search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேர்தல் பறக்கும் படைகளின் வாகன டிரைவர்கள் திடீர் போராட்டம்

    தேர்தல் பறக்கும் படையினர் பயன்படுத்தி வந்த தனியார் வாகனங்களின் டிரைவர்கள் சம்பளம், டீசலுக்கான தொகை வழங்காததை கண்டித்து நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 27 கண்காணிப்பு குழுவினரை சார்ந்த பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கு தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் இதுவரைக்கும் சுமார் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்தபடி இருப்பதுடன், சில இடங்களில் கைது நடவடிக்கையும் நடந்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில், பறக்கும் படையினர் பயன்படுத்தி வந்த தனியார் வாகனங்களின் டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் டீசல் தொகை ஆகியவற்றை சரியான முறையில் கொடுக்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதையடுத்து, நேற்று காலை வாகனங்கள் அனைத்தையும் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி அவர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

    அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கயைிலான வாகனங்களுக்கு முதலில் தொகையை வழங்குவதாகவும், வழக்கம் போல் பணியை தொடங்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதன்படி யாருக்கும் பணம் வழங்கவில்லை. இதனால் மதியம் 2 மணி வரைக்கும் வாகனங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனங்களின் டிரைவர்களும் அங்கேயே காத்திருந்தனர்.

    ஆனால் தேர்தல் அதிகாரிகள் இவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் தேர்தல் பணியில் இருந்தனர். இதனால் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் எங்கும் ரோந்து பணிக்கு செல்ல முடியாமல் தாலுகா அலுவலகத்திலேயே இருந்தனர்.

    தொடர்ந்து மாலை 3 மணி அளவில் வாகன டிரைவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் தங்களது வாகனங்களை இயக்க தொடங்கினர். பின்னர் பறக்கும் படையினர் அங்கிருந்து தங்களுக்கு உரிய வாகனங்களில் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    தனியார் வாகன டிரைவர்களுக்கான வாடகை தொகை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, காட்டுமன்னார் கோவில் தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

    Next Story
    ×