என் மலர்
உத்தரப் பிரதேசம்
- உள்ளூர் மக்கள் இந்திரா காந்திக்கு 73 கிலோ எடை உள்ள ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெள்ளியை பரிசாக வழங்கினர்.
- உலோகத்தால் செய்யப்பட்ட ஏராளமான பொருட்களையும் இந்திரா காந்திக்கு பரிசாக அளித்தனர்.
பிஜ்னோர்:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கிராம மக்கள் பரிசாக வழங்கிய 73 கிலோ எடை கொண்ட வெள்ளி உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கருவூலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரி சூரஜ்குமார் கூறியதாவது:-
கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரபிரதேசம்- உத்தரகாண்ட் எல்லையில் கட்டப்பட்ட கலகர் அணையை பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.
அவர் அணை பகுதியில் வந்த போது உள்ளூர் மக்கள் இந்திரா காந்திக்கு 73 கிலோ எடை உள்ள ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெள்ளியை பரிசாக வழங்கினர். மேலும் உலோகத்தால் செய்யப்பட்ட ஏராளமான பொருட்களையும் இந்திரா காந்திக்கு பரிசாக அளித்தனர்.
ஆனால் அந்த பொருட்களை இந்திரா காந்தி எடுத்து செல்லவில்லை. அவர் அப்போதைய கலெக்டரிடம் அதை கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். அவர் அந்த பரிசு பொருட்களை கருவூலத்தில் பாதுகாத்தார்.
அப்போதில் இருந்து இன்று வரை அந்த பரிசு பொருட்கள் கருவூலத்தில் தான் இருக்கிறது. அவற்றை என்ன செய்வது என்று சரியான வழிகாட்டுதல் இல்லை என்றார்.
கடந்த 2002-ம் ஆண்டில் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் பாரத ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அந்த பரிசு பொருட்கள் தனியார் சொத்து என்று கூறி அவற்றை கையகப்படுத்த மறுத்துவிட்டது.
காந்தி குடும்பத்தினர் உரிமை கோரினால் மட்டுமே நடைமுறைகளை பின்பற்றி இந்த பரிசு பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பரிசு பொருட்களை வருடாந்திர ஆய்வின் போது தவறாமல் சரிபார்க்கப்படுகிறது. இந்த பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்பட்டால் அவற்றை அவர்களிடமே ஒப்படைக்கலாம் என்றார்.
- பிரேம் நகரில் உள்ள வீட்டில் ஃபரிதா (75) என்ற பெண்ணின் ரத்தக் கறை படிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
- அப்சார் கான் இரும்பு கம்பியை எடுத்து தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மோட்டார் பைக் வாங்கி தர மறுத்ததால் தாயைக் கொன்றதாக 26 வயது இளைஞர் அப்சர் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 17ம் தேதி, பரேலி மாவட்டம் பிரேம் நகரில் உள்ள வீட்டில் ஃபரிதா (75) என்ற பெண்ணின் ரத்தக் கறை படிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில், அப்சர் கான் அவரது வளர்ப்பு மகன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தாய்- மகன் இருவருக்கும் மோட்டார் பைக் வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்சார் கான் இரும்பு தடியை எடுத்து தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்" என்றார்.
- சாளக்கிராம கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை.
- ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் கருவறையில் வைக்கப்படும் ராமர் - சீதை சிலைகளை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
கருவறையில் வைக்கப்படும் சிலைகள் என்பதால்... எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து.. நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாளக்கிராம கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால் விஷ்ணுவின் சக்தியை உள்ளிடக்கிய கல் தான் இந்த சாளக்கிராம கல் என நம்புகிறார்கள் இந்துக்கள். பூஜிக்க உகந்த இந்த கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை. இதனால் தான் அயோத்தி ராமர் சிலையை செதுக்க சாளக்கிராம கற்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
சீதையின் பிறப்பிடமாக அறியப்படும் நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்கு புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேபாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்கு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இந்த கற்களில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.
ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமான பணி நடைபெற்று வரும் அயோத்தியில் சிலைகள் செதுக்கும் பணியும் நடைபெறும்.
- அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல்.
- படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநில குதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஷாஜஹான்பூரில் இருந்து பாலியா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறினார்.
பேருந்தின் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்த பாறைகள் 6 கோடி ஆண்டுகள் பழமையானவை.
- பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அயோத்தி :
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவிலை திறக்கும்வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கோவில் கர்ப்பகிரகத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட உள்ளது. அதை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன.
இவை 6 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை.
