search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய மந்திரி நிதின் கட்கரி
    X

    நிதின் கட்கரி

    எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய மந்திரி நிதின் கட்கரி

    • நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உள்ளது.
    • அடுத்த கட்ட இணை உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள் கவனம் செலுத்துவது அவசியம்.

    மும்பை:

    மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது:

    இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது. சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்

    எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்ட இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்.

    சர்க்கரையை குறைந்த அளவுக்கு உற்பத்தி செய்வதுடன், எத்தனால் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை, தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இது போன்று செய்தால், விவசாயிகள் உணவுப் பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும்.

    பலவகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை இந்த வகை என்ஜின்களை உற்பத்தி செய்து வருகின்றன, பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×