என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    அரியலூர்,

    இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திட https://tnesevai.tn.gov.in/ அல்லது https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் வருகிற 30-ந்தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் என ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை "முகவரி" ஆண்ட்ராய்டு செல்போன் செயலியை பயன்படுத்தி காணலாம். அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வீட்டில் பந்து விழுந்த விவகாரத்தால் 2 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தில் உள்ள கம்ப பெருமாள் கோவில் திடலில் மேல தெரு வெங்கடாசலம் மகன் அறிவு மணி (வயது28) என்பவர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து அதே ஊரை சேர்ந்த தி.மு.க. கிளை கழக செயலாளர் பன்னீர்செல்வம் (49) என்பவருடைய வீட்டில் விழுந்துள்ளது. இதனை பார்த்த பன்னீர்செல்வம் பந்து இங்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அறிவுமணி அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாரம். இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதே போல் பன்னீர் செல்வம் தன்னை தாக்கியதாக அறிவுமணியும் புகார் அளித்துள்ளார். புகார்களின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் எல்லைக்கள் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 74), அரிசிக்கார தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (65) ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16½ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும் என்றார்

    அரியலூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதம மந்திரியின் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியில் ஈடுபடும் 44 பெண் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் விதை மூலதன நிதியுதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 51 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மூலதன நிதியுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர் இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.

    • அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அண்ணா சிலை அருகே பயணிகள் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக கழிப்பறை ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • அரியலூர் மாவட்டத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது
    • இன்ஸ்பெக்டர் கோபிநாத் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் காவல் துறை சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். மேலும் கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா பழக்கம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் செந்துறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை வகித்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி, வடை மாலை அணிவித்து, மகாதீபாராதனையுடன் வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் பைரவரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    இதுபோல் காரைக்குறிச்சி சௌந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தா.பழூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதில் காயமடைந்த கனகவல்லி மற்றும் சாமிக்கண்ணு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ மூலமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வேரா நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி கனகவல்லி (வயது 55). சாமி கண்ணுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வினோத் (34) என்பவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் இடபிரச்சனை தொடர்பாக தகாத வார்த்தைகளால் திட்டி சாமிக்கண்ணுவை அடித்துள்ளனர். இந்த சண்டையை தடுக்க வந்த கனகவள்ளியும் தாக்கப்பட்டு உள்ளார். இதில் காயமடைந்த கனகவல்லி மற்றும் சாமிக்கண்ணு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ மூலமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தா.பழூர் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து, வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரியலூரில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடங்கபட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அடிக்கல் நாட்டினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.76.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தா.பழூர் , இடங்கண்ணி ஊராட்சியில், இடங்கண்ணி-குறிச்சி சாலை வரை மாண்புமிகு முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.53.59 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி வெட்மிஸ் தார் சாலையாக மாற்றும் பணி, அதனைத் தொடர்ந்து வாழைக்குறிச்சி ஊராட்சி, மதனத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

    வாழைக்குறிச்சி ஊராட்சியில், ரூ.15.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ).முருகண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    அரியலூர்,

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 5,00,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும் என ஆக மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக செந்துறை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் செந்துறை சாலை துவங்கி ஜெயங்கொண்டம் சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரக்கூடிய அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், ஆலம் ஆகிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து, மரக்கன்றுகளை முறையாக பராமரித்திடவும், இதேபோல் அரியலூர் முதல் செந்துறை வரை உள்ள சாலையில் பணிகள் முடிந்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் மக்கள் நீதி மன்றத்தில் 138 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • இதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 2 சிவில் வழக்குகளுக்கு ரூ. 5 லட்சத்து, 25 ஆயிரம், 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 17 லட்சத்து, 87 ஆயிரம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் 21 வழக்குகளில் ரூ.8 லட்சத்து 64 ஆயிரமும் தீர்வு காணப்பட்டது. மேலும், இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்க்காக கையகப்படுத்திய வழக்கில், நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்கும் விதத்தில் 113 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான லதா, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி அழகேசன் முன்னின்று நடத்தினர். மேலும் ஜெயங்கொண்டம் நீதித்துறை நடுவர் எண். 1 ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் , அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ், செந்தில்குமார், தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, மற்றும் சுசீலா, மேலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் செய்திருந்தார்.

    ×