என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுரோட்டில் லாரி டிரைவரை வெட்டி கொல்ல முயன்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே எழுமேடு அகரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 30). லாரி டிரைவர். நேற்று மாலை மேல்பட்டாம்பாக்கம் களிஞ்சிகுப்பம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 நபர்கள் திடீரென்று வடிவேலை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக நடுரோட்டில் வைத்து வெட்டி தப்பி ஓடினார்கள்.

    அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக ரத்தவெள்ளத்தில் கிடந்த வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேல்சிகிச்சைக்காக வடிவேலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1600 கோவில்களும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்கக் கூடாது. பஸ், தியேட்டர், ஓட்டல், நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1600 கோவில்களும் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. ஆனால் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதுபோல் நேற்று முதல் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் என மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 1600 கோவில்கள் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் கடலூர் திவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களுக்கு காலை முதல் பக்தர்கள் வழக்கம்போல் வந்தனர். ஆனால் கோவில்கள் மூடப்பட்டு வெளியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கோவில் கோபுரத்தை தரிசனம் செய்து பின்னர் பொதுமக்கள் சென்றதை காண முடிந்தது.
    புவனகிரி பகுதியில் தரமற்ற தார்சாலையை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை திடீர் என்று பெருமத்தூர் பஸ் நிலையம் அருகில் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    புவனகிரி:

    புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட சின்னக்கடை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 99 லட்சம் மதிப்பில் தார்சாலை போடப்பட்டது.

    தார்சாலை போட்டு சில தினங்களுக்கு உள்ளே பெயர்ந்து விட்டது என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்று காலை திடீர் என்று பெருமத்தூர் பஸ் நிலையம் அருகில் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார் .அதன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால் பெண்களை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கொரத்தி கிராமத்தை சேர்ந்தவர் கேசவபெருமாள். (வயது 20) இவர், தனதுவீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்தார்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த இளங்கோ (33) அந்தவழியாக சென்றார். அவரை கேசவபெருமாள் வீட்டு நாய் கடிக்க ஓடியது. ஆத்திரமடைந்த இளங்கோ நாயை அடிக்க முயன்றார்.

    அப்போது கேசவபெருமாளின் பெரியப்பா துளசிதாஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் எதற்கு நாயை அடிக்கிறாய் என கேட்டனர்.

    ஆத்திரமடைந்த இளங்கோ என்னடா நாய் வளர்கிறீர்கள் ரோட்டில் வருவோர், போவோரை கடிக்கிறது என்று கேட்டு அருகில் கிடந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த பெண்களை மானபங்கம் செய்து தாக்கினார்.

    இதில் துளசிதாஸ் (55), சங்கர் (50), தனலட்சுமி (42), கேசவபெருமாள், சத்தியலட்சுமி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேசவப் பெருமாள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயமடைந்த மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்கோவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மகள் இறைமொழி (வயது 17). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த இறைமொழியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் இறைமொழி கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சந்திரசேகர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் இறைமொழியை அதே ஊரை சேர்ந்த மனோகர் மகன் பிரசன்னா (28) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என கூறி உள்ளார்.

    அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இறை மொழி, பிரசன்னா ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை சண்முகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மகள் சத்யா (வயது 14).

    கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சத்தியாவை காணவில்லை. அவரின் பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பெண்ணின் தந்தை ரமேஷ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் என் மகளை அதே ஊரை சேர்ந்த பிரபு (17) என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காணாமல் போன சத்தியா, பிரபு ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட தம்பதி உயிரிழந்தனா். மேலும் பேரன் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60), இவருடைய மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர் கடந்த 30-ந்தேதி தனது வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் தங்களது பேரன் சரவண கிருஷ்ணனுடன்(6) சாப்பாட்டில் முள்ளங்கி சாம்பாரை ஊற்றி சாப்பிட்டுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த நிதிஷ்(8), பிரியதர்ஷினி(4) ஆகியோரும் முள்ளங்கி சாம்பாரை வைத்து சாப்பிட்டனர். இந்நிலையில் சாப்பிட்ட சிலமணி நேரத்தில் கொளஞ்சியம்மாளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன், சரவணகிருஷ்ணன், நிதிஷ், பிரியதர்ஷினிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிர மணியனை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், சரவண கிருஷ்ணனை விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நிதிஷ், பிரியதர்ஷினி ஆகியோரை கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதனிடையே சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் கடந்த 4-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரவணகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் தொடா்ந்து ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு உணவு விஷமானதா?, அல்லது உணவில் விஷம் கலக்கப்பட்டதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட கணவன்- மனைவி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராமநத்தம் கிராம ஊராட்சியில் சேர்க்கப்படும் கழிவு குப்பைகள் அனைத்தும் நூலகம் அருகே கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமநத்தம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் ராமநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு செயல்பட்டு வரும் நூலகம் அருகில் ராமநத்தம் கிராம ஊராட்சியில் சேர்க்கப்படும் கழிவு குப்பைகள் அனைத்தும் நூலகம் அருகே கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அருகாமையில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. குடியிருப்புகள் உள்ளன. குப்பைகள் கொட்டுவதால் பன்றிகள் அதிக அளவில் அங்கு முகாமிட்டு உள்ளதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பலமுறை எச்சரித்தும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விடத்தில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெண்ணாடத்தில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திட்டக்குடி:

    பெண்ணாடம் சுற்றுப்பகுதியில் சாலையோரம் பல்வேறு இடங்களில் அமர்ந்து மது பிரியர்கள் மது அருந்துவதாக கிடைத்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் ராம்கோ சிமெண்ட் அருகே நேற்று ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர்.

    அப்போது சிலுப்பனூர் சாலையில் கிளிமங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ் (22) டி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (20) ஆகிய இருவரும் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கடலூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 35) என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயசீலன் நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜெயசீலன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கடலூரில் மாமனாரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலைச்செட்டி சாவடியை சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜாராமன் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சம்பவத்தன்று ராஜாராமன் தனது மாமனார் ராமலிங்கம் வீடான வெளிசெம்மண்டலத்திற்கு சென்றார். அங்கு அந்த குழந்தையை ராமலிங்கம் வைத்திருந்தார். அவர் ராஜாராமனை பார்த்ததும் 9 மாதமாக மனைவியை வீட்டில் வைத்து சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. எதற்காக குழந்தையை பார்க்க வந்தாய்? என்று கேட்டதாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாராமன் ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி மாமியார் லதா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர்.
    புதுப்பேட்டை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராம ஏரிக்கரை பகுதியில் சிவன் கோவில் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த 2 கோவில்களுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 2 கோவில்களில் இருந்த உண்டியல்களை உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதுபற்றி நேற்று காலை புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற கோவில்களை நேரில் பார்வையிட்டதோடு, உண்டியல்களை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் 806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 806 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதை கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வன்னியர் திருமண மண்டபம் மற்றும் வண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி நோய் தொற்றில் இருந்து முற்றிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று நடந்த முகாமில் மொத்தம் 80 ஆயிரத்து 787 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது.

    ஆய்வின்போது துணை இயக்குனர் (சுகாதாரம்) மீரா, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், சுகாதார அலுவலர் அரவிந்த்ஜோதி, தடுப்பூசி களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×