என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலீசாரை பழி வாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    போலீசாரை பழி வாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை பிடிக்க அவன் போனில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கோரக்பூர் கார்மல் ரோட்டில் வைத்து போலீசார் அந்த மர்ம நபரை பிடித்தனர்.

    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று ஒரு போன் வந்தது. அதில் பேசியவன் தான் கோரக்பூர் கோல்கார் என்ற இடத்தில் இருந்து பேசுவதாகவும்.கோரக்நாத் கோவிலுக்குள் 4 பேர் கேக் பார்சலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு போனை வைத்து விட்டான். இதையடுத்து போலீசார் வெடி குண்டுகளுடன் கோரக்பூர் கோவிலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    உடனே போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை பிடிக்க அவன் போனில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவன் கொடுத்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது.மேலும் அவனது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கோரக்பூர் கார்மல் ரோட்டில் வைத்து போலீசார் அந்த மர்ம நபரை பிடித்தனர். விசாரணையில் அவனது பெயர் குர்பான் அலி (வயது 24) என்பதும் பீகார் மாநிலம் வைசாலி பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. இவன் கோரக்பூரில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள பேக்கரிகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்து வந்தான். நேற்று முன்தினம் குர்பான் அலி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தான். அந்த சமயம் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவனை தடுத்து நிறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவன் போலீசாரை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவரம் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×