என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • கோலாலம்பூரில் இருந்து ஹர்பிரீத் சிங் இன்று இந்தியா திரும்புவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ஹர்பிரீத் சிங்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லூதியானாவில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்பிரீத்சிங்கிற்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஒரு சர்வதேச அமைப்பின் தலைவருடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து ஹர்பிரீத் சிங் இன்று இந்தியா திரும்புவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த ஹர்பிரீத் சிங்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரோனில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, "5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர்" என்றார்.

    கடந்த 28ம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் பறந்து வந்துள்ளது.
    • சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவதை தடுக்க காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி கடந்த 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்து வந்துள்ளது.

    அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன் சத்தத்தை கேட்டதும் உஷாராகினர். உடனே அவர்கள் டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

    சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் வெள்ளை நிற பாலீத்தின் பொருட்கள் கிடந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் மீது ஸ்பிரே அடித்த பெண்கள் அவரை காரில் கடத்திச் சென்றனர்.
    • இரவு நேரத்தில் வாலிபரை கடத்தி சென்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் இரவில் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்தனர்.

    அவர்கள் ஒரு துண்டு சீட்டை அந்த வாலிபரிடம் கொடுத்து முகவரி கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண்கள் அவர்மீது ஸ்பிரே அடித்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றி சென்றனர்.

    மறைவான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் 4 பெண்களும் மது குடித்தனர். அந்த வாலிபரையும் மது குடிக்க வற்புறுத்தினார்கள். பின்னர் 4 பெண்களும் அவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு 4 பெண்களும் தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக அந்த வாலிபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தனர். நன்றாக ஆங்கிலம் பேசினர். 2 பெண்கள் என்னிடம் பஞ்சாப் மொழியில் பேசினர் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த இளம்பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபரை கடத்தி சென்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் நிலநடுக்கம் கடந்த 9ம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு 6.3 ரிக்டர் ஆக பதிவானது.
    • 2-வது நிலநடுக்கம் நேபாளத்தில் கடந்த 12-ந்தேதி 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் ஆக பதிவானது. 120 கி.மீ. தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த வாரம் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் கடந்த 9ம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு 6.3 ரிக்டர் ஆக பதிவானது. 2-வது நிலநடுக்கம் நேபாளத்தில் கடந்த 12-ந்தேதி 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • கோவில் அருகே கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்திய போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து காவல்துறை விசாரணை.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக  போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. 


    அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து குண்டு காயத்துடன மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

    குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக ஆளுநராக பதவி வகித்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது
    • பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.

    சண்டிகர்:

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது.

    இது குறித்து பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை எனக்கு கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?  மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

    பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்தனர்.
    • போலீசார் தப்பி ஓடிய குல்தீப்சிங் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

    சண்டிகார்

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 2 குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார். அவரது கணவர் குல்தீப் சிங் (வயது 30), மனைவியை வீடு திரும்பி குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

    'தன்னையும், குழந்தைகளையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தும் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறி பரம்ஜித் கவுர், கணவரின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குல்தீப், 2 பேருடன் சேர்ந்து பரம்ஜித் கவுர் வசித்த வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அவர்கள் மீது 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் உறங்கிய நிலையிலேயே நெருப்பில் சிக்கிய பரம்ஜித் கவுர் அவரது தந்தை சர்ஜான் சிங், தாய் ஜோகிந்தேரா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என அனைவரும் உயிருடன் கருகி இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நேற்று போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குல்தீப்சிங் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்றிரவு டிரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
    • அந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    அமிர்தசரஸ்:

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைக்கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.

    இந்நிலையில், இன்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இது 12 கிலோ எடை கொண்டது.

    துப்பாக்கிச் சூட்டில் எட்டு இறக்கைகளில் 2 இறக்கைகள் சேதமடைந்தன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இது என பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.

    • 28 வயதான நரீந்தர்கவுர்பராஜ் எம்.எல்.ஏ. பாட்டியாலாயாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. முடித்துள்ளார்.
    • ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மந்தீப்சிங் என்ற ஊழியரை திருமணம் செய்து கொண்டார்.

