என் மலர்
கோயம்புத்தூர்
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
கவுண்டம்பாளையம்,
கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
- சாந்தினிக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் வன்னி மரத்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சாந்தினி (வயது 27). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சாந்தினிக்கும், ஆர்.வி.புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொண்டு வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தினி தனது வருங்கால கணவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அப்போது அவரது தந்தை நானே கொண்டு சென்று விடுகிறேன் என்றார். ஆனால் அவர் வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன் என்று கூறினார். பின்னர் சாந்தினி தனது தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் அவரை அவரது வருங்கால கணவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பிய சாந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து சாந்தினியின் தந்தை வடக்கிப்பாளையம் போலீசில் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
கோவை,
கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் வீரசிங். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 39). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து அவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான உறவினரான சுரேஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும்அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனையடுத்து பாண்டியம்மாள் கேரளாவில் இருந்து புறப்பட்டு தனது மகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார்.
இதனை தெரிந்து கொண்ட சுரேஷ்குமார் பாண்டியம்மாளை தேடி திருப்பூருக்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 4-ந் தேதி பாண்டியம்மாளின் வீட்டிற்கு தகராறு செய்தார். இது குறித்து அவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அதன் பின்னர் பாண்டியம்மாள் திருப்பூரில் இருந்த கருமத்தம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பாண்டியம்மாளை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த பாண்டியம்மாளை தன்னை ஏன் போலீசில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பினாய் என கூறி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தலை , கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாண்டியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
- தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.
வடவள்ளி,
கோவை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. இதனால் மாநகரம் மட்டுமின்றி புறநகரங்களிலும் அனல் வெயில் கொளுத்தி வருகிறது.
எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. இதனால் அனல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.கோவையை சுட்டெரித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் இரவு நேரம் வரையிலும் நீடிக்கிறது. எனவே வீட்டுக்குள் அனல் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் குளிர்ச்சி மிகுந்த தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைப்பழம் ஆகியவை செறிந்த நீராகாரங்களை அதிகம் விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.
எனவே கோவை காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.நுங்கு, பதநீர், இளநீர், ஆகிய நீர் ஆகாரங்களுக்கு உடல் வெப்பத்தை பெரும் அளவில் குறைக்கும் தன்மை உண்டு. எனவே பொதுமக்களின் பார்வை இப்போது இயற்கை சார்ந்த நுங்கு உள்ளிட்ட குளிர் ஆகாரங்களின் பக்கம் திரும்பி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. அவைகளில் இருந்து பதநீர், நுங்கு ஆகியவை தாராளமாக விளைந்து வருகிறது. தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.
எனவே கோவையில் பதநீர், நுங்கு சீசன் களை கட்ட தொடங்கி விட்டது. இயற்கையில் விளைந்த குளிர்ச்சி மிகுந்த பொருட்கள் என்பதால், மாநகரின் பெரும்பாலான இடங்களில் நுங்கு, பதநீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சாலையோரங்களிலும் நுங்கு வியாபாரம் களை கட்டி வருகிறது.
ஆண்-பெண் உள்ளிட்ட இருபாலர்களும் ரோட்டோர வியாபாரிகளிடம் நுங்கு, பதநீர் வாங்கி உற்சாகத்துடன் அருந்தி வருகின்றனர்.
- பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது46). தொழில் அதிபர். இவரது வீட்டில் கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஜோதி (46) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பொன்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது இவரது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் தங்க கட்டி திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்முருகன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவரது வீட்டில் தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடம் இருந்து 93 கிராம் எடையுள்ள தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை வெள்ளைகிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (60). இவர் நடத்தும் கடையின் வாடகையை கொடுப்பதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலில் இருந்து கீழே இறங்கிய அருணகிரி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் பணத்தை பறித்து சென்றதை அறிந்த அவர் உடனடியாக இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
- பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை,மேட்டுப்பாளையம்,சிறுமுகை மட்டுமல்லாது பொள்ளாச்சி,நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.
இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு ஆறுக்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. இப்பணிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர ஆய்வுப்பணியில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில் விவசாயிகள் தங்களது பட்டா,சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். தற்போது கொப்பரை தேங்காய் ரூ.108.60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காயினை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளதாகவும், இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனவும், ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். எனவே இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
- கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.
- வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கவுள்ளது.
வால்பாறை,
வால்பாறையில் வருகிற 26-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
மலைச்சரிவுகளில் பச்சைப் பசேல் என கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால், தினசரி ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி மேற்பார்வை யாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வால்பாறையில் வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடத்துவது என்றும், கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், காவல்துறை சார்பில் நாய் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனி கண்காட்சிகள் நடத்துவது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் கோடை விழா நடத்தப்படுவதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காரில் வந்த கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கவுசல்யாவின் சுடிதார் சிக்கி கொண்டது.
- பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஹட்கோ காலனியை சேர்ந்த கவுசல்யா (வயது 38) என்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம கும்பல் நகைபறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி, அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் கவுசல்யாவிடம் காரில் வந்த கும்பல் நகை பறிப்பில் ஈடுபட்ட குலைநடுங்கச் செய்யும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. பீளமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு கவுசல்யா நடந்து வருகிறார். அப்போது அவரை ஒரு கார் பின்தொடர்ந்து வருகிறது. அதில் 3 பேர் இருப்பதாக தெரிகிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு கவுசல்யா வந்தபோது காரின் முன்சீட்டில் இருந்த மர்ம வாலிபர் நகைப்பறிப்பில் ஈடுபட்டு உள்ளான். அப்போது தங்கச்சங்கிலி உடன் சுடிதார் துப்பட்டாவும் சிக்கி கொண்டது. எனவே கவுசல்யா தரதரவென்று காருடன் இழுத்து செல்லப்பட்டார்.
அப்போது அவரது தலை பின்சக்கரத்துக்கு மிகவும் அருகே இருந்தது. கவுசல்யா, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளார். பட்டப்பகலில் சம்பவம் நடந்ததால், அங்கு பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே கொள்ளை கும்பல் பயந்துபோய் கவுசல்யாவை பிடியில் இருந்து விடுவித்து உள்ளது. இதனால் அவர் காரின் பின்சக்கரத்தில் சிக்கி கொள்ளாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்து உள்ளார்.
கவுசல்யா வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும்போது சேலை அணிந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று அவர் வழக்கத்துக்கு மாறாக சுடிதார் அணிந்து இருந்தார். காரில் வந்த கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கவுசல்யாவின் சுடிதார் சிக்கி கொண்டது. எனவே அவர் கிட்டத்தட்ட மரண போராட்டம் நடத்தி தங்கச்சங்கிலியை காப்பாற்றி கொண்டு உள்ளார்.
வழிப்பறி கும்பல் வந்த காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்து உள்ளது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் வழிப்பறி வாகனம் தப்பி சென்ற போக்குவரத்து சாலைகளில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் அந்த கார் சிங்காநல்லூர் நோக்கி வேகமாக சென்று தப்பியது தெரிய வந்து உள்ளது.கவுசல்யாவின் கணவர் ராஜ்குமார் கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கணவன்- மனைவி இருவரும் தினந்தோறும் ஹட்கோ காலனியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதனை வழிப்பறி கும்பல் பல நாட்களாக நோட்டம் பார்த்து வந்து உள்ளது.
இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று நடைபயிற்சிக்கு வரவில்லை. எனவே கவுசல்யா மட்டும் தனியாக புறப்பட்டு சென்று உள்ளார். அப்போதுதான் வழிப்பறி கும்பல் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுவரை மோட்டார் சைக்கிளில் மட்டுமே வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர் இப்போது காரிலும் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஒரு நேர போராட்டத்துக்கு பிறகு படுகாயம் அடைந்த பாதிரியார் டேவிட் ஐசக் மற்றும் அஸ்வின் பிரபாகரன் ஆகியோரை மீட்டனர்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிஷன் காம்பவுண்டை சேர்ந்தவர் டேவிட் ஐசக் (வயது 67). இவர் அங்குள்ள பெதஸ்தா தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார்.
நேற்று இவர் தேவாலய ஊழியர் சீமான் வீதியை சேர்ந்த அஸ்வின் கிருபா கரன் (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அஸ்வின் கிருபாகரன் ஓட்டி வந்தார்.
மோட்டார் சைக்கிளில் கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவு பவானி காட்சி முனை அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ஒரு நேர போராட்டத்துக்கு பிறகு படுகாயம் அடைந்த பாதிரியார் டேவிட் ஐசக் மற்றும் அஸ்வின் பிரபாகரன் ஆகியோரை மீட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாதிரியார் டேவிட் ஐசக் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அஸ்வின் கிருபாகரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
- சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணமாகி கணவரும் 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று நானும் எனது கணவரும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றோம். வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் எங்கள் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சந்தோஷ் (வயது 23) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
நான் வந்ததும் எனது மகள் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினார்
- அமர்ந்தநிலையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்
சூலூர்,
சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர் காங்கேயம்பாளையத்தில் உள்ள டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மாக்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ராஜேந்திரன் பிணமாக தொங்கினார். அவரது உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது.
சூலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சூலூர் போலீசார் ராஜேந்திரன் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜேந்திரன் உடல் தரையில் முட்டி போட்டு அமர்ந்தநிலையில் இருப்பதால் அது தற்கொலையாக இருக்க முடியாது எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.






