என் மலர்tooltip icon

    அரியலூர்

    • முட்புதர் அண்டி துர்நாற்றம் வீசும் அவலம்
    • நீராடுவதற்கு சங்கடம் ஏற்படுவதாக வேதனை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கழுகுமலை நாதர் மற்றும் விருகாம்பிகை உடனுறை பலமலைநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் அருகிலுள்ள திருக்குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்பொழுது அந்த குளம் முழுவதும் முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் பல நாட்கள் தேங்கி உள்ள நீரானது, பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. சிலர் குளத்திற்குள் குப்பைகளை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.மேலும் பிரதோஷ வழிபாட்டுக்கு வரும் சிவ பக்தர்கள் குளத்தில் குளித்துவிட்டு சிவனை தரிசிக்க வேண்டும். ஆனால் தற்போது சுகாதாரமற்ற நிலையில் குளம் இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு சங்கடம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தை சீரமைத்து தருமாறு கோவில் நிர்வாக துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் அறநிலைய துறை சார்பாக தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கி வருவது சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை தரும் விஷயமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால் இது பயன்பாடு அற்ற குளம் என கூறி கோவிலின் அடையாளமான இந்த குளம் அழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த குளத்தை மீட்டு எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது
    • பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

    அரியலூர்,

    பணியாளர் தேர்வுவாரியத்தால் (நநஇ) அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (திங்கட் கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணி க்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரிலோ அல்லது 9499055914, 04329 -228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
    • கல்லுாரி முதல்வர் வழங்கினார்.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக வளாக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அப்போது பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன அழைப்பு கடித்தை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் ம.ராசமூர்த்தி செய்திருந்தார்.

    • புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆண்டிமடம் மற்றும் கூவத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூவத்தூரில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூவத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த டோமினிக் சேவியரை(வயது 54) கைது செய்தனர். மேலும் ஆண்டிமடம் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற ராஜ்மோகன்(40), பூபதி(60) ஆகியோைர கைது செய்து, விற்பனைக்காக கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாற்று திறன் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது
    • நாளை மறுதினம் நடைபெறுகிறது

    அரியலூர்,

    திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளில் பார்வை குறைவுடையோர், செவித்திறன் குறைவுடையோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் உடல் இயக்க குறைபாடு உள்ளோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவ குழுவினர் மூலம் குறைகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவ தேசிய அடையாள அட்டை, இலவச ெரயில் மற்றும் பஸ் சலுகை, உதவி உபகரணங்கள், மனநலம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அறுவை சிகிச்சை பதிவு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • நண்பர் உயிருக்கு போராட்டம்

    அரியலுார்,

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சம்பத்தின் மகன் வெங்கட்ரமணி(வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குணசேகரனின் மகன் விக்னேஸ்வரனுடன்(26) நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்ப அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். சாத்தமங்கலம் அருகே சென்றபோது எதிரே சாத்தமங்கலம் சர்க்கரை ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வெங்கட்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1856 மாணவர்கள் கலந்து கொண்டனர்
    • மாவட்ட எஸ்பி தொடங்கி வைத்தார்

    அரியலுார்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளானது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது பிரிவு, அரசு ஊழியர்கள,் மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற உள்ளது. நேற்று தடகளம் பிரிவில் 364 மாணவர்கள், 305 மாணவிகள் என மொத்தம் 669 மாணவர்கள், கபடி போட்டியில் 780 மாணவ, மாணவிகள், வலைப்பந்து போட்டியில் 192 மாணவர்கள், சிலம்பம் போட்டியில் இரட்டை கம்பு வீச்சு, ஒற்றைக் கம்புவீச்சு, மான் கொம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பிரிவுகளில் 128 மாணவ, மாணவிகள், டேபிள் டென்னிஸ் போட்டியில் 87 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,856 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வருகிற 24-ந் தேதி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழப்பழூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அபாயகரமான நிலை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் 1991 இல் அமைக்கப்பட்டு, சுமார் 149 உறுப்பினர்களை கொண்டு சங்கம் நடைபெற்று வருகிறது.இதில் கிராமத்தை சார்ந்த நெசவாளர்கள் சொந்தமாக கைத்தறி நெசவு செய்து சேலை நெய்து அதை இந்த சங்கத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது இயங்கி வரும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. நேற்று திடீரென அதில் உள்ள முன் சுவர் இடிந்து விழுந்தது. நல்ல வேலையாக உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டவில்லை.இது குறித்து பணி புரியும் மேனேஜர் எழுத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும் இதை உடனடியாக சீரமைத்து நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உதவ வேண்டும் என்று நெசவாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
    • மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இன்று கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து மேசை பந்து போட்டிகளும், 6.2.2023 அன்று கையுந்துபந்து, வளைகோல்பந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகளும், 21.2.2023 அன்று நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது. 11.2.2023 அன்று கிரிக்கெட் விளையாட்டு கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.கல்லுரி மாணவ மாணவிகளுக்கு ....10.2.2023 அன்று தடகளம், கபாடி, மேசைபந்து, சிலம்பம், கையுந்துபந்து, இறகுபந்து கால்பந்து கூடைப்பந்து போட்டியும், 21.2.2023 அன்று நீச்சல் போட்டியும், 20.2.2023 அன்று கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.பொதுப்பிரிவினருக்கு.... 14.2.2023 அன்று தடகளம், கபாடி, சிலம்பம், கையுந்துபந்து. இறகுபந்து போட்டியும், 24.2.2023 அன்று கிரிக்கெட் விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.மாற்றுத்திற னாளிகளுக்கு 21.2.2023 அன்று தடகளம், இறகுபந்து, கபாடி, எறிபந்து, வாலிபால் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.அரசு ஊழி யர்களுக்கு... 16.2.2023 அன்று தடகளம், இறகுபந்து, கபாடி ஆகிய விளையாட்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், கையுந்துபந்து விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 17.2.2023 மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டியும் நடைபெறுகிறது.ஆன்லைனில் பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் பதிவு விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வராத வீரர், வீராங்கனைகள் கண்டிப்பாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • கலெக்டர் வழங்கினார்
    • மாணவர்களை பாராட்டி சான்றிதழ்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணையச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாணவ, மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டினர். மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் சிறந்த 30 மாணவ, மாணவியர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து, அம்மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 வீதம் 15 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20,000 வீதம் 15 மாணவர்களுக்கும் என மொத்த ரூ.4,50,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    • 12 பேர் தற்கொலைக்கு கவர்னரே காரணம்...
    • ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை

    அரியலூர்,

    பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பு மணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்றும், அதே நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது. மேலும், 2025-ம் ஆண்டு வாக்கில் என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய போவதாக மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏன். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் கடந்த இரண்டரை மாதத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களது உயிரிழப்புக்கு ஆளுநரே காரணம். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி அமைப்போம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்றார்.

    • ஞாயிறு ஒருநாள் விடுமுறை
    • கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலுார் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் ஆகிய அனைத்திற்கும் வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    ×