என் மலர்
உத்தரப் பிரதேசம்
- போலீசார் விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா என்பது தெரியவந்தது.
- விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.
அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு.
ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த 'நைட் அண்ட் டே' ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.
ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது.
- உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி.
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள்.
இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இருந்தனர். இவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.
பகவான் ஸ்ரீராமரின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும். இறந்தவர்களின் உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தனக்கு நேர்ந்த கொடுமை பற்றியும், முகமது முன்தியாஸ் தன்னை தாக்கி பலாத்காரம் செய்தது குறித்தும் பெண் தனது கணவரிடம் கூறி அழுதார்.
- புகாரின் பேரில் முகமது முன்தியாஸ் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ந்தேதி தொழிலாளி வெளியூர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முகமது முன்தியாஸ் (30) என்ற தொழிலாளி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கற்பழித்துள்ளார். மேலும், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியும் உள்ளார்.
இதனால் அந்த பெண் அலறித்துடித்ததோடு, மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே முகமது முன்தியாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் ஆஸ்பத்திரிக்கு வந்து மனைவியை பார்த்து கதறினார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றியும், முகமது முன்தியாஸ் தன்னை தாக்கி பலாத்காரம் செய்தது குறித்தும் அந்த பெண் தனது கணவரிடம் கூறி அழுதார்.
அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முகமது முன்தியாஸ் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர்.
- அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
ஆக்ரா:
அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர். இந்த சுற்றுலா குழு வாரணாசி நகரை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வந்தது. அப்போது அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தற்போது அந்த குழு ராஜஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில் ஆக்ரா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜெய்ப்பூர் நகர சுகாதாரத்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
- ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார்.
- கூடார நகரத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடைகிறது. மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, காணொலி வாயிலாக வாரணாசியில் சொகுசு கப்பல் எம்வி கங்கா விலாஸ் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார். கூடார நகரத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
லக்னோ:
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார்
இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
- 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார்.
- போலீசார் மாணவனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார். அங்கு மாணவியை பிடித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அந்த மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
இதுபற்றி மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் மூலம் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
- குழந்தைக்கு பேச்சுத் திறன் இல்லாததால், குழந்தையுடன் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.
ஹாப்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், கோட்லா சதத் என்ற பகுதியில், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது ஆண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 55 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க மீட்புப் படையினர் விறுவிறுப்பாக செயல்பட்டனர். குழந்தைக்கு பேச்சுத் திறன் இல்லாததால், குழந்தையுடன் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் மீட்புப் பணி சவால் நிறைந்ததாக இருந்தது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- அடர்ந்த பனி மூட்டத்தால் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது
- நடைபாதையில் தூங்கியவர்கள் மீது பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலியா:
வடமாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி நிலவுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் - பாலியா நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடு பனிக்கு மத்தியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் திங்கள்கிழமை இரவு நர்லா என்ற கிராமத்திற்கு அருகில் நடந்தது.
இதேபோல் டெல்லியின் ரோத்தக் சாலை சராய் ரோகிலா ரெயில் நிலையம் அருகே, நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த டெல்லி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பிரேக் பிடிக்காததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி விபத்துக்குள்ளானதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- தற்காலிக லிப்டை அகற்றும் பணி நடைபெற்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது
- இந்த விபத்தில் இறந்தவர் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரித்திக் ரத்தோர் என்பது தெரியவந்துள்ளது
கிரேட்டர் நொய்டா:
கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானம் நடைபெறும் பகுதியில் தற்காலிக லிப்ட் அறுந்து விழுந்ததில் பொறியாளர் ஒருவர் பலியானார்.
நாலெட்ஜ் பார்க் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 4:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு கோபுரங்களில் ஒன்றின் 25வது மாடியில் இருந்து கட்டுமான பகுதிக்கு நிறுவப்பட்டிருந்த தற்காலிக லிப்டை அகற்றும் பணி நடைபெற்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான ரித்திக் ரத்தோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்காலிக லிப்டை அகற்வதற்காக வந்திருந்தார். லிப்டின் சுமையை தாங்க முடியாமல், தூண்கள் சரிந்ததால் மொத்மாக தரையில் விழுந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தினேஷ்குமார் சிங் கூறினார்.
- மனைவி கோபமாக இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்று காவலர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
- கடிதத்தை படித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவலருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த உடன் விடுமுறை கிடைக்காததால் அவர் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், மனைவி கோபமாக இருக்கிறாள். பேச மாட்டேங்குறாள்... என்பதை கூறி விடுமுறை தாருங்கள் என காவலர் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'விடுமுறை கிடைக்காததால் எனது மனைவி கோபத்துடன் இருக்கிறார். போன் செய்யும்போது மனைவி பேசவில்லை. பலமுறை மனைவிக்கு போன் செய்தேன் ஆனால் அவர் என்னுடைய தாயிடம் போனை கொடுத்து விடுகிறார்' என கூறியுள்ளார்.
மேலும், தனது மருமகனின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வருவேன் என்று மனைவியிடம் கூறியதாகவும் விடுமுறை தரவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கடிதத்தை படித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவலருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
- உத்தர பிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கோபமான மனைவி போன் செய்யும்போது தன்னிடம் பேசுவதில்லை என்பதே காரணம்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. அவர் மௌ மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான மனைவி, போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் பலமுறை அவருக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர், தனது தாயிடம் போனை கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாகவும் விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் படித்த உதவி கண்காணிப்பாளர், ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கி உள்ளார்.
கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
உத்தர பிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






