என் மலர்
செய்திகள்

அருண் ராஜதுரை
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ரசம் தயார் செய்த தமிழர்
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு தமிழரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இலவசமாக ரசம் தயார் செய்து வழங்கினார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 60). இவரது மகன் அருண் ராஜதுரை (35). விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இவர் கேட்டரிங் முடித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வேலை பார்த்தார். பின்னர் அமெரிக்கா சென்றார்.
கடந்த 5 வருடங்களாக அங்கு சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் அசத்தி, கொரோனா சமயத்தில் ரசம் மூலம் அவர்களை கவர்ந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நாளில், அருண் ராஜதுரை, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ரசம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். அப்போது அமெரிக்காவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மூன்று மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவுடன் சேர்த்து இலவசமாக இந்த ரசத்தையும் அனுப்பினார். அதற்கு அவருக்கு ஆதரவும் கிடைத்தது.
அதன்பிறகே ரசத்தின் தேவை அதிகரித்தது. அதற்கு ரசம் என்ற பெயர் மறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச் செய்யும் பானமாக புகழ்பெற்றது. அருண்ராஜதுரை பணியாற்றிய ஓட்டலில் உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாத உணவாக ரசம் மாறியது.
இதன் புகழ் பல நகரங்களுக்கும் பரவியதால் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனடாவில் உள்ள கிளை உணவகங்களிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனையானது. நான் வீட்டில் இருந்து இதனை பரிசோதனை முறையில் தான் முயற்சித்தேன். ஆனால் இப்படி ஒரு சாதனையைப் படைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என அருண்ராஜதுரை கூறினார். 2018-ல் பெஸ்ட் செப் விருதும், 2019-ல் வேர்ல்டு புட் சாம்பியன்ஷிப் விருதும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






