என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த கோவில்
    X
    கொள்ளை நடந்த கோவில்

    தா.பழூர் அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொதுமக்கள் அதிகளவில் வந்து வழிபடக்கூடிய தலமாக இருந்து வருவதால், கோவில் வளர்ச்சிக்காக இரண்டு உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவிலில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து அவற்றில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். அந்த உண்டியல்களில் மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு கோலம் போடுவதற்காக வந்த அதே ஊரை சேர்ந்த மதனவள்ளி, உண்டியல்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கிராம மக்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்து பார்த்த கிராம மக்கள், தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தற்போது கோவிலில் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×