என் மலர்
கோயம்புத்தூர்
- வேறு நிறுத்தத்தில் இறங்கி கொள்ள ெசான்னதின் பேரில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் மோகன் பிரபு(17). பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.
இதற்காக மோகன்பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர், மோகன் பிரபுவிடம் பஸ் சிங்காநல்லூர் செல்லாது, ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு கூறினார்.
அதற்கு அவர் கண்டக்டரிடம் ஏன் தகவல் பலகையை மாற்றாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் மோகன் பிரபுவை தகாத வார்த்தைகளால் பேசினார். பஸ்சை நிறுத்தி எழுந்து வந்த டிரைவர், மோகன் பிரபுவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி இறக்கி விட்டு சென்றார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மோகன் பிரபு ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆனந்த கிருஷ்ணன், பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீேழ விழுந்து விட்டார்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
முரளி என்ற பெயிண்டர் தன்னுடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய 2 பேரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். 9.30 மணி அளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க தொடங்கினர். சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்தார். மற்ற இருவரும் கயிறை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழே விழுந்து விட்டார்.
நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்ததின் தலையின் பின் பகுதி சுவரில் மோதியது. காயம் அடைந்த அவரை உடன் வேலை பார்த்தவர்களோ, அக்கம்பக்கத்தினரோ மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஒரு மணி நேரத்துக்கு பின் 108 ஆம்புலன்சு அங்கு வந்து சந்திரனை மீட்டுச் சென்றது. அரசு ஆஸ்பத்திரியில் சந்திரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மனித நேயம் மறத்து போய் விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
- ரூ.6.80 லட்சத்துக்காக தந்த 5 காசோலைகளில் 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது.
- பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் அதனால் போலீசில் புகார் செய்தனர்
கோவை,
கோவை போத்தனூரில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையை சேர்ந்த ஆயில் கடை உரிமையாளர் அனித் நிர்மல் ராஜ் (43) என்பவர் ரூ.6.80 லட்சத்துக்கு ஆயில் வாங்கினார். பின்னர் அதற்கு உண்டான தொகைக்கு 5 காசோலைகளை நிறுவனத்தினரிடம் கொடுத்தார். அவர்கள் அந்த காசோலையை வங்கியில் செலுத்தி ரூ.2 லட்சம் எடுத்தனர்.
மீதமுள்ள 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது. இதனை தொடர்ந்து நிறுவனத்தினர் அனித் நிர்மல் ராஜிடம் நீங்கள் கொடுத்த காசோலைகளில் பணம் இல்லை. எனவே மீதமுள்ள ரூ.4.80 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்து ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அனித் நிர்மல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழை பெய்துள்ளது.
- 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் உள்ள பெள்ளாதி, மொங்கம்பாளையம், மொள்ளேபாளையம், சின்னத் தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை, கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழையும், குறிப்பாக அதில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 44 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெள்ளாதி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியதாவது:-
தொடர் கனமழையின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெள்ளாதி குளம் தற்போது நிறைந்து தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதனால் தங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும், குடிநீர் பற்றாக் குறை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குளத்தில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் எனவும், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும்.
அப்போதுதான் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் பாசன வசதியினை முழுமையாக பெற முடியும். எனவே, பொதுப்பணித்துறையினர் இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- 5 ஆயிரத்திற்கு லாபமாக ரூ.6,400 மேலும் பணம் கட்டியுள்ளார்
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. அதில், உள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார்.
அதன் மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணிகளை முடித்து கொடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றார். மேலும் ஆன்லைன் முதலீடு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் ரூ.5 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் முதலீடு செய்தார். அதற்கு லாபமாக சதீஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.6,400 வரவு வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக சதீஷ்குமார் ரூ.16.79 லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் அந்த மர்ம நபர் கூறிய படி லாப தொகை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தான் செலுத்திய ரூ. 16.79 லட்சத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர்.
