என் மலர்
பஞ்சாப்
- பஞ்சாப் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
- இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
சண்டிகர்:
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, தலா ரூ.25 கோடி வீதம் கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் அணுகினார்கள் என ஆம் ஆத்மி சில வாரங்களுக்கு முன் அதிரடி குற்றச்சாட்டாக கூறியது. பஞ்சாப்பில் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறியது.
ஆபரேஷன் தாமரை திட்டம் நிறைவேறுவதற்காக அக்கட்சி முயற்சி செய்கிறது என்றும் கூறியது.
இதையடுத்து, பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என பகவந்த் மான் தெரிவித்தார். இதற்கு கவர்னர் பன்வாரி லால் 2 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கினார். இதன்படி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பகவந்த் மானின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
சபாநாயகர் குல்தர் சிங் சந்த்வான் குரல் வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு வெற்றி பெற்றது.
- ஒரு சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
- வெடிவிபத்து குறித்து விசாரிக்க சண்டிகரில் இருந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் உள்ள தனியார் எரிவாயு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று திரவ நைட்ஜரன் அரிவாயு உருளையை நிரப்பும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹோஷியார்பூர் காவல் கண்காணிப்பாளர் (விசாரணை) மன்பிரீத் சிங் தில்லான் கூறுகையில், "தியோவல் கிராமத்தில் உள்ள ஆலையில் சில தொழிலாளர்கள் திரவ நைட்ரஜன் வாயுவை சிலிண்டர்களில் நிரப்பியபோது வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில் ஒரு சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
வெடிவிபத்து குறித்து விசாரிக்க சண்டிகரில் இருந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
- ஜெயிலில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.
- பஞ்சாப் மாநிலத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத் தப்படுகிறது.
சண்டிகர்:
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது.
வருகிற 27-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக பஞ்சாப்பின் நபா நகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் ஜெயிலில் இந்த நடைமுறையை அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயிலில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. கொடூர குற்றவாளிகள், ரவுடிகள், ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு இந்த சலுகை கிடையாது.
இதுதொடர்பாக ஜெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜெயிலில் இந்த சலுகையை பெறும் கைதி தனது கணவருடனோ அல்லது மனைவியுடனோ ஜெயில் வளாகத்தில் குளியலறையுடன் கூடிய தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்கப்படும்.
இதன்மூலம் அவர்களின் திருமண பந்தமும், அவர்களிடையே பிணைப்பும் அதிகரிக்கும். கைதிகளிடம் ஒழுக்கமும், நன்னடத்தையும் கூடும். இந்த அனுமதி 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
எச்.ஐ.வி. மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச்சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த சலுகை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத் தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநரின் நடவடிக்கையால் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிப்பதாகவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்தார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டத்தொடருக்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்பப் பெற்றார். ஆளுநரின் இந்த நடவடிக்கையால் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் ரத்து செய்ததற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாகவே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- ஆளுநரின் முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
- ஜனநாயகம் முடிந்துவிட்டதாக அரவிந்ந் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
சண்டிகர்:
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், பாஜக தனது ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நாளை ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்.
நாளை சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, ஆளுநர் மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? எனவே, இப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆபரேசன் தாமரை தோல்வியடையத் தொடங்கி, ஆதரவு கிடைக்காததால், சட்டசபை கூட்டத்தொடருக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது' என்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
மொகாலி:
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் ஒரு சிக்சர் அடங்கும்.
இதன்மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 172 சிக்சர்கள் அடித்து கப்தில் சாதனையை சமன் செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்றிரவு நடைபெறுகிறது.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையை சரிசெய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பந்துவீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, சீன் அபோட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ தலைமையில் விசாரணை குழு அமைப்பு.
- இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என பஞ்சாப் டிஜிபி உறுதி.
மொகாலி:
பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்
இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக மாணவியர் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு புலனாய்வு குழு,இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கும் என்றும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை முழு வேகத்தில் நடைபெறுவதால், வதந்திகளை நம்பாமல், அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என்றும் டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 24-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
- வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்குச் சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார்.
பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
- உமேஷ், ஷமி போன்ற வீரர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
- இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அணிக்கு அழைக்கப்படுவார்கள்
மொகாலி:
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து மொகாலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர், தனது திறன் குறித்து பல முறை நிரூபித்தவர், இந்த தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறினார். உமேஷ், ஷமி போன்ற சக தோழர்கள் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர் என்றும் ரோகித் கூறினார்.
இதேபோல் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகித், விராட் கோலி தான் எங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் 60 மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு.
- சக மாணவிகள் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். ரகசிய வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோக்களை மாணவர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தது சக மாணவி ஒருவர் என்பது பின்னர் தெரியவந்தது. விடுதியில் தங்கி படிக்கும் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், சக மாணவிகள் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார்.
சுமார் 60 மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோக்களை அவர் பல மாதங்களாக எடுத்துள்ளார். மேலும் மாணவிகளின் குளியல் வீடியோக்களை பணத்துக்காக விற்று இருக்கிறார்.
மாணவியிடம் இருந்து வீடியோக்களை வாங்கிய அவரது ஆண் நண்பர் மற்றொரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின் வீடியோக்கள் சமூக வலைதளங் களிலும் கசிந்தது. இதற்கிடையே வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை போலீசார் மற்றும் பல்கலைக்கழகம் தரப்பில் மறுத்தனர்.
இதுதொடர்பாக மொகாலி போலீஸ் அதிகாரி விவேக் சோனி கூறும்போது, மாணவிகள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு மாணவி பதற்றத்தில் மயங்கி விழுந்தார்.
அவர் ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஒரு வீடியோவை தவிர வேறு எந்த வீடியோவும் எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
பஞ்சாப் முதல்வர், பகவந்த் மான் டுவிட்டரில் கூறும்போது, "சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வருத்தமளிக்கிறது. எங்கள் மகள்கள் எங்கள் மரியாதை. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மாநில கல்வி மந்திரி ஹர்ஜோத்சிங் பெய்ன்ஸ் கூறும்போது, "சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். நமது சகோதரிகள் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை ஒரு பெண் பதிவு செய்து இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்ட உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.
- பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
- இவர் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங், உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.
இந்நிலையில், அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.






