என் மலர்tooltip icon

    கடலூர்

    வேப்பூர் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே கழுதூர் புறவழிச்சாலையோரமாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காயங்களுடன் அழுகிய நிலையில் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

    இருப்பினும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ?, அவரை யாரேனும் அடித்து கொலை செய்து சாலையோரத்தில் வீசி விட்டு சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தார்.
    புவனகிரி:

    புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் போட்டியிடுகிறார். இவர் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

    அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் நேற்று புவனகிரி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வீரமுடையான்நத்தம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    தொடர்ந்து வேட்பாளர் அருண்மொழிதேவன் பேசுகையில், புவனகிரி தொகுதியில் உங்களை நம்பி போட்டியிடுகிறேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இளஞ்செழியன், முன்னாள் பா.ம.க. மாவட்ட தலைவர் சிட்டி பாபு, ஒன்றிய செயலாளர் சங்கர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வட்டார தலைவர் கலைவாணன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், பேரவை தலைவர் வீரமூர்த்தி, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், ராஜசேகர், வெங்கடராமன் முருகேசன், கோவிந்தராஜ், பிரகாஷ், ராஜேஸ்வரி, வேல்முருகன், ராமலிங்கம், ஜெயவேல், வீராசாமி, இந்திரா, பிருதிவி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விருத்தாசலம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தாா்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று முரசு சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் இவருக்கு ஆதரவாக இவருடைய மகன் விஜயபிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இருப்பு அரசியம்மன் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், செடுத்தான்குப்பம், கிழக்கிருப்பு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு, மேற்கிருப்பு, நாச்சி வெள்ளையன்குப்பம், முடப்புளி, நடியப்பட்டு, பாலக்கொள்ளை, மணக்கொள்ளை, இருளக்குறிச்சி, பழையபட்டினம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று முரசு சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் பேசுகையில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை உடனுக்குடன் தீர்க்கவும், அனைத்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும் முரசு சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஒன்றிய செயலாளர் தங்க பொன் தனசேகர் தலைமையில், தொகுதி பொறுப்பாளர் எ.பி.ராஜ், ஒன்றிய தலைவர் தனஞ்செயன், பொருளாளர் சக்திவேல், மாவட்ட கேப்டன் மன்றம் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் அ.ம.மு.க. வேல்முருகன், தமிழர் விடுதலை புலி பாஸ்கர், தே.மு.தி.க. இளைஞர் அணி யூகின்ராஜ், முருகன், தேவேந்திரன், நிர்வாகிகள் பாலமுருகன், பாஸ்கர், வெற்றிச்செல்வன், ஆலடி பழனிவேல், பிரகாஷ், செல்வராஜ், திருவெங்கடம், மணிகண்டன், கோதண்டம், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    கடலூரில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவள், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், மாணவி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மாணவியின் உறவினர் ஒருவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு, மாணவி கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த டிரைவரான பிரசாந்த் (வயது 21) என்பவரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், உடனே மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய், தனது மகளை புதுப்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற பிரசாந்தை தேடினர். அப்போது புதுப்பாளையத்தில் மாணவியுடன் நின்று கொண்டிருந்த பிரசாந்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    தி.மு.க.வுக்கு வாக்களித்தால் மக்களின் அமைதி போய்விடும் என்று பண்ருட்டி தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இரா.ராஜேந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பண்ருட்டியில் பேசியதாவது:-

    நம்முடைய வெற்றி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் மோசமான வேட்பாளர் இந்த தொகுதியில் நிற்பவர் தான். வியாபாரம் நன்றாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால், இந்த நகரம் நன்றாக வளரவேண்டும் என்றால் ராஜேந்திரனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.

    தப்பித்தவறி நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தால் அவ்வளவுதான், உங்கள் அமைதி எல்லாம் போய்விடும். வணிகர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும். உங்களுடைய குடும்பம், உங்கள் வியாபாரம், உங்களுடைய கடை உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய சொத்து, வீடு எல்லாமே காணாமல் போய்விடும். அதனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம்.

    திமுக தலைவர் ஸ்டாலின்

    நானும், டாக்டர் ராமதாசும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்துள்ளோம். அரசியல் என்பது புனிதமான சேவை. அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் படிக்கணும், வேலைக்கு போகணும், முன்னேறனும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காகத்தான் நான் வந்துள்ளேன். இந்த மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. அதுதான் என்னுடைய மாவட்டமும் ஆகும். இங்கு இருக்கும் என்னுடைய எல்லா தம்பிகளும் நன்றாக இருக்கவேண்டும். அவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படக்கூடாது.

