என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காட்சி
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: போலீசில் சிக்கிய அக்காள்- தங்கையிடம் சொகுசு கார்- ஆவணங்கள் பறிமுதல்
பண்ருட்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசில் சிக்கிய அக்காள்-தங்கையிடம் சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் பண்ருட்டி, சித்திரைச்சாவடி, கண்டரக்கோட்டை, கரும்பூர், பண்டரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் லட்சக்கணக்கில் ஏலச்சீட்டில் பணம் கட்டிவந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு மாரிமுத்து திடீ ரென இறந்து விட்டார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர், அவரது வீட்டுக்கு சென்று மாரிமுத்து மனைவி தமிழ்செல்வியிடம் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார்கள். இதற்கு அவரது மனைவி தமிழ் செல்வி சரியான பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் தீர்வு கிடைக்காததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அவரது அலுவலகத்தை இழுத்து பூட்டினர்.
மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்ட காவல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதில் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஏலச்சீட்டு பணம் கட்டி பாதிப்பு அடைந்து உள்ளோம். பணத்தை மீட்டு தரும்படி கூறியுள்ளார்கள். போலீசார் வழக்குபதிந்து திருவதிகையில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரிமுத்து மனைவி தமிழ்செல்வி சரியாக பதில் அளிக்காமல், கணக்கு பார்த்துவிட்டு தான் கூற முடியும் என கூறியுள்ளார்.
ஆனால் பலமுறை வாடிக்கையாளர்கள் கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் திடீரென தமிழ்செல்வி தன் வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி சென்றார். அவருடன் தங்கை ஹேமாவதியும் உடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் டி.எஸ்.பி. அண்ணாதுரை, ஆய்வாளர் முரளி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இதில் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு சென்று பதுங்கி இருந்த தமிழ் செல்வி (32), ஹேமாவதி (27) ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் 2 பேரும் பண்ருட்டி அழைத்து வரப்பட்டனர். அங்கு தமிழ்செல்விக்கு சொந்தமான 5 வீடு மற்றும் அலுவலகங்களில் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். இதில் 5 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஏலச்சீட்டு நடத்திய முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே தமிழ்செல்வி, அவரது தங்கை ஹேமாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சினை ஏற்படாமல் இருக்க பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர்.
Next Story






