என் மலர்
கோயம்புத்தூர்
- காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
- பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.
கோவை:
கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.
இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.
இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.
காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.
இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.
இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.
இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சூலூர்,
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.
- எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்
கோவை,
கோவை-அவினாசி சாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
குறிப்பாக சேலம் மற்றும் திருப்பூரில் இருந்து கோவைக்கு வரும் புதிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் லட்சுமி மில் சிக்னல் வரை சாலையில் ஆங்காங்கே யூடன் முறை அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்து மாற்றம் செய்வதற்காக ஆங்காங்கே சாலைகளில் யூடன் முறை அமைக்கப்பட்டுள்ளதால் கோவை விமான நிலையம் சிக்னல் முதல்-லட்சுமி மில் சிக்னல் வரை இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகுகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
பாலம் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தக் கட்டுமான பணி எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் கட்டப்படுவதைத்தான் கண்டிக்கிறோம்.
பாலப் பணிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டி–ருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்ற முன்னறிவிப்பு பலகை எதுவும் முறையாக வைக்கவில்லை.
அத்துடன் கட்டுமானப்பணிகள் நடைபெறும் சாலையில் போதிய பாதுகாப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவை-அவிநாசி சாலையில் பயணம் செய்யும் புதிய வான ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.
இங்கே மட்டுமல்லாமல் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பாலம் கட்டுமான பகுதிகளிலும் இதுபோல் முன்னெச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் இல்லாததால் பல விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
- கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்கிறது.
கோவை,
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை வருமானவரித்துறை அணியை எதிர்த்து இந்தியன் ரெயில்வே அணி விளையாடியது. இதில் வருமானவரித்துறை அணி 67-58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்தபடியாக ஆண்கள் பிரிவுக்கான 2-வது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 86-77 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வருமானவரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.
இதேபோல சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெண்கள் பிரிவு அரையிறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணியை எதிர்த்து, ஹுப்ளி தென்மேற்கு ரெயில்வே அணி விணையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 92-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து பூனே மேற்கு ரெயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 64-61 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் அணியில் கேரளா மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்க உள்ளது.
- காயம் அடைந்த இளங்கோவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
- இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை,
குனியமுத்தூர் அருகே குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருரை, இளங்கோவன் கடந்த சில நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்தார்.
தினமும் இளம்பெண் செல்லும் இடங்களுக்கு சென்று அவரிடம் காதலிக்குமாறு கூறினார். இதில் கோபம் அடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இளங்கோவனை கண்டித்தனர்.
பின்னர் கடந்த சில நாட்களாக இளங்கோவன் இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார், இதனை பார்த்த இளங்கோவன் அவரிடம் மீண்டும் பேசுவதற்கு முயன்றார்.
இதில் மேலும் கோபம் அடைந்த இளம்பெண் அவரது உறவினர்களான கோவையை சேர்ந்த விவேக் (27), பார்திபன் (28) ஆகியோரிடம், தன்னை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து காதலிப்பதாக தொல்லை தருகிறார் என தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் இளங்கோவனை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என கூறினர்.
பின்னர் இளங்கோவன் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த விவேக் மற்றும் பார்திபன், இளங்கோவனிடம் ஏன் எங்கள் வீட்டு பெண்ணிடம் பேசுகிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதில் அவர்களுக்கு இடை யே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் மற்றும் பார்திபன் இளங்கோவனை தகாத வார்தைகளால் பேசி கீழே கிடந்த முள் கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த இளங்கோவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், விவேக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.
- விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் தீர்த்தகுடம் மற்றும், முளைப்பாரியும் எடுத்து வந்தனர். கும்பாபிஷேக விழாவினையொட்டி கோபூஜை,தனபூஜை, அணுக்கை,மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம்,அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்து வந்தது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதனை யொட்டி 6-வது கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றிய போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்று மாலை திருக் கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், கராமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம்,செயல் அலுவலர் லோகநாதன்,காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்னராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
- ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அருகே செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது.
திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை முதலாம் கால பூஜையும், மாலையில் இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நவக்கிரக ஹோமம், 4-ம் கால ஹோமங்கள், அஷ்டபந்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 3.35 மணிக்கு 5-ம் கால ஹோமங்கள், 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7.30 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 7.45 மணிக்கு செல்வ விநாயகர், பாலமுருகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8.30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையொட்டி மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை 108 விநாயகர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், கோவை மாவட்ட அறங்காவலர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
- மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம் கடிதம் எழுதி விட்டு மாயமானார்.
- பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. மாலையில் பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் மாணவி இல்லை.இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம். நான் நன்றாக படிப்பேன். நன்றாகவே இருப்பேன்.
என்னை காணவில்லை என கூறி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டாம் என எழுதி இருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. திரும்ப, திரும்ப அழைத்தும் எடுக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாகவும், இதனால் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவி உசிலம்பட்டி தான் சென்றிருக்கிறாரா? அல்லது வேறு எங்காவது சென்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.
- குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
- ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மகன் முருகேசன்(வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி காளிஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகேசனை அவரது மனைவி காளீஸ்வரி பிரிந்து சென்றார். இதனால் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்ற பிறகு முருகேசன் ராசு கவுண்டன் தோட்டத்தில் தனது உறவினரான சிவராசு என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மனைவி பிரிந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் குடித்து கொண்டு தோட்டத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்று முருகேசன் மது குடித்து விட்டு, தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கிணற்று மேட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதில் தண்ணீரில் மூழ்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியிடம், விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
- இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம்,
கோவை சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தையினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.
இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் (28) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மாணவியிடம் சென்று அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று,விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதனால் மனம் நொந்துபோன சிறுமி நேற்று தனக்கு நடந்த சம்பவங்களை தந்தையிடம் கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியான அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
- போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
வடவள்ளி:
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).
இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.
2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.
இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.
பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.
இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.
ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.
இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.
இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.
அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.
உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.
அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.
போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.
இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.






