என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19 ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 437 பதவிகளுக்கான தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு அந்தந்த பள்ளிகள் இன்று, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் தற்போது முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியில் 100 மீட்டர் தூரத்தில் வெள்ளை கோடு போடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய விதியின்படி வேட்பாளர்கள், அவர்களுடன் உள்ள ஆதரவாளர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். மேலும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது மட்டுமன்றி வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இது மட்டுமன்றி 410 பதற்றமான வாக்குச்சாவடிகள் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.






