என் மலர்
புதுச்சேரி
- சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
- பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.
ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம்.
- இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.
நிறுவன வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம். 130 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது பெரும் சாதனையான விஷயம்.
இதில் பிரதமர் மிகுந்த அக்கறை காட்டினார். ஒத்துழைத்த ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் கடுமையான உழைப்பால் நமக்கு தடுப்பூசி கிடைத்தது. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம். புதுவை மாநிலம் ஒரு ஆராயச்சி மையமாக திகழ்வதற்கு என் வாழ்த்துக்கள்.
புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும், அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இந்த ஆராய்ச்சி நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய மருத்துவ கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்க்கவ், பூச்சி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அஸ்வினிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை.
- புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
புதுவை அரசு போக்குவரத்து பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக நேர பிரச்னை தலைதூக்கி வருகிறது. பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குகின்றனர்.
இந்த சம்பவங்களை கண்டித்து நேற்று முன்தினம் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் செய்யவில்லை என கோஷம் எழுப்பினர்.
இதனால் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. ஊழியர்களின் முதல் நாள் போராட்டத்தால் ரூ.2.50 லட்சம், 2-ம் நாள் போராட்டத்தால் ரூ.6.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகத்துடன் எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க முயற்சித்து வருகிறார்.
புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
- சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- இது குறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி.
கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.
அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் விண்ணப்பித்த பணியை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி ஜனனி வங்கி மூலம் ரூ.1,800 செலுத்தினார்.
பிறகு சான்றிதழ்களை சரிபார்க்க ரூ.6,500, வேலை செய்வதற்கான இடம், சம்பளம் குறித்த விபரங்களுக்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என்று கூறினர். அதனையும் ஜனனி வங்கி மூலம் செலுத்தினார். இதுபோன்று சிறுக சிறுக ஜனனியிடம் பல காரணங்களை கூறி அவர்கள் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.
ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி ஒருமுறை நேரடியாக அந்த நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் முக்கிய கூட்டம் ஒன்று நடப்பதாகவும், பிறகு வந்து பார்க்கும்படி ஜனனியை திருப்பி அனுப்பி விட்டார்.
அதன் பின்னர் ஜனனி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்படி கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜனனி அந்த நிறுவனத்துக்கு சென்ற போது இன்று குடியரசு தினம் என்பதால் நேர்காணல் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பின்பு ஜனனி விசாரித்த போது சென்னை விமான நிறுவனத்துக்கு இதுபோன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஜனனியிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜனனி இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
- மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.
மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல் திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கிறார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்றும் நாளையும், புதுச்சேரி மற்றும் தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு சென்னை வந்தார்.
முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று புதுச்சேரியில் மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுவார். தொடர்ந்து நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தில் நவீன வசதிகளை பார்வையிடும் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.
ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கும் மத்திய மந்திரி மாண்டவியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ரவீந்திரன், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மன்சுக் மாண்டவியா, ஆவடியில் மத்திய அரசின் சுகாதார திட்ட நலவாழ்வு மையம் மற்றும் ஆய்வகத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனைத் தொடர்ந்து மாநில இ-தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்ட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீண்டும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது.
- கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தோல்வி குறித்தும், மீண்டும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் தனித்தனியாக கருத்து கேட்டது.
அதில், நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்துவது இல்லை எனவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக, அரசியல் விவகார கமிட்டி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி என 2 புதிய கமிட்டிகளை, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் எம்.பி. அமைத்துள்ளார்.
அதன்படி, அரசியல் விவகாரக் கமிட்டியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ் உள்ளிட்ட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், ஒழுங்கு நடவடிக்கை குழு சேர்மனாக முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், உறுப்பினர்களாக நீல.கங்காதரன், மணவாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் புதுவையில் இருந்து முத்தியால்பேட்டைக்கு பி.ஆர்.டி.சி. மினி பஸ் புறப்பட்டு சென்றது. அதனை டிரைவர் சிவலிங்கம் ஓட்டினார்.
அப்போது அங்கு வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இணைந்து சிவலிங்கத்திடம் நேர பிரச்சினையை காரணம் காட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சிவலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பி.ஆர்.டி.சி. டிரைவர்- கண்டக்டர்கள் தாக்கப்பட்டனர்.
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. டி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அவைகள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னை- திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
- மறியல் போராட்டத்தால் திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் இன்று சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பந்த் போராட்டம் நடந்தது. பந்த் போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் சேதராப்பட்டு பகுதிகளில் காலை முதலே மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் சர்வதேச நிறுவனம் ஒன்று 6:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களை அனுமதித்ததை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் முருகையன் தலைமையில் போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து கம்பெனியின் நுழைவாயில் கேட்டருகே கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
அப்போது ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அனைவரையும் குண்டுகட்டாக போலீசார் வேனில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சிபிஐஎம்எல் மாநில தலைவர் மோதிலால் தலைமையில் சேதராப்பட்டு முனை சந்திப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இந்த பகுதியை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு 90 சதவிகித வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், புதுச்சேரி மின்துறை தனியார்மயம் ஆவதை தடுக்க வேண்டும், இரும்பு தொழிற்சாலைகள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், காலியாக உள்ள தொழிலாளர் துறை ஆணையர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், தொழிலாளர் துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதராப்பட்டு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதராப்பட்டு பிப்டிக் வளாகத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் வேனில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அந்த கம்பெனியின் வேனில் ஏற மாட்டோம். இல்லை என்றால் இங்கே இருப்போம் என வேனில் ஏற மறுத்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி பக்தவச்சலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒரு வாகனத்தில் அவர்களை கைதுசெய்து கோரிமேடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் சேதராப்பட்டு திருமண மண்டபத்திலும் ஒருபகுதியினர் கோரிமேடு காவல் நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது.
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது. நிகழ்ச்சியினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பாண்லே கடைகள் மூலம் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் மாற்றாக குறைந்த விலையிலான துணிப்பைகள் மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம்- சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஸ்மிதா ஆகியோர் உடனிருந்தனர்.
- சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கவர்னர் தமிழிசை பாராட்டு
- மாணவர்கள் பயன்பெறும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி:
புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் 2017-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்கவிழா புதுவை கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை ஊட்டச்சத்து கலந்த பாலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர். தெலுங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்புகொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்காக என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது. மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம்.
பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம்.
அதனடிப்படையில்தான் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கே.ஸ்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ., அரசு கல்வித்துறை செயலர் ஜவகர், ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்கயிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
- இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியானது.
இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.
முன்னதாக பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன.
இன்று காலை அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
அதே வேளையில் இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