இந்த பாறைகள், 2 சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு, கடந்த மாதம் 25-ந் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்டன. விசுவ இந்து பரிஷத் தேசிய செயலாளர் ராஜேந்திரசிங் பங்கஜ் உடன் பயணித்தார்.
இந்த பாறைகள், நேற்று முன்தினம் இரவு அயோத்திக்கு வந்து சேர்ந்தன. நேற்று பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர்.
நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார்.
இந்த பாறைகளில் இருந்து செதுக்கப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 19.5 ஓவரில் 101 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டு கைப்பற்றினார்.
இதையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் 11 ரன்னும், இஷான் கிஷன் 19 ரன்னும், ராகுல் திரிபாதி 13 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார்.
இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
- இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்
- நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வீடுகளைப் பெற வேண்டும்.
அமேதி :
ராஷ்டிரிய இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, உத்தரபிரதேச மாநிலம், அமேதி பகுதியில் உள்ள புரேராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வந்திருக்க வேண்டிய ராமராஜ்யத்தைத்தான் எங்கும் பார்க்க முடியவில்லை.
நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வீடுகளைப் பெற வேண்டும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நமது நாடு வளம்பெற, அனைத்து இந்துக்களும் இழந்த வளத்தை மீட்டெடுக்க, அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
லக்னோ:
இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும்.
- பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தெருக்களில் துணிகளை விற்பனை செய்பவர் இஜாஸ் அகமது. 40 வயதான இவர் நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பாதித்துள்ளார். இந்த நிலையில் ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டு கூறப்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வேறு ஒருவர் தனது பெயரில் இந்த மோசடி செய்துள்ளதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜி.எஸ்.டி. துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜி.எஸ்.டி. அதிகாரி கூறும் போது, ரூ.300 கோடிக்கு மேல் பில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய மோசடியாக தெரிகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
- 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பிப்ரவரி 18-ந்தேதி மகா மேளா நிறைவடைகிறது.
பிரயாக்ராஜ் :
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடந்து வருகிறது. இதன் 4-வது புனித நீராடல் திருவிழா, வசந்த பஞ்சமியையொட்டி நேற்று நடந்தது. கல்விக் கடவுளான சரஸ்வதி, இந்த நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது.
நேற்று காலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை பிரயாக்ராஜில் கங்கையிலும், 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும் 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் கண்காணிப்பு பணி நடந்தது.
பிப்ரவரி 18-ந் தேதி மகா சிவராத்திரி புனித நீராடலுடன் மகா மேளா நிறைவடைகிறது.
- பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது.
- விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜான்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அங்கே வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அகில பாரதிய இந்து மகாசபை தொண்டர்கள் சுவாமி பிரசாத் மவுர்யாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்து மகாசபை அறிவித்து உள்ளது.
ஆக்ரா:
தமிழில் ஸ்ரீ துளசி ராமாயணம் என்று அறியப்படும் ராம சரித மானஸ் என்ற நூல் 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். இதனை அயோத்தியை சேர்ந்த துளசி தாசர் என்பவர் இயற்றி உள்ளார். இந்தி இலக்கியங்களில் மிகப் பெரிய நூல்களில் ஒன்றாக இது எண்ணப்படுகிறது.
இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வரும் சுவாமி பிரசாத் மவுர்யா என்பவர் இந்த நூலை பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு விழாவில் பேசிய அவர் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களை ராமசரித மானஸ் நூலின் சில பகுதிகள் ஜாதியை குறிப்பிட்டு அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். எனவே இந்த நூலை தடை செய்ய வேண்டும் என கூறினார்.
சுவாமி பிரசாத் மவுர்யாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா தெரிவித்து உள்ளது.
அகில பாரதிய இந்து மகாசபை தொண்டர்கள் சுவாமி பிரசாத் மவுர்யாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது உருவ பொம்மை எரிக்கபட்டது. பின்னர் அதனை அவர்கள் யமுனை ஆற்றில் வீசினார்கள்
இந்த நிலையில் மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்து மகாபை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் சவுரப்சர்மா கூறும் போது, சுவாமி பிரசாத் மவுர்யா ராம சரிதமானஸ் நூலை அவமதித்ததுடன் இந்து மதகோட்பாடுகளை இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார். இதனால் அவரது நாக்கை யார் வெட்டி கொண்டு வந்தாலும் அவருக்கு ரூ.51 ஆயிரம் பரிசுக்கான காசோலை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






