என் மலர்tooltip icon

    அரியலூர்

    • பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவர்கள் சுயதொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தவர் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழு சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி, உயர் கல்வி கடன் பெற விரும்புவர்கள், வரும் 6-ம் தேதி திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 13-ந் தேதி செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 20-ந் தேதி உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 27-ந் தேதி தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள கடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஏரி வடிகாலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
    • தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்

    அரியலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 36), கொத்தனார். இவருக்கு சிறுவயதிலிருந்து வலிப்பு நோய் உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சின்னமணி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து விட்டு நண்பர் தங்கராஜ் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று காலை உடையான் ஏரி வடிகாலுக்கு சென்ற சின்னமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு ஒரு அடி ஆழமே உள்ள தண்ணீரில் குப்புற விழுந்தார். இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெகிழியால் அனைத்து உயிரினங்களுக்கும் பேரழிவு என்று துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு
    • முன்னோர்கள் மஞ்சள் நிறத்திலான துணிப்பைகளை பயன்படுத்தினர்

    அரியலூர்:

    உலக நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்களம் இளவரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நெகிழியை அதிகம் பயன்படுத்துவதால் பூமியில் உள்ள வன விலங்குகள், கால்நடைகள். கடல்வாழ் உயிரினங்கள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் பேரழிவை சந்திக்கின்றன. மேலும், நுரையீரல் புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக நெகிழியை எரிப்பதால் ஏற்படும் டையாக்ஸின் அமைகிறது.

    இதை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் மஞ்சள் நிறத்திலான துணிப்பைகளை பயன்படுத்தினர். இந்த பூமியை பாதுகாக்க வேண்டுமென்றால் நாமும் துணிப்பையை நிச்சயம் கைகளில் எடுக்க துணிய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுத் தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன், சமூக ஆர்வலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். முன்னதாக ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • சீமான் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவளி பகுதியைச் சேர்ந்த சீமான்.இவர் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சீமான் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீமான் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
    • ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் காலனி தெருவில் மின் கசிவால் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது குறித்து அறிந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அரியலூரில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில், சாசன தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது. அனைவரையும் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

    2022 -23 புதிய நிர்வாகிகள், தலைவராக காமராஜ், செயலாளராக மாலா தமிழரசன், பொருளாளராக ஆனந்தன், நிர்வாக அலுவலராக சக்திவேல், இயக்குனர்களாக டில்லிராஜ், ராஜேந்திரன், கொளஞ்சிநாதன், முருகேசன், ராஜா, குமரன், நாகராஜன், சரவணன், பிரபாகரன், ஜெயராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக ராஜசேகரன், முரளிதரன், முத்துக்குமார், செந்தில்குமார், செல்வராஜ், மானக்ஷா, பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ் ஆகியோர்கள் பணியேற்று கொண்டனர்.

    நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    • இந்த போட்டியில் திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
    • முதல் போட்டியில் அரியலூர்- விழுப்புரம் அணிகளும், பெரம்பலூர்-நாகப்பட்டினம் அணிகளும் மோதின.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரியலூர் கிழக்கு மண்டல சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று காலை தொடங்கின. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகள் லீக், நாக் அவுட் மற்றும் லீப் முறையில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அரியலூர்- விழுப்புரம் அணிகளும், பெரம்பலூர்-நாகப்பட்டினம் அணிகளும் மோதின. இதில் 25-13, 25-19 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் அணியும், 25-17, 25-15 என்ற கோல் கணக்கில் பெரம்பலூர் அணியும் வெற்றி பெற்றன. முன்னதாக மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    மாலையில் நடந்த போட்டியை சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) பகல், இரவில் போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் கழகத்தின் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தமிழக முதல்-அமைச்சரால் ஊக்குவித்து கவுரவிக்கப்படுகின்றனர்
    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியன்று சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது;

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தமிழக முதல்-அமைச்சரால் ஊக்குவித்து கவுரவிக்கப்படுகின்றனர்.

    இதையொட்டி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியன்று சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளன.

