என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

    அரியலூர்,

    அரியலூரில் செந்துறை ரோடு புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் தொகுதி பொறுப்பாளர் சல்மா, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி,தலைமைசெயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்டதுணை செயலாளர் சந்திரசேகர், லதாபாலு, நகர செயலாளர் முருகேசன், கருணாநிதி, இளைஞரணி துணைஅமைப்பாளார் லூயிகதிரவன், வக்கீல் சசிகுமார், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அறிவழகன், செந்துறை செலர்வராஜ், எழில்மாறன், திருமானூர் கென்னடி, அசோகசக்கரவர்த்தி,

    ஆண்டிமடம் கலியபெருமாள், முருகன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன் தா.பழுர் சௌந்தர்ராஜன், கண்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:-தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்கிய மாமனிதர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரும் குடும்ப விழாவாக கருதிட வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழாவைகொண்டாடுவது நமது அனைவரி ன் கடமையாகும்.மற்ற மாவட்டங்களைவிட அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கொடிக்கம்பங்கள் அமைத்து கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    • அரியலூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட காரணமான தி.மு.க.வை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும்க ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், முன்னாள் அரசுவக்கில் குலோத்துங்கன், சண்முகம், சாந்தி, மாணவரணி சங்கர்,மகளிரணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், வக்கில்அணி வெங்கடாஜலபதி, சிறுபான்மைபிரிவு அக்பர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் சிவபெருமாள், ஒன்றியசெயலாளர்கள் பாலு, செல்வராஜ், நகர செயலாளர் செந்தில், நகர பொருளாளர் கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, ஜெயங்கொண்டம் தங்கபிச்சமுத்து, செல்வராஜ், வக்கீல் கோபாலகிருஷ்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    • அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது
    • கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர்.மேலும் காணொளி காட்சி வாயிலாகவும் வேலைவாய்ப்பு பயிற்சிதுறையால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதேபோன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் இணையதளம், கல்வி தொலைக்காட்சி, யுடியூப் சேனல் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு பாடக்குறிப்புகள், முந்தைய தேர்வுகளின் வினாத்தாள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களும் இதுபோன்ற பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றிப் பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) கலைசெல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் மு.செல்வம், கல்லூரி முதல்வர் (பொ) ஜோ.டொமினிக் அமல்ராஜ், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் தனி நபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண் கடன், ஆண்களுக்கான நுண் கடன் மற்றும் கறவை மாட்டு கடன் ஆகிய பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

    விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது காலக்கடன்/தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 6 சதவீதம் முதல் 8 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தில் ஆடவர், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. டாப்செட்கோ திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு கிளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற்று பயன்பெறலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தா.பழூர் அருகே ரூ.48.81 லட்சத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது
    • இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி கிராமத்தில் இருந்து சோழமாதேவி செல்லும் மண் சாலையை விவசாய பயன்பாடுகளுக்காக மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2022-23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டங்களின் கீழ் ரூ.48 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சுமதி, இளநிலை பொறியாளர் சரோஜினி, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா நடராஜன், துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது என அறிவிக்கபட்டுள்ளது
    • கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (மே.30) முதல் நடைபெறுகிறது. நாளை (மே.30) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன்.1-ம் தேதி வணிகவியல் (பி.காம்.,), ஜூன்.2-ம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், ஜூன்.5-ம் தேதி மொழிப்பாடம் (பி.ஏ.,) தமிழ், ஆங்கிலம், ஜூன்.6-ம் தேதி (பி.ஏ.,) வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இணைய வழி விண்ணப்பத்தின் நகல், 10, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் –2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்களுடன் பெற்றோருடன் நேரில் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அரியலூர்:

    கடலூரிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சி.ஐ.டி.யு. குழுவினருக்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை செயல்படுத்துதலை கைவிட வேண்டும். தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்தக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் அரியலூர் மாவட்டம் வந்தடைந்த நிலையில், அரியலூர் அண்ணா சிலை அருகே அவர்களுக்கு அரியலூர் மாவட்ட சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. பின்னர், திருமானூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு திருமானூர் கிளைச் செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.

    • உடையார்பாளையத்தில் இளம் பெண் மாயமானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் பார்கவி(வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பார்கவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவரது தாய் கோமதி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.

    • அரியலூர் பகுதிகளில் கத்தி முனையில் நகை, பணம் பறித்த 3 பேர் அதிரடி கைது செய்யபட்டார்
    • போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26). இவர் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வண்ணாங்குட்டை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் (குற்றப்பிரிவு) தலைமையிலான போலீசார், அன்று பிற்பகல் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் பதில் அளித்ததையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த நித்தியானந்தம் (26), பூனைக்கன்னித் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

    இதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பதும், கடந்த 7.4.2023 அன்று அரியலூர் பல்லேரி கரை அருகே நடந்துச் சென்ற செல்வியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரிந்தது. இதே போல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி போன்ற பல்வேறு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உடையார்பாளையத்தில் டிராக்டர் மோதி மின்கம்பம் விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்
    • புகாரின் பேரில் எஸ்.ஐ. திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் லல்லுபிரசாத் (வயது 25). இவரது தம்பி சிவராமன் (20). இவர்கள் இருவரும் உடையார்பாளையம் டீ கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம்-திருச்சி மெயின் ரோட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி பு.ஆதனூர் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கரும்பு ஏற்றி ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாரா விதமாக சாலை இடது புறத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

    இதில் மின் கம்பம் சேதமடைந்து சிவராமன் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சிவராமனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லல்லுபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • ஜெயங்கொண்டம் அருகே ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் தேவாமங்கலம் கிராமத்தில் ரூ.58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.44 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வ.உ.சி.நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வடுகனேரி வாரியில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நல்லணம் காலனி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்ட காளை, போட்டியை கண்டு களித்த ரவிச்சந்திரனை முட்டியது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் மனைவி விசாலாட்சி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×