என் மலர்
அரியலூர்
- அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது
- 37 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
அரியலூர்,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது.சோழர்கால பேரரசிற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார்கள் ஆட்சி செய்து வந்தனர். சுமார் 600ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஜயஒப்பில்லாத மழவராயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீஅருந்தவநாயகி உடனுறை ஸ்ரீஆலந்துறையார் கோவில் கட்டப்பட்டது. 1808 ஆம் ஆண்டுக்கு பின்னர் 1986 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதை கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிந்தது.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்து வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை, ஓம்நமசிவாய திருப்பணிக்குழு, ஸ்ரீநரசிம்மா டிரஸ்ட் இணைந்து பொதுமக்கள் பங்களிப்போடு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீப விளக்கு பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நான்கு கால பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் அனைத்து விமான கலசத்திற்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டடு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்பு பொங்கல், பிரசாதங்கள்,குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷே விழாவில் அரியலூர் நகரம், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சிவதொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- விண்ணப்பங்களை வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் மணிமேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விருதுகள் பெற்றிட தகுதி வாய்ந்த மேற்கண்ட அமைப்புகளிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதுகுறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம் கிடந்தது
- இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வீரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பருத்தி வயலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனிடம் தகவல் தெரிவித்தனர். மணிமாறன் தா.பழூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் தனவேல். இவரது மகன் பிரசாத் (வயது35). இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை இவரது மனைவி திலகவதியும், தந்தை தனவேலும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரசாத் கேனில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பிரசாத் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது
அரியலூர்,
உலக புகையிலை இல்லா தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட சமூகப் பணியாளர் வைஷ்ணவி, திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் ஆகியோர் ஹான்ஸ், பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.
பின்னர் அனைவரும் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் நடராஜன், மக்கள் நல பணியாளர் ஜோதிமணி, பணித்தள பொறுப்பாளர்கள் வெண்ணிலா, சங்கீதா மற்றும் கிராம பொதுமக்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சிவராமன் செய்திருந்தார். இதே போல் அரியலூரை அடுத்த சிறுவளூர் கிராமத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து தலைமை வகித்தார்.
கருப்பூர் பொய்யூர் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பழனியம்மாள், வார்டு உறுப்பினர் பூங்காவனம், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, ஆசிரியர் கோகிலா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், ஊராட்சி செயலர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் நல பணியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி பகுதி சாலையோரத்தில் இன்று காலை உடல் முழுவதும் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அவர் சுடிதார் அணிந்திருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண் யார், உள்ளூரை சேர்ந்தவரா, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இளம்பெண் யாராவது மாயமாகி இருககிறார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.
அரியலூர்,
அரியலூர் நகராட்சியின் பஸ் நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் புறவழிச்சாலையில் தற்போது தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பார்வையிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக கட்டிடங்களை விரைவாக அகற்றிடவும், கல்லூரிகளில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதற்கான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர், அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
- புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்பர் தெருவை சேர்ந்த குகன் மகள் ஹரிப்பிரியா(வயது21).இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிப்பிரியா கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் ஹரிபிரியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அவரது தந்தை குகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.
- அரியலூர், ஆண்டிமடம் ஐ.டி.ஐ.-யில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- வருகின்ற 7-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்திட வேண்டும்.
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஆண்டிமடம் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மற்றும் ஆண்டிமடம் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிப் பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வருகின்ற 7-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்திட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும் விவரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055877, 04329-228408, ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055879 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
- ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி ராஜா வரவேற்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் நகர தலைவர் ராமர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர்கள் கோகுல், பாபு கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகரில் கஞ்சா பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் 9-வது வார்டில் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்,கொம்மேடு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலை திறக்க வேண்டும், பாப்பாகுளம் சாலை மிக மோசமாக உள்ளதாகவும் அதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் மதிநிறச்செல்வி மற்றும் ஏராளமான பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டணர். முடிவில் நகர துணை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.
- அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
அரியலூர்,
அரியலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேரை மே 27ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பு மற்றும் ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேர் பணியில் சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
- அரியலூர் வாழைக்குறிச்சியில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் பூங்கரகம், அக்னிகரகம் எடுத்து வந்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 19-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்று, மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று காலை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது.






