search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subrata Roy"

    • பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    மும்பை:

    சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார்.

    1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா ராயின் தலைமையின் கீழ் சஹாரா நிறுவனம் ரியல் எஸ்டேட், மருத்துவமனை, விளையாட்டு, சினிமா, போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் கால்பதித்தது. இதனால் சுப்ரதா ராயின் வளர்ச்சி கதை பலருக்கும் வியப்பாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்த வழக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டில் அதன் சிட்பண்ட் செயல்பாடுகளின் கீழ் மக்களிடம் இருந்து எந்த டெபாசிட்களையும் பெற கூடாது என்று தடை விதித்தது. ஆனால் அதை மீறி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட்களை பெற்றது.

    இதன் மூலம் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதே போல நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்களை வழங்கியதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.17,656 கோடிக்கு அதிகமான பணத்தை விதிமுறைகளை மீறி பொது சந்தையில் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் பணத்தை வசூலித்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தவர் வீழ்ச்சியை சந்தித்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சஹாரா குழும நிறுவனங்கள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க அரசு தரப்பில் செபி-சஹாரா ரீபண்ட் என்ற பெயரில் தனியாக ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் பணிகளை தொடங்கிய வேளையில் கடந்த மார்ச் 31-ந்தேதி முடிவில் கோர்ட்டு உத்தரவின் பேரில் சஹாரா குழுமம் இந்த சிறப்பு கணக்கில் ரூ.25,163 கோடியை டெபாசிட் செய்துள்ளது.

    ரூ.25 ஆயிரம் கோடியின் நிலைமை என்ன?

    இந்நிலையில் செபி அமைப்பு சஹாரா குழுமம் தொடர்பாக 17,526 விண்ணப்பங்களுக்கு தொடர்புடைய 48,326 கணக்கில் உரிமையாளர்களுக்கு ரூ.138.07 கோடி வினியோகம் செய்துள்ளது என்றும், இதில் சுமார் 67.98 கோடி வட்டி தொகை மட்டும் என்று செபி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு இதற்காக தனியாக போர்டல் தொடங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரீபண்ட் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 112 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரீபண்ட் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    தற்போது சுப்ரதா ராய் மறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படாமல் செபி வசம் இருக்கும் இந்த தொகையின் நிலைமை என்ன என்பது மிகப்பெரிய பேசு பொருளாகி இருக்கிறது. 

    ×