என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40) விவசாயி. இவருடைய முதல் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியின் 2-வது மனைவி பிரபாவதி. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தருமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளனர். கடன் தொல்லையால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திட்டக்குடி அருகே தனியார் வேன் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சின்னமுத்து (வயது 27). இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு குடிபோதையில் சென்றார். பின்னர் அவர் திடீரென அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்த தனியார் வேனின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாதையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுநாயக்கன் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வடலூர்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வடலூர்:

    வடலூர் கோட்டக்கரை கோழிப்பள்ளம் பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வடலூர் பஸ் நிலையம் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் வகையில் பாதை உள்ளது. இந்த பாதையை தான், அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து சுற்றுச்சுவர் கட்டி வருவதாக தெரிகிறது. 

    இதற்கு காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் காலை 10 மணி அளவில் வடலூர்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, காட்டுநாயக்கன் சமூகத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 398 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 79 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இவர்களில் கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து என்.எல்.சி.க்கு வந்த 2 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில், நேற்று 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 398 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 79 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிதம்பரம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்றது. இந்த பஸ்சை திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

    இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி மீன்கள் ஏற்றிய லாரி வந்தது. இந்த லாரியை நெய்வேலியை சேர்ந்த டிரைவர் அய்யப்பன் ஓட்டினார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பயணிகள் உயிர்பிழைக்க அலறி துடித்தனர்.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார், பஸ்சில் பயணம் செய்த நாகை மாவட்டம் தரங்கம்பாடி நல்லோடை கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (37), நாகப்பட்டினத்தை சேர்ந்த வைரவன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியனார்கள்.

    பலியான பஸ் டிரைவர் சிவக்குமார்.

    மேலும் இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பர்வீன், ஜெகதீசன் (25),சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்டர்(38), காரைக்காலை சேர்ந்த அகமது உசேன் (38), சென்னையை சேர்ந்த ரவி (54), லீலா, திருவாரூர் அருகே திருக்குவளையை சேர்ந்த சவுந்தரராஜன் (45), சரவணன், லாரி டிரைவர் அய்யப்பன் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. லாமேக், புதுச்சத்திரம் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிதம்பரம், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களில் லாரி டிரைவர் அய்யப்பன் நிலைமை மோசமாக உள்ளது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமணமான 6 மாதத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    புவனகிரி அருகே உள்ள வட தலகுளம் பகுதியை சேர்ந்தவர் பானுகோபால். இவரது மகன் வெங்கட்ராமன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புவனகிரி அடுத்த உள்மருவாய் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கட்ராமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மருதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வெங்கட்ராமன் உடலை பார்வையிட்டு, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பானு கோபால், மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராமன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய 3 தொகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்ததும். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல்வைத்தனர்.

    அதன் பின்னர் அந்த 3 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    அந்த கல்லூரியில் உள்ள அறைகளில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கருமாரி அம்மன் அரசு கலை கல்லூரிக்கு கடலூர் மாவட்ட கலெக் டர் சந்திரசேகர சாகமூரி, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தனர்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகின.
    கடலூர்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    கடலூரில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    திட்டக்குடி - 75.61%
    விருத்தாசலம் - 76.98%
    நெய்வேலி - 74.04%
    பண்ருட்டி - 79.60%
    கடலூர் - 74.77%
    குறிஞ்சிப்பாடி - 81.25%
    புவனகிரி - 78.48%
    சிதம்பரம் - 71.94%
    காட்டுமன்னார்கோவில் - 75.87%
    சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்ள் பழுதானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த எந்திரம் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதேபோல் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் பழுதானது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மினி அப்சர்வர் தலைமையில் அதிகாரிகள் குழு தீவிரமாக கண்காணித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 136 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 21,47,295 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 10,57,478 பேர், பெண் வாக்காளர்கள் 10,89,569 பேர், இதர வாக்காளர்கள் 248 பேர் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. நகர பகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    வாக்குசாவடிக்கு வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. அதோடு கையுறை வழங்கப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் 211 பதட்டமானவை, மிக பதட்டமான வாக்குசாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மினி அப்சர்வர் தலைமையில் அதிகாரிகள் குழு தீவிரமாக கண்காணித்தனர்.