தற்போது நகராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. தினசரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன்னர் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். ஆனால் அவர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த அவர்கள் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு சுமார் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் தங்களுடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காரமடை நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், வார்டு உறுப்பினர் குருபிரசாத், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏற்கனவே பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்,ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தங்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.606 சம்பளத்தையே வழங்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மோகன்பிரசாத் (வயது 26). ஐ.டி. ஊழியர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். மோகன் பிரசாத் தனது தந்தையிடம் காதலியை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் தங்கைக்கு திருமணம் முடிந்த உடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.இதன் காரணமாக மோகன் பிரசாத் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலியுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். காதலியை உடனடியாக திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இருந்த மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மோகன் பிரசாத் இறந்த தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மோகன் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தற்போது வரலாறு காணாத வகையில் அதிக கோடை மழை பெய்து, கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.
- கோவையில் நேற்றும், காந்திபுரம், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, லாலி ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் 30 ஆண்டுகளாக சராசரியை ஆய்வு செய்யும் போது இந்த ஆண்டில் பெய்த கோடை மழை, 109 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
குறிப்பாக கோவையில் 197 சதவீதம் கூடுதலாக கோடை மழை பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைக்காலத்தின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது வெப்ப சலன மழை பெய்வது இயல்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்களின் படி தமிழகத்தின் கடந்த 30 ஆண்டு கோடை மழையின் சராசரி 83.5 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
நேற்று காலை வரை தமிழகத்தில், 174.9 மி.மீ., மழை பெய்துள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில் அதிக கோடை மழை பெய்து, கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.
அதன்படி, கோவையில் நேற்று காலை வரை, 321.2 மி.மீ., கோடை மழை பதிவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டு சராசரி மழைப்பொழிவை ஒப்பிடுகையில் 197 சதவீதம் மழை பொழிவு அதிகமாக பதிவாகி உள்ளது.
கோவையில் நேற்றும், காந்திபுரம், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, லாலி ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
கோவையில் கோடை மழையின் 30 ஆண்டு சராசரி அளவு 108.1 மி.மீ., ஆக இருந்தது. தற்போது வரை மட்டும், 321.2 மி.மீ., மழை பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக, கோடை மழை சராசரி பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் இருந்தது. தற்போது, கோவை முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னும், 20 நாட்களுக்கு கோடை மழை இருக்கும் என்பதால் மழை பதிவு அதிகமாக வாய்ப்புள்ளது.
பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக சூடான காற்றால், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.
- மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (வயது 21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிருதுளாவுக்கு திப்பம்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாகவும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாக மிருதுளா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். எனவே அவர் தன்னுடைய காதலன் சென்ற இடத்துக்கே அவரும் செல்ல திட்டமிட்டார்.
சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மாணவியின் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு மாணவி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மிருதுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை கத்தியால் குத்தினர்.
- பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கோவை,
கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான 2 பேரும் மீதும் கஞ்சா விற்பனை , திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
- சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- நாளை பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
கோவை,
கோவை பீளமேடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
தொடர்ந்து நாளை (12-ந் தேதி) பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழாவும், 13-ந்தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடும் விழாவும், 14, 15, 16-ந் தேதிகளில் காலை, மாலை இருவேளை பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
16-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பும், இரவு கரகங்கள் அலங்கரித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந்தேதி ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து ஆண்கள், பெண்கள் பூவோடு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தடையும். காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், காலை 10.30 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை மாவிளக்கு பூஜையும் நடைபெறும்.
18-ந்தேதி காலை 11 மணிக்கு முத்தாலம்மன் திருவிழாவும், 19-ந்தேதி காலை 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு வசந்த பூஜை விழாவும் நடைபெறும்.
- சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
- பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கோவை,
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (36), சஞ்சய் குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த 2 ரவுடி கும்பல் தலைவர்களும் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிராக செயல்பட்டு மோதி வந்தனர்.
பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலரை இவர்கள் தங்களது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு மாணவர்களை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருந்த பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.
அவரை கொடிசியா பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்தனர். இனிமேல் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என அவரை மிரட்டி எச்சரித்தனர்.
இதேபோல பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த ஒரு மாணவரையும் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கடத்தி சென்றதாக தெரிகிறது. இவரையும் காட்டுக்குள் வைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.43 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சத்திய பாண்டி கொலை செய்யப்பட்ட பின்பு அவர் மீது போலீசார் முக்கிய குற்றவாளி என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.