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், சிறந்த சமூகப்பணியாளர், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து பெறலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 10-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்ப படிவங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவதன்று பழனிவேல் கடன் தொகை ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க அவரது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
    • அப்போது பாலகிருஷ்ணன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45). இவர் கடந்த சில வருடங்களாக நானாங்கூரில் அவரது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அவரது உறவினரிடம் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க அவரது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    பொய்யூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேலகருப்பூர் பிரிவு பாதையில் சென்றபோது மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், பழனிவேலின் மோட்டார் சைக்கிளை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பையில் வைத்திருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் பழனிவேல் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆசைத்தம்பி மீன்சுட்டி கடைவீதியில் ‘பேன்சி’ ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.
    • கடையின் மேற்புறமுள்ள சிமெண்டு ஓடுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(வயது 52). இவர் மீன்சுட்டி கடைவீதியில் 'பேன்சி' ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்புறமுள்ள சிமெண்டு ஓடுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.27 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதையடுத்து கடையின் மேற்கூரை ஓடுகளை மர்ம நபர்கள் உடைத்து, கடைக்குள் புகுந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆசைத்தம்பி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    • வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி மைதானத்தில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 15 வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவி சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பிரபாகர், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் சரவணபவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, உதவி அலுவலர் பிரபாகர், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட கலெக்டர்ர மண சரஸ்வதி தெரிவித்ததாவது:

    வாகனங்களின் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும், மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • எப்பொழுதுமே எந்த தேர்வுக்காக இருந்தாலும் தேர்வுக்காக படிக்கின்றோம் என்ற எண்ணத்தை கைவிட்டு, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள போகின்றோம் என்ற நோக்கத்தோடு படித்தால் அனைத்தும் எளிதில் புரியும்.
    • எந்தக் கேள்விக்கான விடைகளையும் மனப்பாடம் செய்து கொண்டு படித்தால் தேர்வில் விடையளிக்கும் பொழுது ஒருவகையான மனப் பதற்றமும், மன அழுத்தமும் ஏற்படும். இதனால் சரியாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கல்வியாளர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நீட் தேர்வு குறித்து யாரும் கவலையும், அச்சமும் படக்கூடாது. ஏனெனில் இத்தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எந்தக் கேள்விக்கான விடைகளையும் மனப்பாடம் செய்து கொண்டு படித்தால் தேர்வில் விடையளிக்கும் பொழுது ஒருவகையான மனப் பதற்றமும், மன அழுத்தமும் ஏற்படும். இதனால் சரியாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படும்.

    அதே வேளையில் நாம் புரிந்து கொண்டு படித்தால் தெரியாத வினாக்களுக்கு கூட விடை அளிக்க முடியும். எப்பொழுதுமே எந்த தேர்வுக்காக இருந்தாலும் தேர்வுக்காக படிக்கின்றோம் என்ற எண்ணத்தை கைவிட்டு, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள போகின்றோம் என்ற நோக்கத்தோடு படித்தால் அனைத்தும் எளிதில் புரியும். இந்தியாவில் பெண்கள் மருத்துவராவதை விரும்பாத காலத்தில் ஐடா ஸ்கட்டர் அமெரிக்காவில் மருத்துவம் பயின்று வந்து தமிழகத்தில் பல மருத்துவ சேவைகளை செய்து வந்தார்.

    அதேபோல தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமியின் முயற்சியால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டு இன்று பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல், நாம் இந்த உலகிற்கு எதையாவது செய்ய வேண்டும். நாம் வரலாறு படிப்பவர்களாக இருப்பதை விடுத்து வரலாறு படைப்பவர்களாக மாற வேண்டும்.

    எனவே எதிர்கால மருத்துவ மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தெளிவான இலக்கு சரியான திட்டமிடல் உண்மையான உழைப்பு ஆகிய மூன்றும் இருந்தால் எந்தத் தேர்வையும் வெற்றி பெற முடியும் என்றார்.

    இந்த இலவச பயிற்சி வகுப்புகள் டெல்டா நாராயணசாமியின் நினைவாக நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கவிஞர் மதுக் குமார் செய்திருந்தார்.

    ×