    எல்லோரும் படித்து வேலைக்கு செல்லவேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் ராமதாஸ் பெற்றுத் தந்திருக்கிறார். அதை கொடுத்தது நம்முடைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எனவே உங்கள் மீது ஏதேனும் வழக்கு வந்தால், உங்களுக்கு அதில் பணி கிடைக்காமல் போய்விடும். பணியில் சேர முடியாது. படிக்க முடியாது. ஆகையால் என்னுடைய நோக்கம் இந்த மாவட்டம் அமைதியாக இருக்கவேண்டும். வளர்ச்சி பெறவேண்டும். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும். எனவே அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனை வெற்றிப் பெறச்செய்யுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் தாயார் மரணம் அடைந்தார். இதுபற்றி அறிந்த பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    கடலூர்:

    கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான உமாநாத்தின் தாயாரான உமாராணி நேற்று சிதம்பரத்தில் மரணம் அடைந்தார். 

    இதுபற்றி அறிந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உமாராணியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    தொடர்ந்து மாவட்ட செயலாளர் உமாநாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் கடலூரில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் வாக்குறுதி அளித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் நேற்று தொகுதிக்குட்பட்ட தூக்கணாம்பாக்கம், உள்ளேரிப்பட்டு, களையூர், திருப்பணாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரசாரம் செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படும். கடலூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அமைத்து தரப்படும். கடலூர் துறைமுகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் என்று கூறி முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

    இதில் தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளர் லெனின், தே.மு.தி.க. கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சித்தநாதன் மாவட்ட பொறுப்பாளர் ராஜா, ஐயப்பன், கலாநிதி மாவட்ட இளைஞரணி ராஜி, அ.ம.மு.க. மாவட்ட பிரதிநிதி நாராயணன், அ.ம.மு.க. வக்கீல் பிரிவு சத்தியராஜ், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட அவை தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் பாடலீஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, அ.ம.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் உத்திராபதி மூத்த நிர்வாகி சுரேஷ்பாபு, அ.ம.மு.க. நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. இதயதுல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். சிராஜ், ஒன்றிய இணை செயலாளர்கள் உத்திராபதி, பழனியம்மாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
    விருத்தாசலம்:

    ஏசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டுக்கான பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலம் நகரத்துக்குள் கழுதை குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்ற வாழ்த்து பாடல்களை பாடினர்.

    இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்களால் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்திற்கு சென்றனர். அதனை தொடர்ந்து அங்கு பங்குதந்தை பால்ராஜக்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நாம் தமிழர் கட்சியை உருவாக்கி கடமையை செய்து வருகிறோம். எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல. தன்மானம் தான் முக்கியம்.
    கடலூா்:

    கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தன்னல வாதிகளின் கையில் நாடும், அதிகாரமும் சிக்கிக்கொண்டதால்தான் தன்மானத்தை இழந்து நிற்கிறது. அடிமைத்தனமான, கேடுகெட்ட பண நாயகத்தை அழித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் குறைகளை கேட்க நாங்கள் வரவில்லை. குறைகளை தீர்க்க வந்திருக்கிறோம்.

    நாம் தமிழர் கட்சியை உருவாக்கி கடமையை செய்து வருகிறோம். எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல. தன்மானம் தான் முக்கியம். சேவைதான் வழியை தீர்மானிக்கிறது. தமிழ் நலத்தையும், வளத்தையும் காப்பது நமது கடமை.

    தமிழகத்தில் 1½ கோடி இந்திகாரர்கள் குடியேறி விட்டனர். இந்தியை திணிக்கிறது என்று போராடுகிறோம். ஆனால் அவர்கள் இந்திக்காரர்களை திணித்து விட்டார்கள். இதை யாரும் கேட்கவில்லை. நாம் தான் கேட்கிறோம., தனி ஒருவராக கேட்போம்.

    சிங்கம்போல் தனியாக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். இந்த மண்ணும், மக்களும் பயன்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம். இந்த இனம் வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். இது வரை ஆண்ட கட்சிகள் மணலை விற்கிறது. மலையை குடைந்து இருக்கிறது. இதனை தடுக்க முடியவில்லை. நாங்கள் அரசியல்வாதி அல்ல, லட்சியவாதிகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர், ‘ஓட்டு போடும் பெண்களே ஒதுங்கி நிற்காதே. கண்ட கண்ட சின்னம் பார்த்து கலங்கி நிற்காதே. விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்று பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார்.
    விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதியாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் விருத்தாசலத்தில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விருத்தாசலத்தில் கடந்த 10 நாட்களாக அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன். ஏற்கனவே விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதிதான் இது. அவர் மக்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் செய்த நலத்திட்டங்களை மக்களே என்னிடம் தெரிவிக்கின்றனர்.

