என் மலர்
செங்கல்பட்டு
- தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து ஆர்பாட்டம்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே இன்று செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, ஒன்றிய கழகம் மற்றும் மாமல்லபுரம் அ.தி.மு.க வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் அரசு பஸ், கார், வேன் போன்ற வாகனங்களை நகருக்குள் விடாமல் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் வியாழக்கிழமை நடத்த மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் வியாழக்கிழமை நடத்த மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது.
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டி மின் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பாவினி அதிவேக அணுஉலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் இந்திய ராணுவம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு கட்டுப்பாட்டில் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ஏதேனும் அணுக்கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அங்கு பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களும் எப்படி வெளியேற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை மற்றும் அதற்கான பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வளாகத்தில் நடைபெறும்.
இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது. முதலில் அவசர ஒலி எழுப்பப்பட்டது. பணி நேரம் முடிவதற்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர். இதை பார்த்த சதுரங்கபட்டினம், வெங்கம்பாக்கம் பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர். பின்னர் இது ஒத்திகை என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.
- படகு, வலை, மிஷின் சேதங்களை ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் கணக்கிட்டு கூறினர்.
- மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் "மாண்டஸ்" புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர் படகு, வலை, மிஷின் சேதங்களை கணக்கிட்டு அவரிடம் கூறினர்.
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ கூறினார். பின்னர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் சென்று, அனைத்து மீனவர் பகுதி சேதங்கள் குறித்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன், கவுன்சிலர்கள் சுகுமாரன், சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
- தேவையான பிலிம் ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் மற்றும் தொடர் மழையால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
அமெரிக்காவில் இருந்து மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணி தாமஸ் என்பவர் டிஜிட்டல் கேமரா, ஆன்ட்ராய்டு போன் எதுவும் பயன்படுத்தாமல் 1990களில் பயன்படுத்திய பிலிம்ரோல் கேமராவை பயன்படுத்தி புராதன சின்னங்களை படம் எடுத்தார். இங்கு பிலிம் ரோல் கிடைக்காது என்பதால் தேவையான ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார். அவருக்கு மதன் என்ற உள்ளூர் வழிகாட்டி உதவினார். பழமை மாறாத அமெரிக்க இளைஞர் தாமசை பார்த்து மற்ற பயணிகள் வியப்படைந்தனர்.
- செய்யூர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதுப்பட்டு ஏரியை பார்வையிட்டனர்.
- புதுப்பட்டு ஏரியன் கரைமுழுவதையும் அதிகாரிகள் பார்வையிட்டு பலப்படுத்த தேவயைான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ள புதுப்பட்டு ஊராட்சியில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியால் சுற்றி உள்ள சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன.
தொடர்ந்து பெய்த கன மழையால் புதுப்பட்டு ஏரி முழுவதும் நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஏரியின் மதகு அருகே கரை திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது.
இதனால் ஏரி அருகே உள்ள சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஏரியின் கரை உடைந்தது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்தாஸ், பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். செய்யூர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதுப்பட்டு ஏரியை பார்வையிட்டனர். உடந்த கரையை அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுப்பட்டு ஏரியன் கரைமுழுவதையும் அதிகாரிகள் பார்வையிட்டு பலப்படுத்த தேவயைான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
- பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவான "மாண்டஸ்" புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கல்பாக்கம் அருகே உள்ள கடலோர பகுதிகளான உய்யாலிகுப்பம், புதுபட்டினம்குப்பம் போன்ற பகுதிகளை இன்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மாவட்ட செயலாளர் சுந்தர், மீன்வளத்துறை கமிஷனர் பழனிசாமி மற்றும் அதிகாரிளுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் உய்யாலிகுப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து மீனவர்கள் பகுதிகளிலும் கிராமங்ககளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைப்பது போன்ற திட்டங்கள் இருந்தாலும் நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு உள்ளது, அது சரியானதும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உய்யாலிகுப்பம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்ட அமைச்சர் அங்கிருந்து செய்யூர் வட்டம், கடலூர், சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்.
- மாணவர்களுக்கு வினா, விடை, ஆராய்ச்சி கட்டுரை, படவிளக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்திய கதிரியக்கவியலாளர் சங்கத்தின் தலைவர் முனிரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் "கதிரியக்கம் பிரிவில் மாற்றம் ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச கதிரியக்கவியல் தேசிய கருத்தரங்கம் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது., இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், டெக்னிஷியன்கள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு வினா, விடை, ஆராய்ச்சி கட்டுரை, படவிளக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்திய கதிரியக்கவியலாளர் சங்கத்தின் தலைவர் முனிரத்தினம், பொது செயலாளர் மாரிமுத்து, சேலம் காவேரி மருத்துவமனை கதிரியக்க ஆலோசகர் டாக்டர் சந்தோஷ்குமார், சாய்கிரன், துளசிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்., துறையின் பேராசிரியை கலைவாணி, இன்பசாகர், ஆண்டனிரூபன், நிகிதா, சகினா, ஜஸ்வன்தினி ஆகியோர் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது.
- பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த "மாண்டஸ்" புயலானது மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி, தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் மீனவர் கிராமங்களை தாக்கியது. இதில் கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது. சில பகுதிகளில் வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.
இப்பகுதி பாதிப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் கௌதமன், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, சதீஷ்குமார், மோகன்குமார், தேசிங்கு, இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது துண்டில் வளைவு அமைகக் வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவர் கிராமம் சேதங்களை ஆய்வு செய்து, கணக்கிட்டு அதன் விபரங்களை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும். இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
- முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார்.
மாமல்லபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீன்பிடி சாதனங்கள், படகுகள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். உய்யாலிகுப்பம் கிராமத்தில் சேதத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் இந்தப் பகுதி கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டது என்று மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், எஸ்.வந்த்ராவ், ராகவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாவூர் பழைய சீவம் அணைக்கட்டில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் மற்றும் வாயலூர் தடுப்பணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வழிந்தோடுகிறது.
மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம்.
மேலும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமியர்களை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்று பகுதியில் தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கடலை நோக்கி பாய்ந்து வருகிறது.
மேலும் இன்று காலை முதலே மழையும் பெய்து வருவதால், நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கூடுதலாக கண்காணித்து, கரையோர பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.