    சங்ரூர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த்மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சங்ரூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ.வாக நரீந்தர்கவுர்பரஜ் உள்ளார்.

    இவர் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மந்தீப்சிங் என்ற ஊழியரை திருமணம் செய்து கொண்டார். ரோர்வால் கிராமத்தில் உள்ள குருத்வாரில் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு முதல்-மந்திரியின் மனைவி வந்திருந்தார். 28 வயதான நரீந்தர்கவுர்பராஜ் எம்.எல்.ஏ. பாட்டியாலாயாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. முடித்துள்ளார். எளிமையாக நடந்த திருமணத்தை இப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    • தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
    • கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை மனிதகுல சேவைக்கும் பயன்படுத்த வேண்டும்.

    சண்டிகர்:

    பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா சண்டிகரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

    இஸ்ரோ முன்னாள் தலைவர் சதீஷ் தவான், ஐஐடி டெல்லி இயக்குனர் ஆர்.என்.டோக்ரா, ஏவுகணை தொழில்நுட்ப நிபுணர் சதீஷ் குமார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆகியோர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமை அளிப்பதாகும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்பது ஒவ்வொரு மாணவர் மீதும் கவனம் செலுத்தி, நல்ல உள்கட்டமைப்புடன், ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுதான்.

    வரம்புகள் இல்லாத வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகள் நிறைந்த உலகில் நீங்கள் (மாணவர்கள்) அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டிற்கான உங்கள் கடமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம், நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள் நீங்களே.

    இந்த சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை நீங்கள் மனிதகுல சேவையிலும் பயன்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த ஆண்டு டிசம்பரில், ஆரம்பப் பயிற்சிக்காக 3,000 அக்னிவீர்களை சேர்க்கவுள்ளோம்.
    • இந்திய விமான படையை பத்தாண்டுக்குள் நூற்றாண்டு நிறைவை கொண்டுவரும் பொறுப்பு இப்போது நம்மிடம் உள்ளது.

    இந்தியாவின் 90-வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சண்டிகாரில் அணி வகுப்பு மற்றும் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று காலை பாரம்பரிய அணிவகுப்பு நடந்தது. இதில் விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டு அணி வகுப்பை பார்வையிட்டார். விமானப்படை வீரர்களுக்கான புதிய சீருடையையும் அறிமுகம் செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    நம் முன்னோடிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்திய விமான படையை பத்தாண்டுக்குள் நூற்றாண்டு நிறைவை கொண்டுவரும் பொறுப்பு இப்போது நம்மிடம் உள்ளது.

    சுதந்திரத்திற்குப் பிறகு, புதிய செயல்பாட்டுக் கிளை உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தக் கிளையை உருவாக்கினால், பறக்கும் பயிற்சிக்கான செலவீனங்கள் குறைந்து ரூ.3,400 கோடிக்கு மேல் சேமிக்கப்படும்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்திய விமானப்படையில் அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புக் கிளையை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் பாக்கியமடைகிறேன்.

    அடுத்த ஆண்டு முதல் பெண் அக்னி வீரர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ​​உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை இணைத்துக்கொள்வது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால் இந்தியாவின் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் சேவையை நோக்கி அதைச் செலுத்துவதற்கும் இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

    ஒவ்வொரு அக்னி வீரரும் இந்திய விமானப் படையில் தங்களது தொழிலைத் தொடங்குவதற்கு சரியான திறன் மற்றும் அறிவைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய செயல்பாட்டு பயிற்சி முறையை மாற்றியுள்ளோம். இந்த ஆண்டு டிசம்பரில், ஆரம்பப் பயிற்சிக்காக 3,000 அக்னிவீர்களை சேர்க்கவுள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானப்படையில் உருவாக்கப்படும் ஆயுத அமைப்பு கிளை, நவீன ஆயுதங்களை கையாளும் புதிய படைப்பிரிவு ஆகும். டிரோன்கள், வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை புதிய படைப்பிரிவு கையாளும்.

    பிற்பகலில் சண்டிகாரின் சுக்னா ஏரிப்பகுதியில் விமானப்படையினரின் சாகசங்கள் நடக்கிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி பார்வையிடுகிறார்கள். சாகசத்தில் 80 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுகின்றன.

    ×