    காலை 11 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 26.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர்சாகமுரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபநவ் தலைமையில் கண்காணிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் 3001 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,404 பேர் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சிதம்பரம்:

    தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிதம்பரத்தில் மானாசந்து பகுதியில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று காலை 7.30 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை எதிர் பார்த்து மக்கள் வந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் தமிழகத்தில் மக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமையும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பாதிப்பு ஆளும்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளது. மக்களுக்கு வாங்கும் சக்தி தற்போது குறைந்துள்ளது.

    வேலைவாய்ப்பு அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்ற பயத்தில் எதிர்கட்சியினர் மீது வருமானவரி சோதனையை உள்நோக்கத்துடன் நடத்தி உள்ளனர். வருமானவரித்துறை பா.ஜ.க.வின் கைக்கூலியாக மாறி உள்ளது.

    தேர்தல் தோல்வி பயத்தால் அ.தி.மு.க.வினர் ஆளும்கட்சி தமிழகத்தில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளது. இதன் மூலம் தோல்வியை அ.தி.மு.க.வினர் தற்போது ஒத்துக்கொண்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு போதுமான நிதியை கேட்டுபெற முடியாத திராணியற்ற அரசாக உள்ளது. எனவே தான் மக்களிடம் இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திண்டிவனத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குபதிவு செய்தார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 7.35 மணி அளவில் திண்டிவனத்தில் காளியம்மன்கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டுபோட்டார்.

    அப்போது ராமதாஸ் கூறுகையில், தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்து கணிப்புகள் வெளியானது. இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து தினிப்பு நான் 7-வது முறையாக ஜனநாயக கடமையாற்றி உள்ளேன். காமராஜர், கக்கன் காலத்தில் நல்ல அரசியல் விமர்சகர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று தாயை பற்றி தரம்தாழ்ந்து பேசும் அளவுக்கு அரசியல் உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றார்.
    தேர்தல் பறக்கும் படையினர் பயன்படுத்தி வந்த தனியார் வாகனங்களின் டிரைவர்கள் சம்பளம், டீசலுக்கான தொகை வழங்காததை கண்டித்து நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 27 கண்காணிப்பு குழுவினரை சார்ந்த பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கு தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் இதுவரைக்கும் சுமார் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்தபடி இருப்பதுடன், சில இடங்களில் கைது நடவடிக்கையும் நடந்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில், பறக்கும் படையினர் பயன்படுத்தி வந்த தனியார் வாகனங்களின் டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் டீசல் தொகை ஆகியவற்றை சரியான முறையில் கொடுக்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதையடுத்து, நேற்று காலை வாகனங்கள் அனைத்தையும் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி அவர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

    அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கயைிலான வாகனங்களுக்கு முதலில் தொகையை வழங்குவதாகவும், வழக்கம் போல் பணியை தொடங்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதன்படி யாருக்கும் பணம் வழங்கவில்லை. இதனால் மதியம் 2 மணி வரைக்கும் வாகனங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனங்களின் டிரைவர்களும் அங்கேயே காத்திருந்தனர்.

    ஆனால் தேர்தல் அதிகாரிகள் இவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் தேர்தல் பணியில் இருந்தனர். இதனால் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் எங்கும் ரோந்து பணிக்கு செல்ல முடியாமல் தாலுகா அலுவலகத்திலேயே இருந்தனர்.

    தொடர்ந்து மாலை 3 மணி அளவில் வாகன டிரைவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் தங்களது வாகனங்களை இயக்க தொடங்கினர். பின்னர் பறக்கும் படையினர் அங்கிருந்து தங்களுக்கு உரிய வாகனங்களில் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    தனியார் வாகன டிரைவர்களுக்கான வாடகை தொகை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, காட்டுமன்னார் கோவில் தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

    ×