என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42). கொத்தனார் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (32). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.
ஆனந்துக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்று இரவு இதேபோல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் உருட்டுகட்டையால் தீபாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் தீபா உயிரிழந்தார். மனைவி இறந்தது தெரியாமல் போதையில் அவரது உடல் அருகிலேயே ஆனந்தும் படுத்து தூங்கிவிட்டார்.
இன்று காலை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ரத்த காயங்களுடன் தீபா பிணமாக கிடப்பதும், அருகில் ஆனந்த் தூங்கிகொண்டிருந்ததும் தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தை கைது செய்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தார்.
அப்போது ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ எனத்தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளை வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. அப்பர் கரையேறிய இடம் தான் இப்போது கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவிலில் இன்று அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார்.
தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது.
இதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக சென்று வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர்.
விழாவில் வண்டிப்பாளையம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியகாட்டுபாளையத்தில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பன்னீர், மாநில துணை செயலாளர் சரண், ஏழுமலை, ராம்பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மீனவ சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மண்டல் குழு பரிந்துரையின்படி மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் திரு முகம், தலைமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் சாரங்க பாணி, புதுவை மாநில அமைப் பாளர் மலையாளத்தான், நெய்தல் அரசு ஊழியர் பேரவை பொதுச் செயலாளர் செல்வம், தலைமை நிலைய செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைச் செயலாளர் ராமநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் ஆனந்தராஜ், அய்யப்பன், ஸ்ரீதர், கன்னியப்பன், பாஸ்கர், பழனிவேல், பெருமாள், குணசேகரன், ரவிச்சந்திரன், மணி, ராமகிருஷ்ணன், சதீஷ், மகேந்திரன், லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். முடிவில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதமன் நன்றி கூறினார்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகாவில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளது. கிராம தாய் பதிவேடு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில், மற்ற தாலுக்ககாளை விட வேப்பூர் தாலுக்கா பின் தங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கண்டித்துள்ளது.
இதனால், கடந்த 13-ம் தேதி நிலுவையிலுள்ள புள்ளி விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வி.ஏ.ஓ.க்களுக்கு வாட்ஸ் அப்பில் தாசில்தார் மோகன் உத்தரவிட்டார். இது குறித்து தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ.க்களுக்கு இடையே வாட்ஸ் அப்பில் வாக்குவாதம் நடைபெற்றது . அதில், வி.ஏ.ஓ.க்கள் தரப்பில் தாசில்தாரை ஒருமையில் பேசியதாகவும், தாசில்தார் தரப்பில் சில வி.ஏ.ஓ.க்களின் செயல்பாடுகளுக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதனால் தாசில்தார் மோகனின் செயல் பாடுகளை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று வி.ஏ.ஓ. கலையரசன் தலைமையில் அனைத்து வி.ஏ.ஓ.க்களும் வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், வேப்பூர் தாசில்தார் மோகனிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், இரண்டு தரப்பிலும் தங்களது செயல்பாட்டுக்கு வருத்தம் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ளது வெள்ளாறு. இந்த வெள்ளாற்றில் இன்று காலை 4 பேர் இரண்டு மாட்டு வண்டியுடன் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இந்த தகவலை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபோது போலீசார் வருவதை கண்ட நான்கு பேரும் 2 மாட்டு வண்டியையும் 2 மோட்டார் சைக்கிளையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டி 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குண்டியமல்லூரை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் பால சரஸ்வதி தலைமையில் விசாலாட்சி மற்றும் பெண்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஏரிக்கரை ஓரமாக கடந்த 3 தலை முறையாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். தற்போது அரசு சார்பில் ஏரி வெட்டுவதற்காக வீடுகட்டிய இடத்தை காலி செய்யகோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நாங்கள் கூலி வேலை செய்து வருவதால் சொந்தமாக வீடு நிலம் எதுவும் இல்லை. எனவே எங்களுக்கு வீடு கட்டி வாழ்வதற்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக பெண்கள் மனு கொடுக்க திரண்டதால் கலெக்டர் அலு வலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






