என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ராகுல் காந்தியை நீண்ட நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஒடிசா நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என நிதிஷ்குமார் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அன்று மாலையே நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.

    தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. எனவே தேசிய அளவில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை உயர்த்த மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    இது தொடர்பாக சரத்பவாருடன், ராகுல்காந்தி விவாதித்துள்ளார். சமீபத்தில் சாவர்கர் குறித்து ராகுல்காந்தி பேசிய பேச்சு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக விரைவில் ராகுல் காந்தி மும்பை சென்று உத்தவ் தாக்கரையை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அப்போது கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை களையவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை உருவாக்கவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் 15 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு வழங்கப்படும். ஆனால் சிவசேனா அதிக இடங்களை கேட்டு வருகிறது.

    அதே நேரம் சிவசேனாவில் 13 சிட்டிங் எம்.பி.க்கள், தற்போதைய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். எனவே வலுவான வேட்பாளர்களை பெறுவதில் உத்தவ் தாக்கரே சிரமங்களை சந்திக்க நேரிடும். நாங்கள் வேட்பாளர்களை மாற்றி கொள்ளலாம் என்றார்.

    • புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது
    • பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா கோவில் அருகே இன்று அதிகாலை விபத்தில் சிக்கி உள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் மலையேற்ற குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். அந்த பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். விபத்து குறித்து கோபோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    மும்பை:

    இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 5,928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    7 மாத காலத்துக்குப் பிறகு மகாரஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.

    • நடிகர் நவாசுதீன் சித்திக், தனது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வருகிற மே மாதம் 3-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மும்பை:

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக தோன்றி கலக்கி இருப்பார்.

    விஜய் சேதுபதியின் தந்தையாக தோன்றி திரையில் மிரட்டிய நவாசுதீனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அவரது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக், அவரை சகட்டு மேனிக்கு திட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். நவாசுதீனின் குடும்ப வாழ்க்கை, அவரது செயல்பாடுகள் குறித்து அவரது சகோதரர் ஷாமாசுதீன் வெளியிட்ட கருத்துக்கள், நவாசுதீனின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதனால் மனம் உடைந்த நவாசுதீன், அந்த கருத்துக்களை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றுமாறு சகோதரரிடம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தங்களின் கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்தனர். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

    இதையடுத்து நடிகர் நவாசுதீன் சித்திக், தனது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் சமூக வலைதளங்களில் ஷாமாசுதீன் சித்திக் பதிவிட்ட அவதூறு கருத்துக்களால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு இழப்பீடாக ரூ.100 கோடி நஷ்டஈடு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் நவாசுதீன் சித்திக் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் நவாசுதீன் சித்திக் அவரது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்க முயற்சி நடந்து வருகிறது. எனவே முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை, என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதலில் சகோதரர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் மாறிமாறி கருத்து பதிவிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வருகிற மே மாதம் 3-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பிரபல நடிகர் நவாசுதீனும் அவரது சகோதரரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவதூறு கருத்துக்கள் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
    • மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது.

    மும்பை

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது.

    அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவானும் தேசியவாத காங்கிரசை விமர்சித்து இருந்தார்.

    இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:-

    மகா விகாஸ் அகாடி கூட்டணி பலமாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு குறித்து ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்ப தேவையில்லை.

    மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது. கூட்டணி பிரபலமடைந்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் மகா விகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே தான் நாக்பூரில் நடத்த உள்ள பொதுகூட்டத்தை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

    சத்ரபதி சாம்பாஜி நகரில் மகா விகாஸ் அகாடி நடத்திய கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஏப்ரல் 16-ந் தேதி அன்று திட்டமிட்டபடி நாக்பூரில் பொதுகூட்டம் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து அமராவதி, புனே, கோலாப்பூர், நாசிக் மற்றும் மும்பையில் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
    • சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    மும்பை :

    மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    கவுதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் கோரி வந்த நிலையில், அந்த குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் குழு விசாரணை தான் பயனுள்ளதாக இருக்கும் என்று சரத்பவார் கூறினார். அவரின் இந்த கருத்து காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவ்வப்போது காங்கிரசின் விமர்சனை கணைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் உள்ளாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரத்பவாரை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சஞ்சய் ராவத் எம்.பி. உடன் இருந்தார்.

    கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    சந்திப்பு குறித்து சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை குறித்து நானும், உத்தவ் தாக்கரேயும் ஆலோசித்தோம். கூட்டணி ஒற்றுமைக்காக சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடத்திய சந்திப்பில் இதற்காக உடன்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    மும்பை:

    இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 9 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 5,421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 7 மாத காலத்துக்குப் பிறகு மகாரஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மும்பை:

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 105 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அம்மாநிலத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா இருந்தாலும் 40 எம்.எல்.ஏக்கள் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்- மந்திரியாக உள்ளார்.