    அது நிச்சயமாக வாக்குகளாக மாறும். எனக்கு அமோக வரவேற்பு உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தே.மு.தி.க., கோகுலம் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். அப்படி இருக்கும்போது விருத்தாசலத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஒரு பெண்ணிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சியை சேர்ந்த அந்த சின்னம் இருக்கக்கூடாது என தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை முடிவு வரவில்லை. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.

    நான் வேட்புமனு தாக்கல் செய்த அன்று மட்டும் தான் சுதீஷ் உடன் இருந்தார். அதன்பிறகு உடனே ஊருக்கு கிளம்பி விட்டார். அப்படி இருக்கும்போது எனக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி நான் பிரசாரத்தில் இருந்தபோது என்னை வலியுறுத்தியது கண்டிக்கத்தக்கது.

    நான் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தான் பிரசாரத்திற்கு வந்துள்ளேன்.

    கொரோனா தடுப்பு ஊசி இரண்டு முறை போட்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெளிவாக சொல்லியும் நீங்கள் பரிசோதனைக்கு வரவேண்டும் என கூறி என் பிரசாரத்தை தடை செய்யவே அவர்கள் முயற்சி எடுத்தனர். அதை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம். ஆனால் நாங்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் உட்பட்டவர்கள்.

    அதனால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 5 மணி நேரத்தில் ரிசல்ட் கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் மறு நாள் ஆகியும் ரிசல்ட் வரவில்லை. என்னை பிரசாரத்திற்கு போகவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் ஏற்கனவே தனியாரிடம் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் நெகட்டிவ் என்று வந்ததை தெரிந்து கொண்ட பிறகு நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்தனர். வேட்பாளர் என்பவர் மக்களை சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்கும் என்னை யாராலும் தடுக்க முடியாது.

    விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதியாகும். என் குரல் ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நிச்சயமாக சட்டசபையில் ஒலிக்கும். விருத்தாசலம் தொகுதிக்கு பிரசாரம் செய்ய நிச்சயம் விஜயகாந்த் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேத்தியாத்தோப்பு அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் மிராலூர் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், சிறுமியுடன் நின்று கொண்டிருந்தார். இவர்களை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    உடனடியாக அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன் வீரமணி(வயது 24) என்பதும், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை அவர் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வீரமணியை போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    பாமக- காங்கிரஸ் கட்சிகள் நேருக்குநேர் மோதும் நிலையில், தேமுதிக சார்பில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா களம் இறங்குகிறார்.
    அதிமுக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஜே. கார்த்திகேயன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டுள்ளார். ஐஜேகே சார்பில் ஆர். பார்த்தசாரதி,  நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா, தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாமக வேட்பாளர் கார்த்திகேயன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 15,000
    2. அசையும் சொத்து- ரூ. 21,59,879
    3. அசையா சொத்து- ரூ. 20,73,539

    காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 8,37,581.29
    3. அசையா சொத்து- ரூ. 1,03,00,000

    தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 45,400
    2. அசையும் சொத்து- ரூ. 5,98,29,056
    3. அசையா சொத்து- ரூ. 32,08,00,000

    தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் விருத்தாசலம் தொகுதி தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறியது.

    பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ள விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திரப்பட்டினம், டி.வி.புத்தூர், சத்தியவாடி, புதுக்கூரைப்பேட்டை, சின்னகண்டியாங்குப்பம், நறுமணம், ஆலடி, புலியூர், கோ.பவழங்குடி, பூவனூர், மு.பரூர், கர்ணத்தம், டி.மாவிடந்தல் உள்ளிட்ட 51 ஊராட்சிகள், கம்மாபுரம் ஊராட்சிய ஒன்றியத்தில் அம்மேரி,

    கொள்ளிருப்பு, இருப்பு, முதனை, பெரியகாப்பான்குளம், முடப்புளி, நடியப்பட்டு, பாலக்கொல்லை, இருளக்குறிச்சி, மணக்கொல்லை, பழையப்பட்டினம், கொட்டேரி உள்ளிட்ட 12 ஊராட்சிகளும், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லூர், இலங்கியனூர், வேப்பூர், பெரியநெசலூர், பூலாம்பாடி, கண்டப்பங்குறிச்சி, நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட 29 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன. இந்த தொகுதியில் அரிசி, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய தொழிலே பிரதானமாக நடந்து வருகிறது.

