என் மலர்
உத்தரப் பிரதேசம்
- உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார்.
- அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் எனக்கூறி குடிக்க மறுத்துவிட்டார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுவிக்கும்படி கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் நேற்று சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றுள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரியான அவருக்கு போலீஸ் அதிகாரிகள் குடிக்க தேநீர் கொடுத்தனர். ஆனால், உங்களுக்கு (தொண்டர்களிடம்) தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் வைத்து விடுவார்கள். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்துக் கொள்வேன். உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார்.
அதன்பின், காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக் கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- எம்போரியோ கிராண்ட் ஓட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
- சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமையலறையில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர்.
இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி), ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, " நேற்று மாலை ஹோட்டலின் சமையலறை எரிவாயு லைனில் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் குழு, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.
- ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும்.
- டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
லக்னோ :
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தநிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும். வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
- கடும் குளிரையும், பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராட தொடங்கினர்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. அங்கு புனித நீராடும் ஒரு மாத கால 'மகா மேளா' நேற்று தொடங்கியது. மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, முதல் நாளிலேயே புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிரையும், பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராட தொடங்கினர்.
புனித நீராடியதுடன், கங்கையில் பால் ஊற்றி சடங்குகள் செய்து வழிபட்டனர். காலை 10 மணிக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா மேளாவையொட்டி, 500 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் காவல்துறையின் நீச்சல் வீரர்கள் படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.
- வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்லும்.
- இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது.
வாரணாசி :
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
'கங்கா விலாஸ்' எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் செல்கிறது.
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. எனினும் இந்த தொடக்க விழாவுக்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.
வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும்.
50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.
மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்கும் இந்த ஆடம்பர சொகுசு கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் அடங்கி உள்ளன.
குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது. இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஊடகங்கள் தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றார் ராகுல் காந்தி.
- விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து அவை ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.
லக்னோ:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தர பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார்.
குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வைகூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என குற்றம்சாட்டினார்.
- கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கி உணவு டெலிவெரி செய்யும் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தவர் கௌஷல். இவர், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவில் உணவு டெலிவெரி செல்வதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, நொய்டா செக்டார் 14 பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று கௌஷல் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில், கீழே தடுமாறி விழுந்த கௌஷல் காருக்கு அடியில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய அந்த கார், காரில் கௌஷல் சிக்கியது தெரியாமல் சுமார் 500 மீட்டர் வரை கார் இழுத்து சென்றது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு கௌஷலின் உடல் வெளியே வந்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கௌஷலின் சகோதரர் அமித் அவருக்கு போன்ற செய்தபோது, அங்கிருந்தவர்கள் அழைப்பை ஏற்று விபத்து குறித்து அவர்களுக்கு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஜீவ் குமார் தனது மனைவியின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து வந்து மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
- வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜீவ் குமாரை தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜீவ் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இருவருக்கிடையே பிரச்சினை முற்றியதை அடுத்து, ராஜீவ் குமார் தனது மனைவியின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து வந்து மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதில், அந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக மகளிடம் விசாரித்தபோது, அவரது தந்தைக்கும் தாய்க்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், தந்தைதான் தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜீவ் குமாரை தேடி வருகின்றனர்.
- ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தது.
- உத்தரப்பிரதேசத்தில் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். லோனி எல்லையில் வரவேற்ற பிரியங்கா காந்தி, "அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் பல அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம், ஆனால் என் சகோதரரை ஒருபோதும் வாங்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரியங்கா காந்தி கூறியதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து உத்தரப்பிரதேசத்தில் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ராகுல் காந்தி குளிர்காலத்தில் கூட குளிர்ச்சியாக இருப்பதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர் உண்மையின் கவசம் அணிந்துள்ளார் என்பதுதான்.
என் மூத்த சகோதரனைப் பாருங்கள். நான் உன்னைப் பற்றி அதிகளவில் பெருமைப்படுகிறேன். ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தது.
ஆனால், அவர் உண்மையின் பாதையில் இருந்து பின்வாங்கவில்லை. அவர் ஒரு போர்வீரன் என்பதால் அவர் எதற்கும் பயப்படவில்லை.
அதானி, அம்பானி போன்ற பெரிய அரசியல்வாதிகளை கொண்டு வந்தார்கள். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், ஊடகங்களையும் வாங்கினார்கள். ஆனால் அவர்களால் என் சகோதரனை வாங்க முடியவில்லை. ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அனைவரும் இந்த 'மொஹபத் கி துகானின்' (அன்பை பரப்புவதற்கான கடை) உரிமையைத் திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை பிடிக்க அவன் போனில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- கோரக்பூர் கார்மல் ரோட்டில் வைத்து போலீசார் அந்த மர்ம நபரை பிடித்தனர்.
கோரக்பூர்:
உத்தரபிரதேச மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று ஒரு போன் வந்தது. அதில் பேசியவன் தான் கோரக்பூர் கோல்கார் என்ற இடத்தில் இருந்து பேசுவதாகவும்.கோரக்நாத் கோவிலுக்குள் 4 பேர் கேக் பார்சலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு போனை வைத்து விட்டான். இதையடுத்து போலீசார் வெடி குண்டுகளுடன் கோரக்பூர் கோவிலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
உடனே போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை பிடிக்க அவன் போனில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவன் கொடுத்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது.மேலும் அவனது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கோரக்பூர் கார்மல் ரோட்டில் வைத்து போலீசார் அந்த மர்ம நபரை பிடித்தனர். விசாரணையில் அவனது பெயர் குர்பான் அலி (வயது 24) என்பதும் பீகார் மாநிலம் வைசாலி பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. இவன் கோரக்பூரில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள பேக்கரிகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்து வந்தான். நேற்று முன்தினம் குர்பான் அலி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தான். அந்த சமயம் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவனை தடுத்து நிறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவன் போலீசாரை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவரம் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்தபோதுதான் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தயாள் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்காடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. மேலும், வெடி சத்தம் கேட்டு மக்கள் பயத்தில் வீட்டிற்குள் பதுங்கினர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, உடனடியாக உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாதுகாப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெடி விபத்தில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் சாலையில் கிடப்பது போன்றும், மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நின்றிருந்ததும் தெரியவந்தது. இந்த லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்தபோதுதான் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
- இருமல் மருந்து மாதிரிகள் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
- ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உத்தரவின்படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மேலும் மரியன் பயோடெக் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியானது தொடர்பாக உஸ்பெகிஸ்தான், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக முறையிடவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், இந்திய தூதரகம், உஸ்பெகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டுள்ளதாகவும், விசாரணை தொடர்பான கூடுதல் விவரங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய மருந்து நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் மீது உஸ்பெகிஸ்தான் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த பிரதிநிதிகளுக்கு தூதரக உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.






