என் மலர்
தெலுங்கானா
- முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லத்தை நோக்கி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் பேரணி சென்றது
- டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை ஷர்மிளா கடுமையாக தாக்கி பேசினார்.
தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி முதல்வரின் இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஷர்மிளா தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை இழுத்துச்செல்லும் கிரேனை போலீசார் கொண்டு வந்து, அவரது வாகனத்தை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது அவர் காரில் அமர்ந்திருப்பதையும், அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களும் அவர்களுடன் ஓடுவதையும் காண முடிகிறது.
நேற்று வாராங்கல் பகுதியில் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் காரை தாக்கினர். பின்னர் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த மோதலைத்தொடர்ந்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஷர்மிளாவை போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைத்தனர்.
- தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.
- வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர ரெட்டி என்ற மகனும், மம்தா ரெட்டி என்ற மகளும் உள்ளனர்.
மல்லா ரெட்டிக்கு தெலுங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவ பல்கலைக்கழகம், என்ஜினியரிங் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும், மல்லா ரெட்டி நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளன.
இவரது மகன் மகேந்திர ரெட்டி, மகள் மம்தா ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர ரெட்டி ஆகியோர் ரியல் எஸ்டேட் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 3 பேரும் இயக்குனர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மல்லா ரெட்டிக்கு சொந்தமான ஓம் பள்ளியில் உள்ள பண்ணை வீடு, ரூயா ஜன பள்ளி, நெட்சில்லாவில் உள்ள கல்லூரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் அவரது மகன், மகள், உறவினர்கள் வீடு என 50 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை குறித்து தகவல் அறிந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மல்லா ரெட்டி வீட்டின் முன்பாக குவிந்து வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை பா.ஜ.க.வில் இணைவதற்கு தலா ரூ.100 கோடி பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் இணைய உள்ளதாக பா.ஜ.க எம்.பி., தர்மபுரி அரவிந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரம் அடைந்த டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் தர்மபுரி அரவிந்த் எம்.பி வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஏற்கனவே தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலுங்கானா அமைச்சரின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. எம்.பி.தர்மபுரி அரவிந்த், சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் சேர போவதாக கருத்து தெரிவித்தார்.
- மத்திய அரசுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் இடையே மற்றொரு மோதல் ஏற்படும் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பா.ஜ.க. எம்.பி.தர்மபுரி அரவிந்த், சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் சேர போவதாக கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அவரது வீட்டை டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் இந்த 2 கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த மதுபான ஊழல் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் போயின் பள்ளி என்பவரை மத்திய புலனாய்வு துறை கைது செய்தது.
இதனை தொடர்ந்து கவிதாவுக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் அருண் ராமச்சந்திரன் மற்றும் ஆடிட்டர் புச்சி பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை அடிப்படையில் சந்திரசேகர ராவ் கட்சியின் எம்.எல்.சி.க்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரசேகர ராவ் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். ஊழல்கள் குறித்து விசாரணையை தொடங்குவதில் டெல்லி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் மத்திய அரசுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் இடையே மற்றொரு மோதல் ஏற்படும் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
- அரவிந்த் எம்.பி. வீட்டின் மீது தாக்குதல் நடத்திய டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெருலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தர்மபுரி அரவிந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார்.
அப்போது சந்திரசேகரராவின் மகள் கவிதா முதல்வர் பதவி மீது அதிருப்தியில் உள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியை தேசிய கட்சியாக அறிவித்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வில்லை.
மாறாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் நேற்று ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி. தர்மபுரி அரவிந்த் வீட்டின் முன்பாக குவிந்தனர். எம்.பி.க்கு எதிராக கோஷமிட்டனர். எம்.பி. வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலில் எம்.பி.யின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் கதவுகள் சேதம் அடைந்தன.
மேலும் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டி ஆர் எஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசியதால் போலீசாரின் வாகனம் சேதம் அடைந்தது.
பா.ஜ.க. எம்.பி. வீட்டை சூறையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இந்தசம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தருமபுரி அரவிந்த் எம்.பி. வீட்டின் மீது தாக்குதல் நடத்திய டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 30 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 70 பேரை தேடி வருகின்றனர்.
இது குறித்து சந்திரசேகரராவின் மகள் கவிதா கூறியதாவது:-
நான் கண்ணியமான அரசியல்வாதி. பா.ஜ.க.வில் இருக்கும் ஒரு சிலர் மூலமாக பாஜகவில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தனர்.
இதற்கு ஷிண்டே மாடல் என பெயர் வைத்து உள்ளனர். நான் பா.ஜ.க.வில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன். எனது இதயம் முழுவதும் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ளது.
தர்மபுரி அரவிந்த் எம்.பி. தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்துக்களை பரப்பினால் பதிலடி கொடுப்பேன் என தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வில் இணைவதற்காக தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக புகார்.
- நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி.
ஐதராபாத் :
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.
இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.
இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
முன்னதாக இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் போனில் பேசியதாக பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தார்.
இதை மறுக்கும் வகையில் கவிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவ் காருவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார்.
எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பா.ஜனதா எம்.பி.க்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்த்து தற்போது முதல்-மந்திரியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மகளின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.
இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.
- ரசாயன வாயு கசிவு குறித்த தடயவியல் குழு ஆய்வு .
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு கல்லூரி ஆய்வகத்தில் இன்று ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஆய்வகத்தில் இருந்த 25 மாணவிகள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த கல்லூரியில் இருந்த பிறதுறை மாணவிகளும் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆராய்ச்சி, கல்வி, தொழில்துறை ஒருங்கிணைப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், இஸ்ரோ திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன.
ப்ராரம்ப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம், புதிய விடியல் என்று தெரிவித்தார். ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் விண்வெளித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித்துறையில் அரசு தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.
- பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது.
இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.
ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.
இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- இன்று காலை ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்.
- தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் யூரியா உரத் தொழிற்சாலையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
ஐதராபாத்:
பிரதமா் நரேந்திர மோடி தமிழகம், கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென்மாநில சுற்றுப்பயணத்துக்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். கர்நாடகா, தமிழகம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை ஆந்திரா வந்தடைந்தார்.
இன்று காலை 10.30 மணிக்கு ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய மந்திரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆந்திரா சுற்றுப்பயணம் முடித்து இன்று மதியம் தெலுங்கானா வந்தடைந்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத் தொழிற்சாலையை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், ரூ. 2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது
- ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்
ஐதராபாத்:
தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது. இது நாளுக்கு நாள் அதிகரித்து. மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தனது தொலைபேசிகள் ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்திருக்கிறார். முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதில் இருந்து தனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்கிறார் தமிழிசை.
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது, தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர் என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
- ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
- பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.
இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.
ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் உற்சாகமாக திம்சா நடனமாடி மகிழ்ந்தார்.
- பண்டிகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சாட்டையால் அடித்துக் கொண்டார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி கன்னியாகுமாரியில் நடைபயணத்தை தொடங்கினார். காஷ்மீர் வரை அவர் பாத யாத்திரையாக செல்கிறார். தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பயணத்தை முடித்த அவர் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் சென்று வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட் டத்தில் நடைபயணத்தின்போது சில தொண்டர்கள் பஸ் கூரை மீது ஏறி நின்று ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைப் பார்த்த ராகுல் காந்தி ஆர்வ மிகுதியில் பஸ் படிக்கட்டு வழியாக மேற்கூரைக்கு ஏறினார். அவர்களுடன் ராகுல் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து இன்று ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க 'திம்சா' நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பொனாலு பண்டிகையில் பங்கேற்றார். அங்கு, பண்டிகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