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 15 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க 3 முறையும், தி.மு.க, தே.மு.தி.க தலா 2 முறையும், ஜனதா தளம், பா.ம.க தலா ஒரு முறையும், சுயேட்சையை ஒரு முறையும் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்து இப்பகுதி வாக்காளர்கள் சட்டசபைக்கு அனுப்பி உள்ளனர்.

    வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், உடையார், குரும்ப கவுண்டர், யாதவர், பிள்ளைவால், ரெட்டியார், நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் பரவலாக வசிக்கும் தொகுதியாக உள்ளது. மேலும் முஸ்லீம், கிறிஸ்தவர்களும் அதிகளவு வசித்து வருகின்றனர்.

    தொகுதி வளர்ச்சி பணிகளாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பத்திர பதிவு துறை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது, பரவளுர் மணிமுக்தாற்றில் மேம்பாலம், தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர்- இலங்கியனூர் மணிமுக்தாறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கண்சிகிச்சை  பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வேப்பூர் தாலுகா மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் 14 வகுப்பறைகள், ஆய்வு கூடம், புதிய கழிவறைகள், கலையரங்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

    சாத்தியம், மன்னம்பாடி, புலியூர், சித்தூர், எடச்சித்தூர், ராஜேந்திரப்பட்டினம், வண்ணான்குடிகாடு, மு.பரூர், வேப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் அமைத்தல், பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் போர்வெல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள், அம்மா பூங்கா, விளையாட்டு உடற்பயிற்சி கூடம் அமைத்தல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பல்வேறு சாலை வசதி பணிகள், குடிமராமத்து பணிகள், என்.எல்.சியில் இருந்து 450 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள என்.எல்.சி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அ.தி.மு.க அரசு செய்து கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    விருத்தாசலம் தொகுதி
    எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன்

    ஆனால் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை. சூரியகாந்தி எண்ணை பிழியும் ஆலையை செயல்படுத்தவில்லை. விருத்தாசலத்தின் அடையாளமான நலிவடைந்த நிலையில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையை மேம்படுத்துவதற்கான எவ்வித அறிவிப்புகள் கூட வரவில்லை. முந்தரி ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம் இருப்பதால் வேளாண்மை பொறியியல் கல்லூரி கொண்டு வரவேண்டும், மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், நகரில் அவ்வபோது நிலவும் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்ய சாலையின் இருபக்கங்களிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்  என்ற பொதுமக்களிள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    விருத்தாசலம் நகரை அழகுபடுத்த வேண்டும். மணிமுக்தாற்றை தூய்மை படுத்தி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், விருத்தாசலம் பகுதியில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க வேண்டும். மங்கலம்பேட்டையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும், புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என கடந்த 2016 சட்டசபை தேர்தலில் விருத்தாசலத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அவர் முதல்வராகியதும் விருத்தாசலம் மாவட்டமாகும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் மறைந்ததும் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்தார். அவ்வாறு விருத்தாசலத்தையும் மாவட்டமாக அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அடுத்த தேர்தலும் வந்து விட்டதால் இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் விருத்தாசலத்தை மாவட்டமாக்குவோம் என்ற வாக்குறுதியை கொடுத்து ஓட்டுகளை கவர்வதில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்

    1952 பரமசிவம் ( உழைப்பாளர் கட்சி)
    1957 செல்வராஜ் (சுயே)
    1962 பூவராகன் (காங்கிரஸ்)
    1967 பூவராகன்(காங்கிரஸ்)
    1971 செல்வராஜ் (தி.மு.க.)
    1977 ராமநாதன் (அ.தி.மு.க) 
    1980 தியாகராஜன் (இந்திரா காங்கிரஸ்)
    1984 தியாகராஜன் (காங்கிரஸ்)
    1989 பூவராகன் (ஜனதா தளம்)
    1991 அரங்கநாதன் (அ.தி.மு.க.)
    1996 குழந்தைதமிழரசன் (தி.மு.க.)
    2001 கோவிந்தசாமி (பா.ம.க.)
    2006 விஜயகாந்த் (தே.மு.தி.க.)
    2011 முத்துக்குமார் (தே.மு.தி.க.)
    2016 கலைச்செல்வன் (அ.தி.மு.க)
    ×