாம் சேர்த்து, 100 ரூபாய்க்கு தக்காளி விற்கிறது என்றால் ரூ.8.50 வரியாக கட்ட வேண்டும். இது சரியா, இல்லை நாங்கள் கொண்டுவந்தது சரியா? ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய் என்றால் ரூ.85 கொடுக்க வேண்டும் வரியாக. இதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். ஸ்டாலின் ஆதரிக்கின்றார். விவசாயத்தைப்பற்றியே தெரியாது ஸ்டாலின் அவர்களுக்கு.

    7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து, இந்த ஆண்டு மட்டும் 435 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். அப்படி மருத்துவ படிப்பில் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கண்ணீர் மல்க பேசினார்கள். நான் கூலி வேலைக்கு செல்கிறேன், எனது மகள் டாக்டருக்கு படிப்பாள் என்று கனவுகூட நான் காணவில்லை. இடம் கொடுத்து வீட்டீர்கள், ஆனால் கல்லூரிக்கு பணம் கட்ட என்னிடம் பணம் இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.

    நான் சொன்னேன் நீங்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை, அரசாங்கமே உங்கள் மகள் கல்விக் கட்டணத்தை செலுத்தும் என்றேன். அரசின் நடவடிக்கையால் உள் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 650 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சட்டத்தை கொண்டு வர உங்களுக்கு தோன்றியதா. நம்முடைய மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் கே.பாலுவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தன்னை ஒரு ஹீரோ போல நினைத்துக்கொண்டு லைட்டெல்லாம் போட்டு நடந்து வருகிறார். நான் அப்படியெல்லாம் இல்லை. நான் ஒரு சாதாரண விவசாயி. நான் முதல்-அமைச்சராக வருவது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது நான் இருந்தேன். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    நல்ல எண்ணம் இருந்தால் தானே வாய்ப்பு கிடைக்கும். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள், “நல்லது செய்யுங்கள், நல்லது நடக்கும்” என்று. மு.க.ஸ்டாலின் உங்களுடைய எண்ணம் கெட்ட எண்ணம். அதனால் உங்களால் முதல்-அமைச்சராக வரவே முடியாது.

    கருணாநிதி 2 ஆண்டு காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது கூட மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தார்களே தவிர தலைவர் பதவி கொடுக்கவில்லை. அவரது தந்தையே அவரை நம்பாதபோது, மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

    உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. அரசு மீண்டும் அமையும். அப்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுகளைத் தேடிவரும். கேபிள் டி.வி. இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

    கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரத்தில், நெய்வேலி இந்திரா நகரில் பா.ம.க. வேட்பாளர் கோ.ஜெகன், விருத்தாசலம் பாலக்கரையில் விருத்தாசலம் பா.ம.க. வேட்பாளர் ஜே.கார்த்திகேயன், திட்டக்குடி பா.ஜ.க. வேட்பாளர் பெரியசாமி ஆகியோரையும் ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    நெய்வேலி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் பொய்யை மூலதனமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்த நாட்டிலேயே, பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால், மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். மூட்டை, மூட்டையாக பொய்யை அவிழ்த்து விடுகிறார். நான் உழைத்து முதல்-அமைச்சராக ஆகியிருக்கிறேன். ஒரு விவசாயி முதல்-அமைச்சராக இருப்பது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்க முடியவில்லை.

    தி.மு.க.வில் ஒரு குடும்பம்தான் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். அதற்கென அமைக்கப்பட்ட கூட்டணி தி.மு.க. கூட்டணி. இதுதான் நமது கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்குமான வித்தியாசம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×