என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும் என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
    • மர்மநபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் மர்மநபர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.

    மேலும், "உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 ஐ வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்" என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 385 (பணம் பறிப்பதற்காக ஒரு நபருக்கு காயம் ஏற்படும் என்ற பயத்தில்) மற்றும் 505 (1) (பி) (அச்சம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அறிக்கைகள்) கீழ் எப்.ஐ.ஆர். (பொது அல்லது பொது அமைதிக்கு எதிராக) அடையாளம் தெரியாத நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மூதாட்டி பாராமோட்டரிங் மூலம் வானில் பறந்த காட்சிகள் பயனர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மூதாட்டியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கு வயது தடை அல்ல என்பதை நிருபித்துள்ளார் 97 வயது மூதாட்டி ஒருவர். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் இன்றைய 'ஹீரோ' என்ற தலைப்பில் மூதாட்டி ஒருவர் பாரா மோட்டரிங் எனப்படும் வான்சாகசத்தில் பங்கேற்பதற்காக அதனை கற்றுக்கொண்டு பறந்த வீடியோ காட்சிகள் உள்ளது.

    மேலும் ஆனந்த் மகிந்திராவின் பதிவில், பறக்க இது ஒரு போதும் தாமதமாகாது. அவர்தான் எனது இன்றைய 'ஹீரோ' என அந்த மூதாட்டியை பாராட்டியுள்ளார். 55 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராமில் மகாராஷ்டிரத்தை தளமாக கொண்ட பிளையிங் ரைனோ பாராமோட்டரிங் பகிர்ந்துள்ளது. அதில் 97 வயது மூதாட்டி ஒருவர் பாராமோட்டரிங் சாகசத்தில் பங்கேற்பதற்காக பயிற்சியாளர் மூலம் அதனை கற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.

    பின்னர் அந்த மூதாட்டி பாராமோட்டரிங் மூலம் வானில் பறந்த காட்சிகள் பயனர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது. இந்த வீடியோ 6.4 லட்சம் பார்வைகளையும், 17 ஆயிரம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மூதாட்டியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வயது என்பது வெறும் எண், ஒரு வயதான பெண்மணி எந்த பயமும் இன்றி 'பாரா கிளேடிங்' செய்யும் இந்த வீடியோ அது நிரூபிக்கிறது. சாகசத்திற்கு எல்லையே இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மூதாட்டியின் தைரியத்திலும், ஆர்வத்திலும் நாம் அனைவரும் உத்வேகம் பெறுவோம் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மோடி பார்க்க சென்றதால் இந்தியா தோல்வி என விமர்சனம்.
    • அதானியுடன் பிரதமர் மோடியை இணைத்து பேசும்போது பிக்பாக்கெட் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ்- பா.ஜனதா கட்சி தலைவர்கள் வளர்ச்சியை பற்றி பேசியதை விட, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசியதுதான் அதிகம் என்றால் அது மிகையாகாது.

    அவ்வாறு விமர்சனம் செய்யும்போது, பயன்படுத்தும் சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாகி விடும். அப்படித்தான் ராகுல் காந்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, ஏற்கனவே மோடி குறித்து பேசிய வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. அதன் காரணமாக நீதிமன்றத்தை சந்தித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது பிரசாரத்தின்போது மோடிக்கு எதிராக பிக்பாக்கெட் (pickpocket), அபசகுணம் (Pannauti) ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே, ராகுல் காந்தி ஒரு போராளி, கண்ணியமான வகையில் பதில் அளிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''ராகுல் காந்தி வலிமையான மற்றும் நேர்மையான தலைவர். அவர் கண்ணியமான, நேர்மையான பதிலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போராளி. அவரால் பயமின்றி இருக்க முடியும். ஏனென்றால் அவர் நேர்மையானவர்.

    ராகுல் காந்தியின் குடும்பம் பற்றி பா.ஜனதா பேசியதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆகவே, தற்போது ராகுல் காந்தி சில விசயங்களை பேசும்போது, அதை ஏன் அவர்கள் மோசமானதாக உணர்கிறார்கள். ராகுல் காந்தியின் தாத்தாவின் அப்பாவை பற்றி கூட பேசியிருக்கிறார்கள்.

    • மும்பையில் இந்திய நுழைவாயில் அருகே குப்பைகள் கொட்டப்படுவது போன்ற வீடியோ பதிவு.
    • இந்த வீடியோ தனக்கு வலியை தருகிறது என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர். சாதனைகள் செய்யும் நபர்களின் வீடியோ, உத்வேகம் அளிக்கும் வீடியோ போன்றவற்றை ஷேர் செய்து உலகிற்கு அதை வெளிக்காட்டும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி இதுபோன்று பல்வேறு வீடியோக்களை ஷேர் செய்வதால், இவரை டுவிட்டரில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் ஒருவர் பதிவிட்ட வீடியோ, இவரை காயப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரம் மும்பை. மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயில் அருகே இரு நபர்கள், சாக்குப்பைகளில் உள்ள குப்பைகளை தண்ணீரில் கொட்டுவது போன்று அந்த வீடியோ காட்சி உள்ளது.

    அந்த வீடியோவுடன் மும்பையின் சிறந்த குடிமகன்கள். இந்திய நுழைவாயில் பகுதியில் காலை நேரத்தில் எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோதான் தன்னை காயப்படுத்தியதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

    மேலும், பொதுமக்களின் அணுகுமுறை மாற்றம் அடையாவிட்டால், நகரின் சிறந்த வாழ்க்கைக்கு மனித அளவிலான எந்த கட்டமைப்பு முன்னேற்றமும் முன்னேற்றத்தை கொடுக்காது எனத் தெரிவித்ததுடன், மும்பை போலீஸ் அதிகாரி, மாநகர கவுன்சிலர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

    இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அரசு "தூய்மை இந்தியா" திட்டத்தை அறிமுகப்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக செலவிட்டு வருகிறது. அப்படி இருந்தும் இதுபோன்று குப்பைகள் கொட்டப்பட்டுதான் வருகிறது.

    • அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார்.
    • அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது.

    மும்பை:

    மும்பை செம்பூர் போஸ்டல் காலனி பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியரின் 19 வயது மகள் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். வேலை காரணமாக கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி மாணவி தங்கி இருந்த வீட்டின் அருகில் அஜித்குமார் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் மாணவி, அஜித்குமாருடன் நட்பாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அஜித்குமார் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அஜித்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். எனவே அவர் கோவண்டி பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரபாகரை(30) வீட்டுக்கு அழைத்தாா்.

    இந்தநிலையில் அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார். மாணவி அடுப்பை கொடுக்க அஜித்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் அஜித்குமார், அவரது நண்பர் பிரபாகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தனர். இதனை அறியாத மாணவி குளிர்பானத்தை குடித்து மயங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது. தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மேலும் செம்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

    இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் 8, 12-வது மாடி வீட்டில் இருந்த ஏ.சி. போன்ற மின்சாதனங்கள், வயர், நாற்காலிகள், படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின.
    • தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக குடியிருப்புவாசிகள் காயமின்றி உயிர் தப்பினா்.

    மும்பை:

    மும்பை கிரான்ட்ரோடு பகுதியில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி சாலையில் தவால்கிரி என்ற 22 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில் கட்டிடத்தின் 8 மற்றும் 12-வது மாடியில் உள்ள வீடுகளில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து கரும்புகை ஜன்னல் வழியாக வெளியேறியது.

    கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து குடியிருப்பில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் பலர் உள்ளே சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கட்டிடத்தின் 15, 21 மற்றும் 22-வது மாடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி தவித்த 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் கட்டிடத்தில் எரிந்த தீயை வீரர்கள் போராடி அணைத்தனா்.

    விபத்தில் 8, 12-வது மாடி வீட்டில் இருந்த ஏ.சி. போன்ற மின்சாதனங்கள், வயர், நாற்காலிகள், படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக குடியிருப்புவாசிகள் காயமின்றி உயிர் தப்பினா். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 22 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

    தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    • மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று.
    • ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடியான இன்னிங்சின் போது வர்ணனையாளர் ஹர்சா போக்லே பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான வடா பாவ் பற்றி நகைச்சுவையான கருத்தை கூறினார்.

    மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று. மும்பையில் உள்ள மூலைமுடுக்குகளில் எங்கும் கிடைக்கும் வடா பாவ் மும்பை மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி ஆகும். இந்நிலையில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் பற்றி பேசிய ஹர்சா போக்லே உற்சாகத்தில் 'என் வடா பாவை பிடித்து கொள்ளுங்கள்' என்று வர்ணனை செய்தார். உடனே ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர். இதனால் குறுகிய நேரத்தில் வடா பாவ் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.

    • பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    மும்பை:

    சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார்.

    1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா ராயின் தலைமையின் கீழ் சஹாரா நிறுவனம் ரியல் எஸ்டேட், மருத்துவமனை, விளையாட்டு, சினிமா, போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் கால்பதித்தது. இதனால் சுப்ரதா ராயின் வளர்ச்சி கதை பலருக்கும் வியப்பாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்த வழக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டில் அதன் சிட்பண்ட் செயல்பாடுகளின் கீழ் மக்களிடம் இருந்து எந்த டெபாசிட்களையும் பெற கூடாது என்று தடை விதித்தது. ஆனால் அதை மீறி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட்களை பெற்றது.

    இதன் மூலம் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதே போல நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்களை வழங்கியதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.17,656 கோடிக்கு அதிகமான பணத்தை விதிமுறைகளை மீறி பொது சந்தையில் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் பணத்தை வசூலித்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தவர் வீழ்ச்சியை சந்தித்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சஹாரா குழும நிறுவனங்கள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க அரசு தரப்பில் செபி-சஹாரா ரீபண்ட் என்ற பெயரில் தனியாக ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் பணிகளை தொடங்கிய வேளையில் கடந்த மார்ச் 31-ந்தேதி முடிவில் கோர்ட்டு உத்தரவின் பேரில் சஹாரா குழுமம் இந்த சிறப்பு கணக்கில் ரூ.25,163 கோடியை டெபாசிட் செய்துள்ளது.

    ரூ.25 ஆயிரம் கோடியின் நிலைமை என்ன?

    இந்நிலையில் செபி அமைப்பு சஹாரா குழுமம் தொடர்பாக 17,526 விண்ணப்பங்களுக்கு தொடர்புடைய 48,326 கணக்கில் உரிமையாளர்களுக்கு ரூ.138.07 கோடி வினியோகம் செய்துள்ளது என்றும், இதில் சுமார் 67.98 கோடி வட்டி தொகை மட்டும் என்று செபி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு இதற்காக தனியாக போர்டல் தொடங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரீபண்ட் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 112 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரீபண்ட் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    தற்போது சுப்ரதா ராய் மறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படாமல் செபி வசம் இருக்கும் இந்த தொகையின் நிலைமை என்ன என்பது மிகப்பெரிய பேசு பொருளாகி இருக்கிறது. 

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

    இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.

    முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.

    மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

    4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.

    • பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
    • நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.

    தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

    பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.

    அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.

    • உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
    • மொத்தம் 565 ரன்கள் எடுத்துள்ள அவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

    இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

    ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

    ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.

    ×