என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆண்டிமடம் அருகே வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, நெல், உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. ‘புரெவி‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓலையூர் அருகே உள்ள அழகாபுரம் பெரிய ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி நீர் வெளியேற வேண்டிய வடிகால் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் ஓலையூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதையடுத்து சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு, கரும்பு, உளுந்து, முந்திரி, நெல் ஆகிய பயிர்களில் தொடர்ந்து 5 நாட்களாக இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து இந்த ஆண்டும் வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் நாசம் ஆகிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் வடிகால் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வலியுறுத்தி தங்களது வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி கோட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் வடிகால் ஓடையை சீரமைத்து, இந்த ஆண்டு நடந்தது போல் மீண்டும் விவசாய நிலத்திற்குள் வெள்ளநீர் வராதபடி ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோட்டி, மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், ஒன்றிய பொறியாளர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அழகாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகமும், ஓலையூர் ஊராட்சி மன்ற நிர்வாகமும் இணைந்து அழகாபுரம் பெரிய ஏரிக்கான வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்து தருவதாக உத்தரவாதம் கொடுத்தனர். இதையடுத்து காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    உடையார்பாளையத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் உடையார்பாளையத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உடையார்பாளையம் கடைவீதியில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கழுமங்கலம் கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் குளம்போல் நீர் தேங்கியுள்ளது.

    உடையார்பாளையத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழையால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாமலும் மற்றும் ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச்செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    மேலும் மழையால் பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று மளிகை மற்றும் பிற பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆட்டோக்கள் மற்றும் வேன் டிரைவர்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை இணையதள முகவரி மூலம் அனுப்பலாம் என்று கலெக்டர் ரத்னா கூறியுள்ளார்.
    அரியலூர்:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் தற்போது 465 குடும்ப அட்டைகள் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து வருகிற 20-ந்தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் சமர்ப்பிக்கலாம். 

    எனவே அரியலூர் மாவட்டத்தில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை இணையதள முகவரி மூலம் அனுப்பலாம். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். 

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 65). இவர்களுக்கு செல்வி (40), அமுதா (35) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராசு ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் அமுதா, சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமியை பார்க்க வந்தார். நேற்று முன்தினம் மதியம் தனது குடிசை வீட்டில் முத்துலட்சுமி, அமுதாவுடன் முறுக்கு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அவரது வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்தது. இதனை கண்ட அமுதா தப்பித்து, தனது தாயாரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த முத்துலட்சுமியை உறவினர்கள் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் கண் முன்னே சுவர் இடிந்து விழுந்து தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொதுமக்கள் அதிகளவில் வந்து வழிபடக்கூடிய தலமாக இருந்து வருவதால், கோவில் வளர்ச்சிக்காக இரண்டு உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவிலில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து அவற்றில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். அந்த உண்டியல்களில் மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு கோலம் போடுவதற்காக வந்த அதே ஊரை சேர்ந்த மதனவள்ளி, உண்டியல்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கிராம மக்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்து பார்த்த கிராம மக்கள், தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தற்போது கோவிலில் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் அருகே வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:

    ‘புரெவி’ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக கீழகொளத்தூர்- திருமானூர் செல்லும் சாலையில் தரைப்பாலம் வழியாக வயல்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் குறித்து கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். 

    அப்போது அவர் கூறுகையில், விவசாய பணிகள் பாதிக்காத வகையில் மழைநீரை பொக்லைன் எந்திரங்களை கொண்டு வயல்வெளிகளில் இருந்து விரைவாக வெளியேற்றிட வேண்டும், என்றார். சுள்ளங்குடியில் செல்லும் சாலையினை பார்வையிட்ட அவர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்றிடவும், தேவையான இடங்களில் வாய்க்கால்களை சீரமைத்து, மழைநீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    மேலும், காட்டூர் ஏரி மற்றும் காசாங்காட்டேரி உள்ளிட்ட ஏரிகளை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து மழைநீர் வரத்தை கண்காணித்திடவும், அதற்கேற்ற உபரிநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிடவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

    மேலும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு தமிழரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இலவசமாக ரசம் தயார் செய்து வழங்கினார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 60). இவரது மகன் அருண் ராஜதுரை (35). விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இவர் கேட்டரிங் முடித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வேலை பார்த்தார். பின்னர் அமெரிக்கா சென்றார்.

