என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெகிழியால் அனைத்து உயிரினங்களுக்கும் பேரழிவு - துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு
- நெகிழியால் அனைத்து உயிரினங்களுக்கும் பேரழிவு என்று துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு
- முன்னோர்கள் மஞ்சள் நிறத்திலான துணிப்பைகளை பயன்படுத்தினர்
அரியலூர்:
உலக நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்களம் இளவரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நெகிழியை அதிகம் பயன்படுத்துவதால் பூமியில் உள்ள வன விலங்குகள், கால்நடைகள். கடல்வாழ் உயிரினங்கள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் பேரழிவை சந்திக்கின்றன. மேலும், நுரையீரல் புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக நெகிழியை எரிப்பதால் ஏற்படும் டையாக்ஸின் அமைகிறது.
இதை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் மஞ்சள் நிறத்திலான துணிப்பைகளை பயன்படுத்தினர். இந்த பூமியை பாதுகாக்க வேண்டுமென்றால் நாமும் துணிப்பையை நிச்சயம் கைகளில் எடுக்க துணிய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுத் தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன், சமூக ஆர்வலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். முன்னதாக ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.






