என் மலர்
மகாராஷ்டிரா
- நேற்று இரவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.
- பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றல் பாதிக்கபட்டு மீண்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது வழக்கமான பணிக்கு திரும்பியதாக கூறி உள்ளார். குணமடைவதற்காக வாழ்த்தி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
அமிதாப் அடுத்ததாக அயன் முகர்ஜியின் 'பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: ஷிவா', விகாஸ் பாஹ்லின் 'குட்பை' 'உஞ்சாய்' மற்றும் 'புராஜெக்ட் கே' ஆகிய படங்களில் நடிக்கிறார்.
- தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருந்தது.
- டி கம்பெனி என்ற சர்வதேச பயங்கரவாத நெட் வொர்க்கை அனிஸ் இப்ராகிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.
மும்பை:
1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவன் தனது கூட்டாளிகள் மூலம் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளான்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தலைமறைவானான். தற்போது அவன் எங்கு இருக்கிறான் என்ற விவரம் தெரியவில்லை. தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருந்தது.
விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த பிப்ரவரி மாதம் தாவூத் இப்ராகிமின் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்தநிலையில் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. இன்று அறிவித்துள்ளது.
இதேபோல தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான ஷகீல் ஷேக் என்கிற சோட்டா ஷகீலுக்கு ரூ.20 லட்சமும், கூட்டாளிகளான ஷாஜி அனிஸ் என்கிற அனிஸ் இப்ராகிம் ஷேக், ஜாவித் படேல் என்கிற ஜாவித் சிக்னா, இப்ராகிம் அப்துல் ரசாக் மேமன் என்கிற டைகர் மேமன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இவர்கள் அனைவரும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள். அவர்களை பற்றிய தகவல்களை என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. இது அவர்களை கைது செய்ய வழி வகுக்கும்.
டி கம்பெனி என்ற சர்வதேச பயங்கரவாத நெட் வொர்க்கை அனிஸ் இப்ராகிம் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.
ஆயுதக்கடத்தல், போதை பொருள், பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தீவிரமாக இணைந்து செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு.
- தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக புகார்.
மும்பை:
ரெயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை முன்பதிவுக்கு கடும் போட்டி நிலவுவதால், பல்வேறு தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
ரெயில்வே முன்பதிவு இணைய தளத்தில் சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி பயணச்சீட்டை முன்பதிவு செய்து, தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மேற்கு ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1688 முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மும்பை, ராஜ்கோட், சுல்தான்பூர் பகுதிகளை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இவர்கள் 28.14 கோடி ரூபாய்க்கும் அதிக கமிஷன் பெற்று, ரெயில் டிக்கெட்டுகளை வாங்கி சட்ட விரோதமாக விற்றுள்ளதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- பா.ஜனதா கட்சியின் முக்கிய குழுக்களில் இருந்து நிதின் கட்காரி சமீபத்தில் நீக்கப்பட்டார்.
- காங்கிரசின் சித்தாந்தம் தனக்கு பிடிக்கவில்லை.
நாக்பூர் :
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், சிறந்த அரசியல் எதிர்காலம் கொண்ட நல்ல மனிதராக இருப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஜிச்கார் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அவரிடம், காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிப்பேன் என்று பதிலளித்தேன்' என தெரிவித்தார்.
காங்கிரசின் சித்தாந்தம் தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய கட்காரி, நல்லதோ, கெட்டதோ, ஒரே சித்தாந்தத்தில் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உங்களிடம் நேர்மறை, தன்னம்பிக்கை இருக்க வேண்டுமே தவிர ஆணவம் கூடாது என்றும் கூறினார்.
பா.ஜனதா கட்சியின் முக்கிய குழுக்களில் இருந்து நிதின் கட்காரி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை குறித்து அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
- மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.
மும்பை:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-
ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.
ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.
- கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்றுள்ளார்.
- இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் விளையாடவுள்ள சென்ற இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்லவில்லை. இதையடுத்து இடைக்கால பயிற்சியாளராக லட்சுமணன் செயல்பட்டார்.
இந்த நிலையில் ராகுல் ராவிட் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது குணம் அடைந்துள்ளாார். அவரது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.
- நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உள்ளது.
- அடுத்த கட்ட இணை உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள் கவனம் செலுத்துவது அவசியம்.
மும்பை:
மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது:
இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது. சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்
எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்ட இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்.
சர்க்கரையை குறைந்த அளவுக்கு உற்பத்தி செய்வதுடன், எத்தனால் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை, தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இது போன்று செய்தால், விவசாயிகள் உணவுப் பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும்.
பலவகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை இந்த வகை என்ஜின்களை உற்பத்தி செய்து வருகின்றன, பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா.
- அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை :
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. தொழில் அதிபரான இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலீசார் ஆபாச பட வழக்கில் கைது செய்தனர். ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலி மூலம் வினியோகம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜ்குந்த்ரா மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்த வழக்கில் இருந்து அவரை விடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ராஜ்குந்த்ரா பணப் பலன் அல்லது வேறு எதுவும் பலன் அடைந்ததற்கான எந்த ஆதாரங்களும் போலீசார் கண்டறியவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்குந்த்ரா மனு குறித்து அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகள் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஒப்பந்த முதல்-மந்திரி’ என கிண்டல் செய்து வருகின்றனர்.
- எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம்.
மும்பை
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டவிரோதமானது என சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரியை 'ஒப்பந்த முதல்-மந்திரி' என கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது.
இந்தநிலையில் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எனது எதிரிகளால் நான் அடிக்கடி 'ஒப்பந்த முதல்-மந்திரி' என்று வர்ணிக்கப்படுகிறேன். மத்திய மந்திரி நாராயண் ரானே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் நான் மக்கள் நலனை மட்டுமே எனது செயல்திட்டமாக வைத்து இருக்கிறேன்.
எனவே மாநிலத்தை வளர்ச்சி, செழிப்பு மற்றும் மக்களின் நலனுக்காக நான் ஒப்பந்தம் எடுத்துள்ளேன் என்று கூறிக்கொள்கிறேன். காட்டிக்கொடுப்பவன் என எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம் ஆகும்.
சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்திற்கும், மக்கள் ஆணைக்கும் எதிராக, அதிகாரத்திற்காக கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இயற்கைக்கு மாறான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டது யார்?
சிவசேனா அதிருப்தி அணியை திரட்டியதன் மூலம் அரசியலமைப்புக்கு எதிராகவோ அல்லது சட்ட விரோதமாகவோ எதையும் நான் செய்யவில்லை. தவறை நான் திருத்தினேன்.
சித்தாந்தம் மங்கிய தன்மைக்கு எனது பணிகளின் மூலம் நான் பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் ஹலோ என்ற வார்த்தைக்கு பதில் வந்தே மாதரம் என்று கூறுமாறு கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அவர், "வந்தே மாதரம் கூறியபடி நமது சுதந்திர போராட்ட வீரர்கள் தூக்கு மேடைக்கு சென்றனர்.
நான் தொலைபேசியில் பதிலளிக்கும்போது ஹலோ சொல்ல வேண்டாம் என்று கேட்டதற்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்" என்றார்.
- நுபுர் சர்மாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
- ஓவைசி மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை.
மும்பை:
தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவெளியில் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே களம் இறங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது
(முகமது நபிகள்) குறித்து நுபுர் சர்மா பேசியபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அக்பரூதீன் ஓவைசி (இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர்) அவரது சகோதரர் ஜாகிர் நாயக். ஜாகிர் நாயக்கின் பேட்டியை யாரும் பார்க்கலாம், அவரும் அதையே சொன்னார். ஆனால் யாரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.
இந்து கடவுள்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர்கள் மீது இந்திய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? . அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள் நமது (இந்து) கடவுள்களைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள், மேலும் நமது கடவுள்களுக்கு மோசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். நமது கடவுள்கள் கேவலமானவர்களா? இதற்கு மன்னிப்பு கேட்கும்படி யாரும் அவரிடம் யாரும் கேட்கப் போவதில்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
- தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தல்.
- கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார்.
மும்பை:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை :
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்தநிலையில் மும்பையின் பணக்கார கணபதி மண்டலான ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316.40 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜி.எஸ்.பி. மண்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலை சேர்ந்த தன்னார்வலர்கள், பூசாரிகள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் பிரிவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ரூ.263 கோடிக்கும், மண்டலில் உள்ள நாற்காலிகள், கணினி, கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.1 கோடிக்கும், மண்டல் பந்தல், அரங்கம், பக்தர்கள் ரூ.20 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 66 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை, 5-வது நாளில் (அடுத்த மாதம் 4-ந் தேதி) கரைக்கப்பட உள்ளது. முன்னதாக வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்டல் கணபதி சிலையின் அறிமுக (பர்ஸ்ட் லுக்) நிகழ்ச்சி நடக்கிறது.
ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






