என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆதியூரை சேர்ந்த செல்வ ராஜ் (42) என்பவர் மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    பிரதாப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த பிரதாப் வடக்கிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டனர். இதனால் கோபமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 வார்டு ராமகிருஷ்ணா லே-அவுட் பகுதியில் சுமார் 40 சென்ட் இடம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது.

    இந்த இடம் மாநகராட்சியின் பூங்காக்கு சொந்தமான இடமாகும். இதனை அடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர்.

    இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.16 கோடி ஆகும். அந்த இடத்தில் உள்ள கட்டிடம் இடித்து பூங்கா பணிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. இதே போல அனைத்து ஆக்கிரமிப்பு பூங்காக்களையும் மீட்டெடுப்போம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • ரூ.40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார் அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார் இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் இன் புகார் செய்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்
    • பஸ் வரவழைத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை பேரூராட்சியில் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.

    அதுவும் அத்திப்பா ளையம் தொடக்கப்பள்ளி, இடிகரை தொடக்கப்பள்ளி, இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர்கள் படிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்து படிக்க வரும் மாணவ, மாணவிகள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை நடத்து வந்து அங்கு நிற்கும் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு வருகின்றனர்.

    மேலும் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நின்று விடுகிறார்கள்.

    மேலும் பள்ளி குழந்தைகள் நடந்து வரும் பகுதி காட்டு பகுதியாக உள்ளது.

    ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இடிகரை பள்ளி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காலை நேரத்தில் அரசு பஸ் ஒன்று ரங்கநாதர் பாலிடெக்னிக் அருகே வந்து நின்று செல்கிறது. அதுவும் சுமார் 20 நிமிடம் நிற்பதால் அந்த பஸ் எம்.ஜி.ஆர் நகருக்கு வரவழைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன் அடைவார்கள். மேலும் இது மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க உதவும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது
    • 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கோவை வேளாண் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான விதை உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர்.குமாரவடிவேலு தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் தேசிய விதை கழகத்தின் மண்டல மேலாளர் செல்வேந்திரன்,கோவை விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் பேசும்போது, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலமாக விவசாயிகள் உற்பத்தியை பெருக்கலாம். விதை நேர்த்திகள் செய்வதன் மூலமாக தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த முகாமில் தேசிய விதை கழகத்தின் மேலாளர் சிந்துஜா அனைவரையும் வரவேற்றார். இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
    • தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் பாலம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் லிங்காபுரம் கிராமம் உள்ளது.

    இங்கிருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலுர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பவானிசாகர் நீர்த்தேக்கத்தை தாண்டி செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் ஆண்டு தோறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கேரளா பகுதியில் பெய்து வரும் மழைநீர் பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் தேங்கி நிற்கும்.

    இதனிடையே வருடத்தில் 6 மாதங்கள் லிங்கபுரத்திலிருந்து காந்தவயல், ஆலுர், மேலூர், உலியூர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

    ஆனால் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் நீர் பிடிப்பு அதிகமாகும் போது பாலம் தண்ணீரில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப்பகுதி மக்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், தங்களது அன்றாட தேவைகளுக்கு சென்று வரவும் சாலை வசதி இல்லாததால் நீர் தேக்கத்தின் வழியாக பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி செலவில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    தற்போது இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனிடையே இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 வரை அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    இருகூர் மின்னூட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை அந்த பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னயம்பாளையம் (ஓரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி அய்யப்பனை தாக்கியது.
    • அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

     வால்பாறை,

    வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருபவர் அய்யப்பன் (57). இவர் நேற்று இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிசனில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி இவரை தாக்கியது. படுகாயம் அடைந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

    • க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    கோவை,

    கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மர்மநபர்கள் அதை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட நவக்கரையில் கொட்டினர்.

    இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கழிவுகளை கொட்ட வந்தவர்களை கையும், களவுமாக பிடித்ததோடு, க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சசூர் மாவட்டம் சோளக்கரையை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38), திருவள்ளாமலை அக்கபரம்பில்லை சேர்ந்த லியோ வர்கீஸ்(34) ஆகியோர் தலைமையில் 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கழிவுகளை ஏற்றி வந்த மினி வாகனத்தை மாவுத்தம்பதி ஊராட்சியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோழிகழிவுகளை ஊராட்சி பகுதியில் கொட்டியதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது மாவுத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

    அதுமட்டுமின்றி இனி மேல் கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து ஊராட்சியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் எச்சரித்தார்.

    • விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.
    • ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

    சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது. அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகையை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்.

    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.
    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும்.

    மேலும், பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சத்தியமங்கலம் வரதம்பாளையம் குள்ளன் காடு அபார்ட்மெண்ட் பகுதியைச்சேர்ந்த ரமேஷ்(30) என்பவர், தனது மேஸ்திரி பெரியசாமி மற்றும் நண்பர் சுப்பிரமணி உள்ளிட்டோருடன் கடந்த 23 -ந் தேதி வனபத்ர காளியம்மன் கோவிலில் நடைபெற்ற கிடாய் விருந்துக்கு வந்தனர்.

    அப்போது ரமேஷ், சுப்பிரமணியம் உள்ளிட்ட இருவரும் பவானி ஆற்றின் படித்துறையில் இறங்கி குளித்தனர். சுப்பிரமணி ஆற்றின் ஓரத்தில் குளித்து விட்டு வந்துள்ளார்.பின்னர்,குளிக்கச்சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, ரமேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் இளைஞர் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் சமயபுரம் மின் கதவனை அருகே பவானி ஆற்றில் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்,இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 -ந் தேதி மாயமான ரமேஷ் என்பது தெரியவந்தது. 

    ×