    மகாராஷ்டிரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 150 -க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தற்போதைய எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடம் ரகசிய சர்வே நடத்தியது. இதில் 33 எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் எல்லைப்பகுதிகளை சேர்ந்த 20 தொகுதி எம்.எல்.ஏக்களும் அடங்கும்.

    இவர்கள் தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வப்போது மட்டும் சென்று வருவதாக தெரியவந்துள்ளது.

    இதில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தலைநகர் மும்பையிலேயே குடும்பத்துடன் தங்கி உள்ளதால் அவர்கள் தொகுதி மக்களிடம் அந்த அளவு தொடர்பில் இல்லாததும் இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்து வருவதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது.மேலும் அரசின் நலதிட்டங்கள் குறித்து அந்த எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி மக்களிடம் சரிவர கொண்டு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    எம்.எல்.ஏக்களின் இந்த செயல்பாடுகளால் அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்ய பாரதிய ஜனதா அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

    வருகிற தேர்தலில் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளான 33 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தெரிகிறது. பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் கூறியதாவது:-

    சில தொகுதிகளில் சாதிகளின் எண்ணிக்கை மாறி இருக்கிறது. இதனால் சாதி வாரிய கணக்கெடுப்பில் கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை அடிக்கடி கூட்டி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என அந்தந்த தொகுதி தலைவர்களுக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    2023- ஆம் ஆண்டு பட்ஜெட் மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக விளக்கி கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம். பொது மக்களிடம் எப்போதும் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் தெரிவித்து உள்ளோம். சமூக வலைதளங்களை அதிகளவு பயன்படுத்தி பொது மக்களுடன் தொடர்பில் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. இதன் மூலம் வருகிற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள சயான்- பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது.
    • மும்பையில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் பா.சிவந்தி ஆதித்தனாரை தெரியும். மும்பை தமிழர்களுக்கு தமிழ்மொழி மூலம் செய்தியை கொண்டு சேர்த்தவர் அவர்.

    மும்பை:

    பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ''தினத்தந்தி'' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அவரது பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள சயான்- பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது.

    சதுக்கத்தை அப்போதைய மும்பை மாநகராட்சி மேயர் சினேகல் அம்பேகர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் தற்போது தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சதுக்கம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட அந்த சதுக்கத்தை நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியும், தாராவி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாட் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வளாகத்தில் நடந்த விழாவிற்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சபேஷன் ஆதித்தன், செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் செல்வராஜ், மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம், செயலாளர் மைக்கிள் ஜார்ஜ், பொருளாளர் பொன்ராஜ், பாக்கியநாதன், நடராஜன், ரெம்ஜிஸ், ஆனந்த் செல்வம், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "காமராஜர் பள்ளி கட்டுமான பணியின் போது பா.சிவந்தி ஆதித்தனாருடன் எனது தந்தை இணைந்து பணியாற்றினார். அப்போது, இங்கு வந்திருந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நான் வியந்திருக்கிறேன். கல்வி துறையில் அவர் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். நானும் கல்வி மந்திரியாக இருந்துள்ளேன். இனி வரும் காலங்களிலும் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

    மும்பையில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் பா.சிவந்தி ஆதித்தனாரை தெரியும். மும்பை தமிழர்களுக்கு தமிழ்மொழி மூலம் செய்தியை கொண்டு சேர்த்தவர் அவர். சங்கத்தில் யார் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

    விழாவில் ஹரிராம் சேட் நன்றி கூறினார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை தலைவர் ரசல், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஜெபகுமார், துணை தலைவர் வடிவேல், இணைச்செயலாளர் மாரியப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளை மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    முன்னதாக பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், "சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியால் சதுக்கம் பொலிவு இழந்தது. அதன் பிறகு சதுக்கத்தை சிறப்பாக புதுப்பித்து கொடுத்த எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட்டுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முல்லுண்டில் உள்ள சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

    அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.

    அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.

    • கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது.
    • சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள்ளது.

    இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

    இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்டகையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

    நேற்று வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர்.

    100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர்.

    மேலும் இதுபற்றி தீயணைப்பு நிலையத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது.

    இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் பற்றி தெரியவந்ததும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அகோலா மாவட்ட நிர்வாகத்தை அழைத்து விபரம் கேட்டார். பின்னர் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

    இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல் மந்திரி ஏக்நாத் சின்டே நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

    • இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் உயர்ந்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    மும்பை:

    இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். 4587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×