என் மலர்
கடலூர்
தென்காசி ஆகாஸ் நகர் பகுதியை சேர்ந்த 28 பக்தர்கள் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர்.
வேனை அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் (வயது 56) என்பவர் ஓட்டி சென்றார். கிரிவலம் முடிந்து திருவண்ணாமலையிலிருந்து தென்காசி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏ.கொளப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டர் மீது மோதாமலிருக்க வேன் ஓட்டுனர் சங்கரபாண்டியன் வேனை திருப்பும் போது, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விட்டது.
இதில் வேனில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிசம்பர் 3 இயக்கம், மாற் றுத்திறனாளிகள் புதுவாழ்வு சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் உள்ள மனைகளில் வீடு கட்டித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைவர் பொன் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மேரி, துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் அமரேசன், அறிவழகன் மற்றும் கருப்பாயி, மதுரவன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி வாணிபம் பகுதியை சேர்ந்தவர் ராமன். (வயது 31). இவரது மகள் யாசினி (5). சம்பவத்தன்று ராமன் வீட்டு முன்பு விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது அங்கு யாசினி விளையாடிக் கொண்டிருந்தார். அடுப்பில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த போது திடீரென்று தவறி யாசினி சுடு தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தார். உடலில் சுடு நீர் கொட்டி யாஷினி அலறி கத்தியதை பார்த்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி யாசினி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சரவணன், அவரது மனைவி சங்கரி ஆகியோர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர் நகரில் உள்ள பூர்வீக வீட்டுக்கு தங்குவதற்கு சென்றனர்.
அப்போது சரவணன் தம்பி முருகன் உள்ளிட்ட 4 பேர், சரவணன், சங்கரி ஆகியோர் தங்குவதற்கு இங்கு இடமில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் சரவணன் மற்றும் அவரது மனைவி சங்கரி ஆகியோரை கட்டையால் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தும் சங்கரியை மானபங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் சரவணன், சங்கரி ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் இது தரப்பினரும் தகராறு செய்து கொண்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் முருகன், ஆனந்தன், கீதா, வாசுதேவன், பேபி உள்ளிட்ட 6 பேர் மீதும், எதிர் தரப்பில் பேபி (72) கொடுத்த புகாரின் பேரில் சரவணன், சங்கரி மற்றும் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சிதம்பரத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வந்தனர்.
அவர்கள் இன்று காலை நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பொன்னாடை, மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர்.
பின்னர் கவர்னர், கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவில் குப்பைகளை பொதுமக்கள் வீசிச் செல்கின்றனர்.
இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கிடக்கின்றன. தமிழக அரசு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாலையோரத்தில் வீசப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பை அதிகளவில் இருப்பது வேதனை அளிக்கிறது.
மேலும் இந்த குப்பைகளால் கொசு உற்பத்தியாகி சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே அதிகாரிகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 28), கீழ்கவரப்பட்டைசேர்ந்த நதியா (35), தேஷ்மா (7), சுபித்ரா தேவி (19), அம்சவல்லி (25) ஆகியோர் ஆட்டோ ஒன்றில் பனப்பாக்கத்தில் இருந்து கீழ்கவரப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். ஆட்டோவை ஆதிமூலம் என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த ஆட்டோ பனப்பாக்க காலனியிலிருந்து சென்னை சாலைக்கு வரும் வழியில் வந்து கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டுபன்றிகள் ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதில் நிலைதடுமாறி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கம்,ஓரையூர், நல்லூர் பாளையம் பகுதிகளில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
விவசாய விளைநிலங்கள் காட்டு பன்றிகளால் பாழாகி வருகிறது. காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டி களை அச்சுறுத்துவதால் இரவு நேர போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன் குப்பம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் தனியாக அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்டு அங்கு வந்த தெருக்கூத்து கலைஞர் ஒருவர் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நபர் ஒருவர் வருவதைப் பார்த்த தெருக்கூத்து கலைஞர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்து கலைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய் என்பதும் அவர் கீழ்காங்கேயன்குப்பம் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் விழாவில் தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு வந்ததும் தெரியவந்தது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 84-வது பட்டமளிப்பு விழா வருகிற 18-ந் தேதி மாலை 4 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடை பெறுகிறது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
விழாவில் துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சீத்தாராமன், சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் அண்ணா மலைநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






