என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில், 1509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நட க்கிறது. இந்த தேர்தலை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தேர்தலில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி எவை என்று ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 28 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டது. இந்த இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர ஆயுதப்படை போலீசாரும், சில இடங்களில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள், பிரச்சினை ஏற்படும் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1509 வாக்குச்சவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    வாய்தகராறில் டிரைவரை மண்வெட்டியால் வெட்டிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான ராஜா (40) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாரும், ராஜாவின் மற்றொரு வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் கணேஷ்பாபு என்பவரும் தங்கள் வீடுகளில் கழிவறை கதவும், மின்இணைப்பும் சரியில்லை என்றும், அதனை சரிசெய்து தரும்படி ராஜாவிடம் கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் சிவக்குமார் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ராஜா அவரது வீட்டுக்குள் நுழைந்து, மண்வெட்டியால் சிவக்குமாரின் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    நெய்வேலியில் தைல மர தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 14 பகுதியில் உள்ள தைல மர தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்த வர்களிடம் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், அவர் நெய்வேலி வட்டம் 21 நாவலர் தெருவை சேர்ந்த வீரமணி மகன் சிவா என்கிற சிவக்குமார் (வயது 23) என்பதும், அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    மேலும் அவரை யாரோ மர்மநபர்கள் ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் முன்விரோத தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்திலும் கோர தாண்டவம் ஆடியது. இதனால் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தினசரி 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு மாநில அரசுடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து எடுத்து தீவிர நடவடிக்கைகளால் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதனால் கடந்த மாதம் தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கை தாண்டாமல் இருந்தது. 

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 28 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கடலூரில் தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கடலூரில் வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.
    கடலூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை)நிறைவடைகிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை தே.மு.தி.க. சந்தித்து வருகிறது. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், நேற்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டார். அதன்படி, கடலூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானபண்டிதன், குறிஞ்சிப்பாடி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோரை ஆதரித்து நேற்று விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

    மாலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதிக்கு பிரசார வேனில் வந்த அவர், அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அவர் வேனில் நின்றபடி கை கூப்பியும், முரசு சின்னத்தை காட்டியும் ஓட்டு கேட்டார்.

    முன்னதாக தொண்டர்கள் அவருக்கு பட்டாசு வெடித்து ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர். இதில் அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு அவர் பண்ருட்டிக்கு புறப்பட்டு சென்றார்.
    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று புவனகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் பேசினார்.
    புவனகிரி:

    புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் நேற்று கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியமான துணிசிரமேடு ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக துணிசிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய வேண்டும். அவருடைய ஆட்சி மீண்டும் அமைந்தால் தேர்தல் வாக்குறுதியில் அவர் சொன்னபடி ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு ரூ.1,500 ரொக்கம், வாஷிங் மிஷின் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுப்பார். மேலும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் புவனகிரி தொகுதியின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார். தொடர்ந்து அவர் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    இதில் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேசுவரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முருகுமணி, மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு தலைவர் புருஷோத்தமன், துணிசிரமேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கார ராமமூர்த்தி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை, அன்பழகன், ராமலிங்கம், ரங்கநாதன், முருகையன், ரவிச்சந்திரன், நடேசன், எழிலரசன், கோவிந்தராஜ், ஜெயலட்சுமி, ரம்யா, சிவராஜ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஹரிபுத்திரன். மாவட்ட துணை செயலாளர் இளையராஜா, பொதுச்செயலாளர் அருள் கோவிந்தன், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,522 போலீசார் நேற்று தபால் வாக்குகளை செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தபால் ஓட்டுகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களை கணக்கெடுக்கப்பட்டு, விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் 4,757 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 4,400 பேரிடம் தபால் வாக்கு பெறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,522 போலீசார் நேற்று தபால் வாக்குகளை செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு கடலூர் தாலுகா அலுவலகத்தில் போலீசார் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தாலுகா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை போட்டு விட்டு சென்றனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்த மையங்களுக்கு சென்று தங்களது தபால் வாக்கை செலுத்தி வருகின்றனர். தபால் வாக்குகளை செலுத்துபவர்கள் நேரில் வந்து தான் செலுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் யாரிடமும் தபால் வாக்குகளை தரக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தபால் வாக்குகுள் செலுத்துபவர்கள் அந்த மையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நோட்டில் கையொப்பம் இட்டுதான் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    விருத்தாசலம் பணிபூண்டார் வீதி பள்ளிவாசலில் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரித்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று விருத்தாசலம் கடைவீதி அருகே உள்ள பணி பூண்டார் வீதி பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் துண்டு பிரசுரம் வழங்கி, மாம்பழம் சின்னத்துக்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, வேப்பூர் கடைவீதி, கீரம்பூர், மங்கலம்பேட்டை, பூண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளர் கார்த்திகேயன், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாம்பழம் சின்னத்தை ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதில் பா.ம.க. நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜா, ஊடக பிரிவு செல்வா, கோட்டேரி தமிழ் அரிமா, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கம்மாபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கம்மாபுரம்:

    கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முணிமுக்தாற்றில் 4 மாட்டு வண்டிகளில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சின்னசாமி, செல்வராசு மகன் வேல்முருகன், திருமூர்த்தி மகன் அலெக்ஸ்பாண்டியன், தங்கவேல் மகன் மணி ஆகியோர் மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 4 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கடலூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
    சிதம்பரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார்.

    அண்ணாமலைநகர்:

    தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் அந்தந்த தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியை மண்டல தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வேட்பாளர்களின் சின்னம், பெயரை சரியான முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்த வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுபாலன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் அஜிதாபேகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூரில், 1,500 பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பங்கேற்றார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 1500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து 100 சதவீதம் தவறாது வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி வாசிக்க, அனைத்து பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், அனைவரும் வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விரல் புரட்சி என்ற பாடல் குறுந்தகட்டினை கலெக்டர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், தாசில்தார் (கேபிள் டி.வி.) ஜெயக்குமார், ஓவியர்கள் மாசிலாமணி, ஞானவேல் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    ×