என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • மக்களின் நாடித்துடிப்பே கட்சியின் நாடித்துடிப்பு.
    • களத்தின் உண்மை நிலையை அறிந்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி முதல்கட்டமாக ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கர்நாடக காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்-மந்திரி பதவி விஷயத்தில் அவர்கள் 2 பேரின் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது, மறைமுகமாக கருத்து மோதல் வந்தது உண்டு. இதில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடம், முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்றும், முதலில் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் இருவருக்கும் அறிவுறுத்தியது.

    சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரசின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவரை ஒரு தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நேரில் சந்தித்து பேட்டி எடுத்தது. முதல்-மந்திரி பதவி குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் உள்ளேன். டி.கே.சிவக்குமாரும் அதில் உள்ளார். ஜனநாயகத்தில் இது சகஜமாக நடைபெறும் விஷயம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. டி.கே.சிவக்குமாரோ அல்லது நானோ முதல்-மந்திரி ஆனால் தவறு இல்லை. இறுதியாக புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வார்கள்.

    களத்தின் உண்மை நிலையை அறிந்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மக்களின் நாடித்துடிப்பே கட்சியின் நாடித்துடிப்பு. அதாவது மக்களின் மனநிலையே கட்சியின் மனநிலையாக இருக்கும். முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமாரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுவது இல்லை. ஜனநாயக முறைப்படி முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதை சித்தராமையா முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் அவ்வாறு கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "முதல்-மந்திரி பதவி குறித்து நான் கூறாத கருத்துக்களை ஒரு தனியார் ஆங்கில சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது ஆகும். நான் கூறிய கருத்து திரிக்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சி உடனடியாக அந்த செய்தியை நீக்க வேண்டும். எங்கள் கட்சியின் முதல்-மந்திரியை கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடம் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று 100 முறை கூறியுள்ளேன். எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு ஊடகங்கள் ஆயுதமாக இருக்க கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பலம் குறைந்து வருகிறது. தினமும் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அதனால் தான் பா.ஜனதா அதானியின் கீழ் இயங்கும் செய்தி தொலைக்காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர்கள் இடையே செயற்கையாக கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அதனால் பா.ஜனதாவை காப்பாற்றும் வேலையை நிறுத்த வேண்டும். 40 சதவீத பா.ஜனதா அரசு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் தன்னிச்சையாக முதல்-மந்திரி ஆக்காது என்ற ரீதியில் சித்தராமையாவின் கருத்து அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.

    • கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கர்நாடகத்திற்கு 7 முறை பிரதமர் மோடி வந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், 80 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தன்னுடைய தேர்தல் வியூகங்களை மாற்றி அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார்.

    அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணி களை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    அத்துடன் மே 6-ந் தேதியில் இருந்து பிரசாரம் முடியும் கடைசி நாளான 8-ந் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் கர்நாடகத்திலேயே பிரதமர் மோடி முகாமிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம் காரணமாக கூடுதலாக 15 முதல் 25 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது.
    • பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    போவி சமூகத்திற்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதாக பா.ஜனதா உறுதியளித்து இருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. அதனால் அந்த சமூகத்தை சேர்ந்த பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். ஒக்கலிகர்கள், லிங்காயத் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் இட ஒதுக்கீட்டை பறித்து வழங்கியுள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த இட ஒதுக்கீட்டு உத்தரவை நாங்கள் ரத்து செய்வோம்.

    அதே போல் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வையும் அரசியல் சாசனத்தில் சேர்க்கவில்லை. பா.ஜனதா அரசு எதையும் சட்டப்படி செய்யவில்லை. பா.ஜனதா அரசு சமீபத்தில் எடுத்த அனைத்து முடிவுகளும், மக்களை முட்டாளாக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் தாக்கம் வருகிற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இந்த பா.ஜனதா அரசு செய்த தவறுகளை நாங்கள் சரிசெய்து அனைத்து தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவோம். எங்கள் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் 4-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாளை (இன்று) நான் டெல்லி செல்கிறேன். இதில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுப்பார்.

    எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது. அதனால் தான் அவர்கள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் மோதல் நிலை உள்ளது. அதனால் தான் அந்த 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சித்தராமையா 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்கிறீா்கள். டிக்கெட் வேண்டும் என்று கேட்பவர்களை வேண்டாம் என்று கூற முடியுமா?. ஆதரவாளர்கள் கேட்பதில் தவறு இல்லை. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • சுயநல நோக்கம் கொண்டவர்கள் பொய்களை பரப்புகிறார்கள்.
    • எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெறும். நாங்கள் பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். பஞ்சசூத்ரா திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை முன்வைத்து ஓட்டு கேட்கிறோம்.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி மைசூரு மண்டலத்தில் மட்டுமே உள்ளதாக தேசிய கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. எங்கள் கட்சிக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    மைசூரு மண்டலம் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியுள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முறை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும்.

    சுயநல நோக்கம் கொண்டவர்கள் பொய்களை பரப்புகிறார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் பிற கட்சிகளின் பொய்களுக்கு பதில் சொல்ல நான் நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியது இல்லை. கடவுளும், மக்களும் தான் என்னை அரசியலில் கடந்த 60 ஆண்டு காலமாக வளர்த்துள்ளனர். எங்கள் கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் கடின உழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    தேசிய கட்சிகள் பெரிய திட்டங்களை அமல்படுத்துவதாக பொய் சொல்கிறார்கள். அவர்களின் நாடகம் மற்றும் பொய்களை மக்கள் பார்த்துள்ளனர். பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும்.

    நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கு தலைமை தாங்கும் திறன் கொண்ட தலைவர்கள் அதிகமாக உள்ளனர். ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

    எங்கள் கட்சி தலைவர்கள் இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது துரதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

    • சட்டசபை தேர்தல் பிரசாரம், கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
    • 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் பாக்கி உள்ள 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே பலத்த போட்டியிட்டுள்ளது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-க்கும் அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர்.

    இதனால் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, அவரது வீட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும், சட்டசபை தேர்தல் பிரசாரம், வருகிற 9-ந் தேதி கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • வருணா பா.ஜனதாவின் கோட்டை.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் என கருதப்படும் சித்தராமையா, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    இதனால், சித்தராமையாவை வீழ்த்த பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், எடியூரப்பா இதனை மறுத்துள்ளார். விஜயேந்திரா வருணாவில் போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், வருணா பா.ஜனதாவின் கோட்டை. அங்கு பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். வருணாவில் சித்தராமையாவை விட பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதை யாரும் உடைக்க முடியாது. வருணாவில் என்னை போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறினால், கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எனது தந்தை, சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி.
    • வரும் 9ம் தேதி கர்நாடகம் முழுதும் ஜெய் பாரத் யாத்திரை தொடங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வியூகம் வகுத்திட திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று மணீஷ் திவாரி கூறினார்.
    • கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கேரளாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ராகுல் காந்தியின் தண்டனை சட்டத்தில் மோசமானது என்றும், அவரது தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

    'ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, மேல்முறையீடு செய்ய அவசரம் இல்லை. அவசர அவசரமாக அவரை தகுதி நீக்கம் செய்து, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பாஜக அரசு காலி செய்யும்படி கூறியது. இதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறது' என்றும் மணீஷ் திவாரி கூறினார்.

    அப்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திவாரி, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சோதனைக்குப் பிறகு முதலல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×