என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி துர்கா (வயது 19). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற துர்கா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செல்வகுமார் துர்க்காவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி பகுதியிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 143 பேர் போட்டியில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவுக்கென 68 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 60 ஆயிரத்து 202 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 537 பேர், பெண் வாக்காளர்கள் 30 ஆயிரத்து 720 பேர், திருநங்கைகள் 15 பேர். விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்துமுடிந்துள்ளது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்துமுடிந்துள்ளது. தற்போது உளுந்து சாகுபடி செய்து உள்ளனர்.

    ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. எனவே வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது இந்த தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 211 கனஅடி மட்டுமே வந்தது. ஏரியின் நீர்மட்டம் 43.95 அடியாக உள்ளது. நேற்று 44.10 அடியாக இருந்தது. வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.

    சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக இன்று 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 39 அடி நீர் மட்டம் இருக்கும் வரைதான் தண்ணீர் அனுப்ப முடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டால் குடிநீர் அனுப்ப முடியாது. எனவே கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பமுடியும் என்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நாளை (19-ந் தேதி) ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் விறுவிறுப்பான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் 437 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 லட்சத்து 78 ஆயிரத்து 812 வாக்காளர்கள் 715 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனர்.

    நேற்று இறுதி கட்ட பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் 51 பொருட்கள் கடலூர் மாநகராட்சி மற்றும் அந்தந்த அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

    மேலும் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்கு பதிவு மையங்களுக்கு செல்லக்கூடிய வகையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து அந்தந்த வாக்குப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பில் வாக்கு பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனையொட்டி அந்தந்த அரசு அலுவலகங்களில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19 ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19 ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 437 பதவிகளுக்கான தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

    மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு அந்தந்த பள்ளிகள் இன்று, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் தற்போது முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியில் 100 மீட்டர் தூரத்தில் வெள்ளை கோடு போடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய விதியின்படி வேட்பாளர்கள், அவர்களுடன் உள்ள ஆதரவாளர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். மேலும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது மட்டுமன்றி வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இது மட்டுமன்றி 410 பதற்றமான வாக்குச்சாவடிகள் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
    கடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் நாளை (19 -ந் தேதி) 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் நடைபெற உள்ளன.

    இதனையொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் அதிகமாக பிரச்சினைக்குரிய இடங்களில் கண்டறிந்து பிரச்சினைகள் நடக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் எடுக்கப்பட்டு வருகின்றது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், ஜெயச்சந்திரன் தலைமையில் 11 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 55 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 400 ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 715 வாக்குச்சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு சேர்க்க இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 57 மொபைல் பார்ட்டிகள் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போலீஸ் நிலைய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை (19-ந் தேதி) நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. அதன்படி கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் நேற்றுடன் பிரசாரம் முடிந்தது.

    இன்று காலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் போராட்டம் குறித்து கூறுகையில்கடலூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒரு சில கட்சியினர் வீடு வீடாக வாக்களிக்க பணம் கொடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வாக்காளர்களுக்கு பணம் தரும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்ம். இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.ர் திடீரென நடந்த இந்த முற்றுகை போராட்டம் மாநகராட்சி அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திட்டக்குடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடியில் பறக்கும் படையினர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ராமநத்தம்- திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் திட்டக்குடி எம்எல்ஏ அலுவலகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அரியலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, ஆதனகுறிச்சி கிராமத்தைச்சேர்ந்த உமா (வயது35) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் எடுத்து சென்றார். இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    திட்டக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு விவசாயி.இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது.

    நேற்றிரவு அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சிஅளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    பண்ருட்டி அருகே மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து கோவில் திருக்குளத்தில் சிவாச்சாரியாரிடம் திதி கொடுத்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேகாக்கொல்லையில் களப்பாளீஸ்வரர் கோவிலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமகம் தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஐதீக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல மாசிமகம் தினமான இன்று திதி கொடுக்கும் அதிக நிகழ்வு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து கோவில் திருக்குளத்தில் சிவாச்சாரியாரிடம் திதி கொடுத்தனர்.

    இதற்காக அந்தகோவில் குளத்தினை பண்ருட்டிதுணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார்.
    வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இன்றுடன் பிரச்சாரம் ஓய்வடையும் நிலையில் நாளை வாக்குச்சாவடிகள் தயாராக வைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் வெற்றி யாருக்கு?- இறுதி கள நிலவரம்
    பண்ருட்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசில் சிக்கிய அக்காள்-தங்கையிடம் சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் பண்ருட்டி, சித்திரைச்சாவடி, கண்டரக்கோட்டை, கரும்பூர், பண்டரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் லட்சக்கணக்கில் ஏலச்சீட்டில் பணம் கட்டிவந்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு மாரிமுத்து திடீ ரென இறந்து விட்டார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர், அவரது வீட்டுக்கு சென்று மாரிமுத்து மனைவி தமிழ்செல்வியிடம் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார்கள். இதற்கு அவரது மனைவி தமிழ் செல்வி சரியான பதில் அளிக்கவில்லை.

    இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் தீர்வு கிடைக்காததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அவரது அலுவலகத்தை இழுத்து பூட்டினர்.

    மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்ட காவல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதில் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஏலச்சீட்டு பணம் கட்டி பாதிப்பு அடைந்து உள்ளோம். பணத்தை மீட்டு தரும்படி கூறியுள்ளார்கள். போலீசார் வழக்குபதிந்து திருவதிகையில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரிமுத்து மனைவி தமிழ்செல்வி சரியாக பதில் அளிக்காமல், கணக்கு பார்த்துவிட்டு தான் கூற முடியும் என கூறியுள்ளார்.

    ஆனால் பலமுறை வாடிக்கையாளர்கள் கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில் திடீரென தமிழ்செல்வி தன் வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி சென்றார். அவருடன் தங்கை ஹேமாவதியும் உடன் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி. அண்ணாதுரை, ஆய்வாளர் முரளி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இதில் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி அங்கு சென்று பதுங்கி இருந்த தமிழ் செல்வி (32), ஹேமாவதி (27) ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் 2 பேரும் பண்ருட்டி அழைத்து வரப்பட்டனர். அங்கு தமிழ்செல்விக்கு சொந்தமான 5 வீடு மற்றும் அலுவலகங்களில் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். இதில் 5 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஏலச்சீட்டு நடத்திய முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே தமிழ்செல்வி, அவரது தங்கை ஹேமாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சினை ஏற்படாமல் இருக்க பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர்.
    ×