என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மும்பை :

    மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்தநிலையில் மும்பையின் பணக்கார கணபதி மண்டலான ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316.40 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஜி.எஸ்.பி. மண்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலை சேர்ந்த தன்னார்வலர்கள், பூசாரிகள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் பிரிவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ரூ.263 கோடிக்கும், மண்டலில் உள்ள நாற்காலிகள், கணினி, கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.1 கோடிக்கும், மண்டல் பந்தல், அரங்கம், பக்தர்கள் ரூ.20 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 66 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை, 5-வது நாளில் (அடுத்த மாதம் 4-ந் தேதி) கரைக்கப்பட உள்ளது. முன்னதாக வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்டல் கணபதி சிலையின் அறிமுக (பர்ஸ்ட் லுக்) நிகழ்ச்சி நடக்கிறது.

    ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான பிரவின் ராவத் பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சஞ்சய் ராவ்த்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்டம்பர் 5 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு.
    • இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்.

    முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-

    பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக மாறும். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது.

    இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டீசல் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் டீசல் செலவுவை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவாக இருக்கும். இது இந்தியாவில் சரக்கு  சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகிறது.
    • அமெரிக்க தரத்திற்கு, இந்திய சாலை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

    மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்.

    இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.

    ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாசன மேலாண்மை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றப்படும்.
    • 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

    புனே:


    மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.

    இதையொட்டி சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் மத்திய மந்திரி கலந்துரையாடினார். 


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும், இரட்டை மின்சார வசதி கொண்ட இருகட்ட டெஃபிபிரில்லேட்டர்களை உருவாக்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

    பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக் கூடிய சென்சார் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்க வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது குறிப்பிட்டார்.

    • மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இதில் அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் உள்பட பலரும் அடங்குவர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.

    இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து, 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நடைமேம்பாலத்தில் படிக்கட்டு இல்லை.
    • பொது மக்கள் ஏற வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    மும்பை :

    டிரைவர் ஒருவர் ரோட்டை கடந்து செல்ல நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச்சென்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ஆபத்தை உணராமல் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்றவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்தநிலையில் டிரைவா் ஆட்டோவை ஓட்டிச்சென்ற நடைமேம்பாலம் மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " நடைமேம்பாலத்தில் படிக்கட்டு இல்லை. பொது மக்கள் ஏற வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த சாய்வு பாதை வழியாக நடைமேம்பாலத்தில் ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் சென்று நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரை தேடி வருகிறோம் " என்றார்.

    • அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர்.
    • ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் குறிப்பாக தலைநகர் மும்பையில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.

    விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி என பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் தஹி ஹண்டி என அழைக்கப்படும் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தஹி ஹண்டி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. எனவே 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று நகரில் தஹி ஹண்டி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. மும்பை, தானேயில் நேற்று அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொது மக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    குறிப்பாக மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் கோவிந்தாக்களுக்கு (தயிர்பானை உடைக்கும் குழுவினர்) பரிசுகளை அள்ளி கொடுத்தனர். எனவே வண்ண சீருடை அணிந்த கோவிந்தா குழுக்கள் நேற்று காலை முதலே வாகனங்களில் மும்பை, தானே பகுதிகளை சுற்றி வந்தனர்.

    அவர்கள் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தயிர் பானைகளை உடைத்து அசத்தினர். மேலும் பரிசுகளை அள்ளி சென்றனர். இதன் காரணமாக நேற்று மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    தானே டெம்பி நாக்காவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் பிரமாண்டமான தஹி ஹண்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கோவிந்தாக்கள் கலந்து கொண்டு மனித பிரமிடு அமைத்து அசத்தினர். குறிப்பாக கோவிந்தாக்கன் 9 அடுக்கு வரை பிரமிடு அமைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மேலும் அவர்கள் பிரமிடை கலைக்க சீட்டு கட்டுபோல ஒரே நேரத்தில் சரிந்து விழும் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

    ஏக்நாத் ஷிண்டே ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் நடிகை ஷரத்தா கபூர் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினார்.

    இதுதவிர தானேயில் பல்வேறு இடங்களில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் பிரமாண்ட தஹி ஹண்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல ஒர்லியில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஏற்பாட்டில் நடந்த தஹி ஹண்டி நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். இதேபோல தாதர் சிவாஜி பார்க்கில் சேனா பவன் முன், சிவசேனா சார்பில் விசுவாச தஹி ஹண்டி நிகழ்ச்சிகள் நடந்தன. ஒர்லியில் சிவசேனா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.

    இதேபோல மும்பை, தானேயின் பல்வேறு பகுதிகளில் தஹி ஹண்டி கொண்டாட்டங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினர்.

    மும்பை, தானே மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் தஹி ஹண்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கலாசார திருவிழாவாக மக்கள் கொண்டாடினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால், இதில் மக்கள் கூடுதல் உற்சாகத்தை காட்டினர்.

    முன்னதாக தஹி ஹண்டிக்கு மனித பிரமிடு அமைத்து தயிர் பானை உடைக்கும் நிகழ்வை சாகச விளையாட்டில் மாநில அரசுக்கு சேர்க்கும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் கோவிந்தாக்கள் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலையில் சேர முடியும். மேலும் உயிரிழப்பு, காயம் ஏற்பட்டால் அரசின் நிவாரணமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி இதுவரை 70 சதங்களை குவித்துள்ளார்.
    • கடந்த 3 ஆண்டாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வந்தார்.

    விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்களை குவித்துள்ளார். கடைசியாக 2019, நவம்பர 23-ல் விராட் கோலி சதமடித்தார்.

    இன்றுடன் அவர் சதமடித்து 1,000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.

    கடைசி சதத்திற்கு பிறகு அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக இந்த ஆண்டுகளில் அவர் 94 (ஆட்டமிழக்காமல்) அடித்துள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலி கடந்த 3 ஆண்டாக சதங்கள் அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

    ஆயிரம் நாட்களாக கோலி ஒரு சதம் கூட அடிக்காதது குறித்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலியின் அடுத்த சதத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    • மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
    • பாழடைந்த கட்டிடம், யாரும் வசிக்கக் கூடாது என மும்பை மாநகராட்சி நோட்டிஸ் விடுத்துள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

    சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டு, யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து பெருநகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை வாரியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • சாகல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வாழ்க்கையை தொடங்குவது குறித்து பதிவிட்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல். இவரது மனைவி தனஸ்ரீவர்மா. இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    இதற்கிடையே சாகல் தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    சாகல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வாழ்க்கையை தொடங்குவது குறித்து பதிவிட்டார். மேலும் தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் இருந்த சாகல் பெயரை நீக்கி இருந்தார்.

    இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு என்ற தகவலுக்கு சாகல் விளக்கம் அளித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் உறவு தொடர்பான எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
    • மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது.

    மும்பை:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின்கட்கரி மும்பையில் நேற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

    மாநகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 


    மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளதாகவும், மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் 35 சதவீத காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

    மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

    ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது என்றாலும் சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது என்றும் மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

    ×