என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரிந்து கொண்டு படித்தால் தெரியாத வினாக்களுக்கு கூட விடை அளிக்க முடியும்-மாணவர்களுக்கு கல்வியாளர் அறிவுரை
- எப்பொழுதுமே எந்த தேர்வுக்காக இருந்தாலும் தேர்வுக்காக படிக்கின்றோம் என்ற எண்ணத்தை கைவிட்டு, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள போகின்றோம் என்ற நோக்கத்தோடு படித்தால் அனைத்தும் எளிதில் புரியும்.
- எந்தக் கேள்விக்கான விடைகளையும் மனப்பாடம் செய்து கொண்டு படித்தால் தேர்வில் விடையளிக்கும் பொழுது ஒருவகையான மனப் பதற்றமும், மன அழுத்தமும் ஏற்படும். இதனால் சரியாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கல்வியாளர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நீட் தேர்வு குறித்து யாரும் கவலையும், அச்சமும் படக்கூடாது. ஏனெனில் இத்தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எந்தக் கேள்விக்கான விடைகளையும் மனப்பாடம் செய்து கொண்டு படித்தால் தேர்வில் விடையளிக்கும் பொழுது ஒருவகையான மனப் பதற்றமும், மன அழுத்தமும் ஏற்படும். இதனால் சரியாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படும்.
அதே வேளையில் நாம் புரிந்து கொண்டு படித்தால் தெரியாத வினாக்களுக்கு கூட விடை அளிக்க முடியும். எப்பொழுதுமே எந்த தேர்வுக்காக இருந்தாலும் தேர்வுக்காக படிக்கின்றோம் என்ற எண்ணத்தை கைவிட்டு, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள போகின்றோம் என்ற நோக்கத்தோடு படித்தால் அனைத்தும் எளிதில் புரியும். இந்தியாவில் பெண்கள் மருத்துவராவதை விரும்பாத காலத்தில் ஐடா ஸ்கட்டர் அமெரிக்காவில் மருத்துவம் பயின்று வந்து தமிழகத்தில் பல மருத்துவ சேவைகளை செய்து வந்தார்.
அதேபோல தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமியின் முயற்சியால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டு இன்று பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல், நாம் இந்த உலகிற்கு எதையாவது செய்ய வேண்டும். நாம் வரலாறு படிப்பவர்களாக இருப்பதை விடுத்து வரலாறு படைப்பவர்களாக மாற வேண்டும்.
எனவே எதிர்கால மருத்துவ மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தெளிவான இலக்கு சரியான திட்டமிடல் உண்மையான உழைப்பு ஆகிய மூன்றும் இருந்தால் எந்தத் தேர்வையும் வெற்றி பெற முடியும் என்றார்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் டெல்டா நாராயணசாமியின் நினைவாக நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கவிஞர் மதுக் குமார் செய்திருந்தார்.






