என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மாவட்டத்திலுள்ள 2,512 குளங்களில் 1971 குளங்கள் நிரம்பிவிட்டன.
    • அனுமந்தபுரம், கொப்பளான் ஏரி உடைந்தன.

    தாம்பரம் :

    கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 துப்பணித்துறை ஏரிகளில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 293 ஏரிகள் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் முக்கிய விவசாய பாசன ஏரிகளான திருக்கழுக்குன்றம் பி.வி. களத்தூர் ஏரி. திருப்போரூர் மானாமதிஏரி. சிறுதாவூர் ஏரி. தையூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின‌

    செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்போரூர் காயார் ஏரி, கொண்டங்கி ஏரி, செய்யூர் பல்லவன் குளம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது

    மாவட்டத்திலுள்ள 2,512 குளங்களில் 1971 குளங்கள் நிரம்பிவிட்டன

    ஏரி குளங்களில் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் விவசாய நிலங்களில் புகுந்தது.

    தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையிலேயே முழு கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் தற்போது மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையினால் மீண்டும் கொப்பளான் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி உடைந்துள்ளது.

    இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள 97 ஏக்கர் விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் இதனால் அங்கு விரைந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கனமழை தொடர்வதால் கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் பாலாற்றின் கரையோரம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு்ள்ளது.

    பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், ஆற்றை கடக்கவும் ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் இறங்க வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளை பாலாற்றங்கரையில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகே செல்லாமல் இருக்க பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
    • புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.

    பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது.
    • மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70). இவர் இன்று காலை உறவினர் வீட்டிற்கு செல்ல மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.

    இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை சரிசெய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
    • புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

    அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் மின் கம்பம் சாய்ந்தது, கொக்கிலமேடு, பேரூர் பகுதியில் மரம் சாய்ந்தது, வெண்புருஷம் பகுதிகளில் கடல் அரிப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது.
    • செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி.பிரதீப், சிறப்பு பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் "மாண்டஸ்" புயல் கரையை கடப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி.பிரதீப், சிறப்பு பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை புயல் வலுவிழந்து கரை கடந்ததால் அதிகளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    இருப்பினும் மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் மின் கம்பம் சாய்ந்தது, கொக்கிலமேடு, பேரூர் பகுதியில் மரம் சாய்ந்தது, வெண்புருஷம் பகுதிகளில் கடல் அரிப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது. இதில் பாதிப்படைந்த அப்பகுதி மக்களை தற்காலிகமாக முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் மூன்று வேளை உணவுகளை மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், கவுன்சிலர்கள் சுகுமார், மோகன்குமார், தேவிராமன் உள்ளிட்டோர் வழங்கி வருகிறார்கள்.

    மேலும் புயல் நிவாரணம் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    • ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை.
    • தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற 6, ஏகாம்பரனார் தெரு (புதிய பஸ் நிலைய பின்புறம்), வேதாசலனார் தெரு, செங்கல்பட்டு என்ற முகவரியில் அமைந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் சதாசிவம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் சதாசிவம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் அடுத்த அருங்கால் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு காரணைப்புதுச்சேரி அருகே காட்டுப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 வாலிபர்கள் சதீஷ்குமாரை வழிமறித்து அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சதீஷ்குமார் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் அருங்கால் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் அருங்கால் வனப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன விஜய் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டார். இது குறித்து விஜய் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
    • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.

    இதனால் இன்று (10-ந் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • மாண்டஸ் புயலினால் தாம்பரம் பகுதியில் அதிகபட்சமான மழை பதிவானது.
    • புயலினால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தது.

    தாம்பரம்:

    மாண்டஸ் புயலினால் தாம்பரம் பகுதியில் அதிகபட்சமான மழை பதிவானது.

    இந்த புயலினால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தது.

    இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அதேபோல தாம்பரம் சுரங்கப்பாதை, வள்ளல் யூசுப் நகர், லட்சுமி நகர், ஜெயேந்திர நகர், திருமலை நகர், தாம்பரம் காசநோய் மருத்துவமனை என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புயல் காரணமாக நேற்று இரவு முதல் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மழை பாதிப்பு பகுதிகளை வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜான் லூயிஸ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது.
    • குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளன. குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தாம்பரம் தண்டவாளம் அடியில் அமைக்கப்பட்டு உள்ள மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் செல்கின்றன.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மின் மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் அரசின் முன்னேற்பாடுகளால் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை.

    மாமல்லபுரம்:

    மாண்டஸ் புயல் தீவிர புயலாக இருந்து பின்னர் வலுவிழுந்தது. இதனால் நேற்று நள்ளிரவு கரையை கடந்தபோது புயலாகவே அது கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்ததால் 100 கி.மீ.க்கும் அதிகமாக காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அப்படி காற்று வீசினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தீவிர புயல், புயலாக வலுவிழந்து கரையை கடந்தது.

    அதே நேரத்தில் தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது. புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் அரசின் முன்னேற்பாடுகளால் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது.

    முன் கூட்டியே உயரமான இடத்தில் உள்ள பெயர் பலகைகளை கண்டறிந்து அவைகளை அப்புறப்படுத்தியதுடன், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    அதே நேரத்தில் சென்னையிலும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை.

    இப்படி முன் கூட்டியே அரசு நிர்வாகம் முழு வீச்சில் களம் இறங்கியதாலும், நள்ளிரவில் புயல் கரையை கடந்ததாலும் சென்னை மாநகரும் பாதிப்பில் இருந்து தப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×