என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலி
    X
    பலி

    முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட தம்பதி பலி- பேரன் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட தம்பதி உயிரிழந்தனா். மேலும் பேரன் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60), இவருடைய மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர் கடந்த 30-ந்தேதி தனது வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் தங்களது பேரன் சரவண கிருஷ்ணனுடன்(6) சாப்பாட்டில் முள்ளங்கி சாம்பாரை ஊற்றி சாப்பிட்டுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த நிதிஷ்(8), பிரியதர்ஷினி(4) ஆகியோரும் முள்ளங்கி சாம்பாரை வைத்து சாப்பிட்டனர். இந்நிலையில் சாப்பிட்ட சிலமணி நேரத்தில் கொளஞ்சியம்மாளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன், சரவணகிருஷ்ணன், நிதிஷ், பிரியதர்ஷினிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிர மணியனை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், சரவண கிருஷ்ணனை விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நிதிஷ், பிரியதர்ஷினி ஆகியோரை கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதனிடையே சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் கடந்த 4-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரவணகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் தொடா்ந்து ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு உணவு விஷமானதா?, அல்லது உணவில் விஷம் கலக்கப்பட்டதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட கணவன்- மனைவி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×