என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கோவில் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கடலூர் மாவட்டத்தில் 1600 கோவில்கள் மூடப்பட்டன

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1600 கோவில்களும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்கக் கூடாது. பஸ், தியேட்டர், ஓட்டல், நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1600 கோவில்களும் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. ஆனால் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதுபோல் நேற்று முதல் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் என மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 1600 கோவில்கள் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் கடலூர் திவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களுக்கு காலை முதல் பக்தர்கள் வழக்கம்போல் வந்தனர். ஆனால் கோவில்கள் மூடப்பட்டு வெளியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கோவில் கோபுரத்தை தரிசனம் செய்து பின்னர் பொதுமக்கள் சென்றதை காண முடிந்தது.
    Next Story
    ×