search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணம் ஆன 21 நாளில் கொடூரம்- வேறு பெண்ணுடன் பேசியதை தட்டி கேட்டதால் மனைவியை கொன்ற கணவர்
    X

    கைதானவர்கள்

    திருமணம் ஆன 21 நாளில் கொடூரம்- வேறு பெண்ணுடன் பேசியதை தட்டி கேட்டதால் மனைவியை கொன்ற கணவர்

    • பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).

    இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.

    இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.

    ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.

    இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.

    இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.

    அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.

    உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.

    அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.

    போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.

    இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×