    கடந்த 5 வருடங்களாக அங்கு சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் அசத்தி, கொரோனா சமயத்தில் ரசம் மூலம் அவர்களை கவர்ந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நாளில், அருண் ராஜதுரை, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ரசம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். அப்போது அமெரிக்காவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மூன்று மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவுடன் சேர்த்து இலவசமாக இந்த ரசத்தையும் அனுப்பினார். அதற்கு அவருக்கு ஆதரவும் கிடைத்தது.

    அதன்பிறகே ரசத்தின் தேவை அதிகரித்தது. அதற்கு ரசம் என்ற பெயர் மறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச் செய்யும் பானமாக புகழ்பெற்றது. அருண்ராஜதுரை பணியாற்றிய ஓட்டலில் உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாத உணவாக ரசம் மாறியது.

    இதன் புகழ் பல நகரங்களுக்கும் பரவியதால் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனடாவில் உள்ள கிளை உணவகங்களிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனையானது. நான் வீட்டில் இருந்து இதனை பரிசோதனை முறையில் தான் முயற்சித்தேன். ஆனால் இப்படி ஒரு சாதனையைப் படைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என அருண்ராஜதுரை கூறினார். 2018-ல் பெஸ்ட் செப் விருதும், 2019-ல் வேர்ல்டு புட் சாம்பியன்ஷிப் விருதும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி உட்கோட்டை பிரிவு சாலையில், சைக்கிளில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்த விசாரணை ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த கொளஞ்சிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சத்து 92 ஆயிரத்து 601 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படாததால் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி 35 பயணிகளுடன் சென்ற அரசு விரைவு பஸ்சை சின்னவளையம் அரசு பள்ளி அருகே நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

    தொடர் மழை பெய்து வரும் நிலையில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை ஜப்தி செய்ததால், மாற்று பஸ் இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விக்கிரமங்கலம் அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலை மேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 25). விவசாயி. தத்தனூர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (33). இவர் விக்னேஷின் அக்காள் கணவர் ஆவார். அசோக்கிற்கும், அவரது மனைவி சாந்திக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சாந்தியின் வீட்டிற்கு வந்த அசோக், சாந்தியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது சாந்தியின் தம்பி விக்னேசுக்கும், அசோக்குக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அசோக் விக்னேசை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ், அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீ புரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஸ்ரீபுரந்தான் மெயின் ரோட்டை சார்ந்த கமலா (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கமலாவை கைது செய்தனர்.
    அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் நடுத்தெருவில் ஓம்சக்தி கோவில் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியினர் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார், புகார் மனுவை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதியினர் தொடர்ந்து உண்டியல் திருட்டு குறித்து புகார் அளித்ததால் புகார் மனுவை வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், இந்த கோவிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பும் உண்டியல் திருட்டு நடந்தது. அதற்கும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் திருட்டு நடந்துள்ளது. இந்த உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் மேலான தொகை இருந்திருக்கும். எனவே உடனடியாக இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    மது அருந்தி விட்டு பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). இவர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். புருஷோத்தமனும், அவரது நண்பரும், காமரசவல்லி கிராம நிர்வாக அலுவலரான சிவராஜனும் (27) நேற்று முன்தினம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

    அப்போது அவர்கள் 2 பேரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்களான புருஷோத்தமன், சிவராஜன் ஆகியோரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு, போலீசார், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் 2 பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேரையும் மீட்டு அழைத்து சென்றனர். இந்நிலையில் மது அருந்திவிட்டு பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத்தமன், சிவராஜன் ஆகிய 2 பேரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவின் அதிரடி உத்தரவின் பேரில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி பணியிடை நீக்கம் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×