என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஊரக மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • அரசு திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்று சேரவேண்டும். பிரதமர் மோடியின் இந்த எண்ணத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் மனதில் கொள்ளவேண்டும்.

    எந்த ஒரு அரசு திட்டங்களுக்காகவும், நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியுடன் இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், தேவையான பயனாளிகளுக்கு சென்றடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது.
    • உயிரிழந்தோருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    சம்பவம் குறுத்து தகவல் அறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் குமார் கூறும்போது, "மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு நபருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.

    • மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
    • இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பல்வேறு வாய்ப்புகளை அரசு உருவாக்கியுள்ளது.

    கஜ்ரவுலா:

    உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற் கொண்டுள்ள தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

    இந்திய இளைஞர்களை ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும், உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் அவர்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியா எதிர்காலத்தை மையமாகக் கொண்டது, அது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. 


    கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற கூட்டணி அரசுகள் பதவி வகித்தன. இது போன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. 2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்தனர். அது கொள்கைகளில் நிலைத் தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியது.

    தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 80,000-ஐ கடந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5000 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலை மருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுப்பழக்கம் என் மகனை கொன்றுவிட்டது.
    • மருமகள் விதவை ஆகிவிட்டார்.

    சுல்தான்பூர் :

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார ராஜாங்க மந்திரி கவுஷல் கிஷோர்.

    உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற ஒரு போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.

    'எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனது நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டது. அதனால் அவனை ஒரு போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டதாக கருதி, 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்துவைத்தோம். ஆனால் திருமணத்துக்குப் பின் அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான். அதனாலேயே இறந்தும் போனான். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது என் பேரனுக்கு 2 வயதுகூட ஆகவில்லை' என்று குரல் தழுதழுத்த மத்திய மந்திரி கவுஷல் கிஷோர், தொடர்ந்து பேசியதாவது:-

    'ஒரு குடிகாரரின் ஆயுள் ரொம்ப குறுகியது. நான் ஒரு எம்.பி.யாகவும், என் மனைவி ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துமே எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரண மனிதரால் எப்படி தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியும்?

    நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார். தயவுசெய்து, உங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    போதை பிரியர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான்.

    நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த 90 ஆண்டு போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர்தான் இறந்தனர். ஆனால் போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    எனவே, போதைப்பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே, பள்ளி காலைப் பிரார்த்தனையின்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.'

    இவ்வாறு அவர் உருக்கமாகப் பேசினார்.

    • பிஎப்.7 வகை தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
    • மாதிரிகள் மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆக்ரா:

    ஒமைக்ரான் கொரோனா தொற்றின் உருமாற்றமாக பிஎப்.7 வகை கொரோனா கருதப்படுகிறது. இது தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா வந்த 40 வயதான நபருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தனியார் ஆய்வக பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் ஆய்வின் முடிவில் அந்த நபர் பிஎப்.7 ரக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும்.

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
    • வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்டேட் வங்கியின் அருகில் காலியாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள், அந்த சுரங்கம் வழியாக வங்கியில் நகை, பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். நகை பெட்டகத்தின் அருகில் உள்ள பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது. வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியை நன்றாக நோட்டமிட்டு, வங்கியின் கட்டுமானம் குறிப்பாக பாதுகாப்பு பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தே கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களை காங்கிரஸ் பின்பற்றும்.
    • நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    லக்னோ:

    ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா விட்டால், பாத யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார்.

    கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் பாத யாத்திரை நிறுத்தப்படாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர். நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி முக கவசம் அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தது குறித்து பதிலளித்த குர்ஷித், பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடக கலைஞர் என்று கூறியுள்ளார்.

    • ராம்பூர் தொகுதியில் 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார்.
    • ஜெயப்பிரதா பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.

    ரேபரேலி

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.

    ஜெயப்பிரதா தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • உத்தர பிரதேசத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என அறிவிப்பு
    • பஞ்சாபில் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு தொடங்கும் என தகவல்.

    வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.

    அடர்ந்த மூடுபனியால் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளில் நிலவிய அடர்த்தியான மூடுபனியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  இதைடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

    • ஆத்திரம் தீராத நரேந்திர துபே என்பவர் வாலிபரை அடித்து ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.
    • ரெயிலில் இருந்து தள்ளிய போது கம்பத்தில் இடித்து திருடன் உயிரிழந்ததாக உடலை கைப்பற்றிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பரேலி:

    செல்போன் திருடிய வாலிபரை அடித்து உதைத்து ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளி கொன்ற கொடூரம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பயணி ஒருவரின் செல்போனை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. செல்போனை திருடிய வாலிபரை கண்டுபிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பலமுறை கெஞ்சியும் ஆத்திரம் தீராத நரேந்திர துபே என்பவர் அந்த வாலிபரை அடித்து ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.

    ரெயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட போது கம்பத்தில் இடித்து திருடன் உயிரிழந்ததாக உடலை கைப்பற்றிய போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நரேந்திர துபே என்பவரை கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பிலிபிட்:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    மேலும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு சுற்றுலாத்துறை வளர்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும்.
    • இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக தலைநகரமாக காசி உள்ளது.

    லக்னோ:

    இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:

    கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட முயற்சிகளால் உள்நாட்டு சுற்றுலாவில் உத்தரபிரதேசத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலகின் மிகப் பழமையான நகரமான காசி இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரமாக உள்ளது.

    ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முன்பு வழக்கமாக வாரணாசிக்கு வருடத்திற்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு வாரணாசிக்கு கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

    அயோத்தி நம்பிக்கையின் மையமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வர விரும்புகின்றனர். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் அயோத்தியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    2024 ஆண்டில் இந்த பணிகள் முடிவடையும் போது, இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும், அதே போல் உள்நாட்டினராக இருந்தாலும், வெளிநாட்டினராக இருந்தாலும் மக்கள் மதுராவுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×